Published : 10 Mar 2021 03:11 am

Updated : 10 Mar 2021 09:37 am

 

Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 09:37 AM

கதை: மலைபூதம் வாய்பிளந்த மர்மம்

story
ஓவியம்: தமிழ்

செண்பகக் காட்டை ஒட்டிய மலைகளில் அரிய வகைப் பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன. நெடிந்து வளர்ந்துள்ள மரங்களையும் மலை உச்சியிலிருந்து விழும் அருவிகளையும் தூரத்திலிருந்து பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

விலங்குகள் கணக்கெடுப்பு நடத்த வனத்துறையும் உயிரின ஆர்வலர்களும் மலை ஏறி வந்தார்கள். ஜிமா, சாபிரா, தாரா ஆகியோரும் இந்தக் கணக்கெடுப்பில் கலந்துகொண்டனர். இவர்களுடன் வனவிலங்குகளை நன்கு அறிந்திருந்த வேலனும் வந்திருந்தார்.


ஆனைத்திட்டு குடியிருப்புப் பகுதியை அடைய மாலை ஆனது. குழு உறுப்பினர்கள் பலரும் களைத்திருந்தனர். மலையேற்றம் சவால் நிறைந்ததாக இருந்தது.

காட்டில் மாலைப் பொழுது வசீகரித்தது. ஜிமாவும் சாபிராவும் அருகில் உள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்க விரும்பினார்கள். குடியிருப்பை ஒட்டிய பகுதி சமதளமாக இருந்தது. நிலா வெளிச்சத்தில் சிறிது தூரம் சென்றார்கள். வழியில் கால்களுக்குக் கீழே, காய்ந்த இலைகளும் சிறு மரத்துண்டுகளும் ’சரக்...சரக்...’ என்று ஒலி எழுப்பின. அந்தச் சூழல் பயத்தை வரவழைத்தது.

“ஜிமா, காலையில் சூரியன் உதிச்ச பிறகு வரலாமே, மலை இன்னும் அழகாகத் தெரியும்” என்றார் வேலன் மாமா.

“கொஞ்ச தூரம் போயிட்டுத் திரும்பிடுவோம் மாமா” என்று அவரைச் சமாதானம் செய்தாள் ஜிமா.

அதே நேரத்தில், ’க்வாஆஆஆ...ட்வீஈஈஈஈஈ... ஹுஹு... பக்!’ என்று தொடர்ந்து கேட்ட சத்தம் காதுகளைத் துளைத்தது. அச்சத்தை வரவழைத்தது. குளிரில் உடல் சிலிர்த்தது. பறவைகள் கூடி, காட்டுக்குள் வர எதிர்ப்புத் தெரிவிப்பது மாதிரி இருந்தது. வேலன் மாமாவுக்கு உண்மை புரிந்தது.

“யாரும் பயப்பட வேண்டாம். இது, துடுப்புவால் கரிச்சான் குருவியோட குறும்பு. அந்தக் குருவிக்கு வெவ்வேறு பறவைகளைப் போல ஒலி எழுப்பத் தெரியும்” என்றார் வேலன் மாமா.

“ஒரு சின்ன குருவி ‘மிமிக்கிரி’ செஞ்சு நம்மை எல்லாம் பயமுறுத்தப் பார்க்குது” என்றாள் சாபிரா. உடனே சிரிப்பொலி எழுந்தது. வேலன் மாமா துணை இல்லாமல், சிறிது தூரம் நடந்து சென்றார்கள்.

பறவைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே மூவரும் ஒரு செம்மண் மேட்டை அடைந்தார்கள். அந்தப் பகுதியில் செடிகொடிகள் எதுவும் வளரவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள் சாபிரா. ஆபத்தான பகுதியாகத் தெரிந்தது. வனவிலங்குகள் வந்தால் உயிர் பிழைப்பது கடினம். ஓடி ஒளிந்துகொள்ள முடியாது. எதிர்த்து நிற்கவும் இயலாது. பயம் அதிகரித்தது.

திடீரென்று எதிரில் ஒரு மலைபூதம் வாயைப் பிளந்திருந்தது. உண்மையில் மலைபூதம் இருக்கிறதா? தீயவர்களை விழுங்கும் மலைபூதங்களைப் பற்றி, ஜிமா நாடோடிக் கதைகளில் படித்திருந்தாள். தாராவுக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. உடல் நடுங்கியது.

சட்டென்று பூதத்தின் வாயில் இருந்து குதித்த ஒரு குரங்கு, எதிர்த் திசையில் ஓடி மறைந்தது. பறவைகள் படபடத்து வெளியேறின.

“ஜிமா, திரும்பிப் போயிடலாம். பூதத்தோட வாயைப் பார்த்தியா? நாம மூணு பேரையும் சேர்த்து ஒரே வாயிலே லபக்னு விழுங்கிடும் போலிருக்கு. சீக்கிரம் கிளம்புவோம்” என்று அவசரப்படுத்தினாள் தாரா.

இருள் சூழ்ந்திருந்தது. தாராவைப் போல ஜிமாவுக்குப் பயம் இல்லை. இருந்தாலும் வெகுநேரம் அந்த மேட்டுப் பகுதியில் நின்று வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. சட்டென்று திரும்பி ஓடத்தொடங்கியவர்களை, அங்கு வந்து சேர்ந்த வேலன் மாமா தடுத்து நிறுத்தினார்.

