Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பங்குச் சந்தையில் பொருள்கள் வாங்க முடியுமா?

பங்குச் சந்தை என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது, டிங்கு?

- ர. புத்த பிரவீன், 8-ம் வகுப்பு, எஸ். ஆர். வி பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

பங்குச் சந்தையில் நாம் பொருள்களை வாங்க முடியுமா?

- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி, கிருஷ்ணகிரி.

சந்தை என்றாலே பொருள்களை வாங்கவும் விற்கவும் கூடிய இடம்தான். ஆனால், பங்குச் சந்தையில் பொருள்களை வாங்கவோ விற்கவோ முடியாது. பங்குகளைத்தான் வாங்கி, விற்க முடியும், இனியா. பங்குகளை வாங்கவோ விற்கவோ மனிதர்கள் நேரடியாகச் செல்ல வேண்டியதும் இல்லை. ஆன்லைன் மூலமாகவோ முகவர்கள் மூலமாகவோ பங்குகளை வாங்கலாம், விற்கலாம். சரி, பங்கு என்றால் என்ன? நாம் ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதற்குப் பணம் (மூலதனம்) தேவை. நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து சிறிய அளவில் தொழிலை ஆரம்பித்துவிடலாம். கொஞ்சம் பெரிய தொழில் என்றால் வங்கியில் கடன் வாங்கி, ஆரம்பிக்கலாம். மிகப் பெரிய தொழில் என்றால் நம்மிடமும் பணம் இருக்காது, வங்கியிலும் கடன் கிடைக்காது. அப்படிப்பட்ட சூழலில் பொதுமக்களிடமிருந்து பணத்தைத் (மூலதனம்) திரட்டலாம். இப்படித் திரட்டுவதால் நமக்குத் தொழில் ஆரம்பிப்பதற்கான பணம் கிடைத்துவிடும். பணம் போட்டவர்களுக்கு என்ன லாபம்? அவர்கள் அனைவரும் நம் தொழில் நிறுவனத்தில் முதலீட்டாளர்களாகிவிடுவார்கள். நமக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டால், ஒரு பங்கின் விலை 10 ரூபாயாக நிர்ணயித்து, 10 லட்சம் பங்குகளை விற்கலாம். பொதுமக்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பணம் கொடுத்து, பங்குகளை வாங்கிக்கொள்வார்கள். இவர்கள் அனைவரும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாகிவிடுவார்கள். இதற்குப் பிறகு இது நம் தனிப்பட்ட நிறுவனம் அல்ல. பங்குதாரர்களின் நிறுவனம். தொழில் சிறப்பாக நடைபெற்றால், பங்குகளின் விலை கூடும். அப்போது பங்குதாரர்கள் பங்குகளை விற்பனை செய்தால், லாபம் கிடைக்கும், புத்த பிரவீன்.

காலை வெயில் கழுதைக்கும் மாலை வெயில் மனிதருக்கும் நல்லது என்று சொல்கிறார்களே, உண்மையா டிங்கு?

- ஆர். ஜெயந்தி, 7-ம் வகுப்பு, சாரதா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, மதுரை.

காலை வெயில் கழுதைக்கு நல்லதா என்று தெரியவில்லை. ஆனால், மாலை வெயில் மட்டுமல்ல, காலை வெயிலும் மனிதர்களுக்கு நல்லதுதான் ஜெயந்தி. காலையிலும் மாலையிலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது. அப்போது நம் தோல் மீது வெயில் பட்டால், வைட்டமின் டி கிடைக்கும். நண்பகலில் வெயில் அதிகம் இருப்பதால், தோல் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதனால் அப்போது வெயிலில் நிற்கக் கூடாது என்கிறார்கள், ஜெயந்தி.

ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் நீண்ட பகல் இருக்கும் என்பது உண்மையா, டிங்கு?

- தா. லோகேஸ்வரி, 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

உண்மைதான் லோகேஸ்வரி. நீண்ட பகல் மட்டுமல்ல, ஆண்டுக்கு ஒரு முறை நீண்ட இரவும் உண்டு. சூரியனின் ஒளி திசை மாறும்போது, பூமியில் சற்றுச் சாய்வாக விழுகிறது. பூமியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் தெற்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் இருக்கும்போது, நீண்ட பகல் உருவாகிறது. இது ஜூன் 21 அன்று நிகழ்கிறது. டிசம்பர் 21 அன்று நீண்ட இரவு உருவாகிறது. அப்போது வடக்கு அரைக்கோளம் சூரியனை விட்டு விலகியும் தெற்கு அரைக்கோளம் சூரியனை நோக்கியும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x