“உங்களைத் தொடர்ந்து நானும் வந்தேன். பயப்பட வேணாம். நாம இங்கிருந்து திரும்பிப் போயிடலாம். பூதம் பத்தி நடந்துட்டே பேசுவோம்” என்று வேலன் மாமா சொன்னதும் மூவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க ஆவலோடு காத்திருந்தார்கள்.

சிறிது தூரம் நடந்த பிறகு வேலன் பேச ஆரம்பித்தார்: “மலைபூதம் இருக்குன்னு சொல்றது எல்லாம் கட்டுக்கதை. மலைபூதமும் இல்லை, பிசாசும் இல்லை. அந்த இடம், உவர்மண் திட்டு. இயற்கையாக அமைந்த உவர்மண் திட்டில், உப்பும் தாதுக்களும் கலந்திருக்கு. பூதத்தின் வாய்ப் பகுதின்னு நீங்க நெனைக்கிறது ஒரு மாயை. காட்டில் வாழற யானைகள், உவர்மண் திட்டில் மண்ணைத் தோண்டி உப்பைச் சாப்பிட்டுவிட்டு, மிச்சம் வைத்த பகுதி. அது இப்போ குகை போல மாறிப் போயிருக்கு. அதுதான் பூதத்தின் வாய்போலத் தெரிந்திருக்கும்” என்றார்.

“மாமா, ஏன் அதன் வாயிலிருந்து குரங்கும் பறவைகளும் வெளியேறின?” என்று கேட்டாள் தாரா.

“காட்டு யானைகள் உவர்மண்ணைச் சாப்பிட்டுப் போன பிறகு உருவாகும் சின்னச்சின்னக் குகைகள், சிறு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வாழ்விடமாக மாறிவிட்டது.”

வேலன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும். ஆனால், ‘ஏனிந்த யானைகள் உப்பைச் சாப்பிட வேண்டும்?’ என்ற கேள்வி ஜிமா, சாபிரா, தாரா மனங்களில் சந்தேகத்தை எழுப்பின. அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் குடியிருப்புப் பகுதியை அடைந்தார்கள்.

“யானைகள் ஏன் உப்பு சாப்பிடுதுன்னு கேட்கறீங்களா? அது மண் டாக்டர் சொல்லித் தரும் இயற்கை மருத்துவம். காட்டு விலங்குகளுக்குத் தொற்றுநோய், குடல் ஒவ்வாமை, குடல் புழுக்கள் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடுன்னு உடல் சார்ந்த பிரச்சினைகள் வரும். அப்போது என்ன செய்யும்? விலங்குகளுக்கு மருத்துவர் கிடையாதே?”

“அதுங்களே வைத்தியம் பார்த்துக்குமா மாமா?’

“உவர்மண் திட்டில் கலந்துள்ள உப்பில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப்பொருட்கள் அதிகமாக இருக்கு. காட்டு விலங்குகள் உவர்மண்ணைச் சாப்பிட்டு, வைத்தியம் பார்த்துக்கொள்கின்றன. உயிர்காத்துக்கொள்கின்றன” என்று விளக்கினார் வேலன்.

ஜிமா, சாபிரா, தாரா மனங்களில் மலைபூதம் மறைந்து, உவர்மண் குகை காட்சியளித்தது. இயற்கை அமைத்துக் கொடுத்துள்ள உயிர்காக்கும் வழிகளை எண்ணி, மூவரும் பெருமிதம் கொண்டார்கள். ஆச்சரியத்தில் திளைத்தார்கள்.

அதேநேரத்தில், ஒரு வனத்துறை வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்து இறங்கி வந்த அதிகாரி, வாகனத்தில் வைத்திருந்த சாக்குப் பைகளைக் காண்பித்தார்.“இவை எல்லாம் வெவ்வேறு விகிதத்தில் கனிமங்களும் தாதுக்களும் சேர்த்துத் தயாரித்த உப்புத் தொகுப்புகள். விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் குட்டைகளுக்கு அருகில், ஆற்றோரத்தில் உப்புத் தொகுப்புகளை வைத்துவிடுவோம். இதற்கு ‘உப்புத் தூவுதல்’னு பெயர். காட்டுயிர்களைக் காக்க வனத்துறையும் உயிரியல் ஆர்வலர்களும் இணைந்து இந்தப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்” என்றார்.

மூவரும் வாயடைத்துப் போனார்கள். மலைபூதம் வாய்பிளந்த மர்மம் விலகி, உண்மை தெளிவாகப் புரிந்தது. அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அலைபேசியை அழுத்தி, காட்டுயிர்ப் பாதுகாப்புக் குழுவில் மூவரையும் உறுப்பினார்களாகச் சேர்த்தார் வனக்காப்பாளர்.

உறங்கச் செல்வதற்கு முன்னர் மூவரும், அலைபேசியில் ‘காட்டுயிர்க் காவலர்’ உறுப்பினர் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொண்டார்கள். தொலைவில் இருந்து கேட்ட யானையின் பிளிறல் மீண்டும் மலைபூதத்தை நினைவுபடுத்தியது.Storyமலைபூதம் வாய்பிளந்த மர்மம்கதை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x