Last Updated : 18 Nov, 2015 12:15 PM

 

Published : 18 Nov 2015 12:15 PM
Last Updated : 18 Nov 2015 12:15 PM

சித்திரக்கதை: பசி எடுக்காத வெள்ளரி

ஒரு காட்டில் ஒட்டகமும் நரியும் வசித்து வந்தன.

அந்தக் காட்டின் ஓரமாய் ஏரியொன்று இருந்தது. அந்த ஏரிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய வெள்ளரித் தோட்டமும் இருந்தது. அதில்,ஏராளமான வெள்ளரிக் காய்கள் காய்த்துத் தொங்கின.

அதைப் பார்த்த நரிக்கு, நாக்கில் எச்சில் ஊறியது. அந்தத் தோட்டத்தில் புகுந்து எப்படியாவது வெள்ளரிக் காய்களைத் தின்றுவிட ஆசைப்பட்டது நரி.

ஏரியைக் கடந்துதானே தோட்டத்துக்குப் போக வேண்டும். நரிக்கோ நீச்சல் தெரியாது. என்ன செய்வது?

நரி யோசித்தது.

ஒட்டகத்தின் அருகில் போனது.

“ம்ம்ம்… நாம நல்லதைச் சொன்னா, இங்கே யாரு கேட்கிறா…?” என்று புலம்பியது நரி.

“நீ என்ன சொன்னே, யாரு கேட்கலே..?” என்றது ஒட்டகம்.

“தினமும் பசிக்காக இரை தேடி அலையிறது ஒரு பொழப்பா…?” ஒட்டகம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், இன்னொரு கேள்வியைக் கேட்டது நரி.

“தினமும் பசிச்சா, சாப்பிட்டுத்தானே ஆகணும். அதுக்குப் போயி அலுத்துக்கலாமா…?” என்றது ஒட்டகம்.

“ஒரே ஒருமுறை சாப்பிட்டா, காலத்தும் பசிக்காத மாதிரி ஏதாவது சாப்பாடு இருந்தா நல்லா இருக்கும்தானே…!” என்றது நரி.

“நல்லாத்தான் இருக்கும். அப்படியொரு ஒரு பொருள் எங்கேயிருக்கு..?” பதிலுக்கு ஒட்டகம் கேட்டதும்,

“இங்கேதான் பக்கத்திலேயே இருக்கு…!” ரகசியமான குரலில் நரி சொன்னது.

குழப்பத்தோடு நரியை உற்றுப் பார்த்தது ஒட்டகம்.

“நான் ஒண்ணும் பொய் சொல்லலே. உண்மையத்தான் சொல்றேன். ஏரிக்குப் பக்கத்திலே ஒரு தோட்டம் இருக்கில்ல. அதில விளையிற வெள்ளரிக் காயை ஒருமுறை தின்னா, அப்புறம் ஆயுசுக்கும் பசியே எடுக்காதாம்…” என்று சொன்னது நரி.

“அப்படியா…?” என வியந்துபோய் அப்பாவியாகக் கேட்டது ஒட்டகம்.

“ஆமா, இது யாருக்கும் தெரியாத ரகசியம். உன் மேல நம்பிக்கை வச்சு உனக்கிட்டே மட்டும்தான் சொல்றேன். நீ மட்டும் உதவி செஞ்சா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் சாப்பிடலாம்…” என்றது நரி.

இப்போது ஒட்டகத்துக்கும் ஆசை வந்துவிட்டது.

‘இதுதான் சரியான சமயம்’என்று முடிவெடுத்த நரி,”நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். இந்த ஏரியைக் கடந்து அந்தப் பக்கம் மட்டும் என்னைக்கொண்டு போயி விட்டுடு, அது போதும்…” என்றது.

ஒட்டகமும் சம்மதித்தது. நரியை தன் முதுகில் ஏற்றிக்கொண்டது. ஏரியைக் கடந்து மறுகரையில் நரியை இறக்கிவிட்டது.

ஒரே குதி குதித்து வெள்ளரித் தோட்டத்துக்குள் புகுந்தது நரி. வெள்ளரிக் காய்களை வெளுத்துக் கட்டியது.

ஒட்டகத்துக்கும் நாக்கில் எச்சில் ஊற,மெதுவாகத் தோட்டத்துக்குள் போனது. வெள்ளரிக் காயொன்றைப் பறித்து ருசித்துச் சாப்பிட்டது.

நிறைய வெள்ளரிக் காய்களைத் தின்றதில், நரிக்கு வயிறு பெரிதாகிவிட்டது. மண்ணில் விழுந்து புரண்டது. வானத்தைப் பார்த்து தலையைத் தூக்கியது.

“ஊவ்…ஊவ்வ்…ஊவ்வ்வ்…” என பெரிதாய் நரி ஊளையிட்டது.

ஊளைச் சத்தம் எங்கும் பலமாக எதிரொலித்தது. அது தோட்டக்காரன் காதிலும் விழுந்தது.

ஒரு பெரிய உருட்டுக் கட்டையை எடுத்தபடி, ஓடி வந்தான் தோட்டக்காரன். இதைப் பார்த்த நரி, பயந்துபோய் வேகமாக ஓட்டமெடுத்தது. ஒட்டகத்தால் வேகமாக, ஓட முடியவில்லை.

தோட்டக்காரன் கோபமாகி ஒட்டகத்தை நோக்கி உருட்டுக் கட்டையை வீசினான். ஒட்டகத்தின் பின்னங்கால் ஒன்றை உருட்டுக் கட்டை தாக்கியது.

“யம்மா…!” நல்ல அடி. வலி பொறுக்க முடியவில்லை. தோட்டக்காரன் கையில் மாட்டிவிடக் கூடாதென்று வலியைப் பொறுத்துக்கொண்டே ஓடிய ஒட்டகம், ஏரியில் இறங்கியது.

கரையோரமாகப் பதுங்கி நின்ற நரி, வேகமாகத் தாவி ஒட்டகத்தின் முதுகில் ஏறிக் கொண்டது.

“என்ன காலில் அடிபட்டிருச்சா…?” என்று ஒட்டகத்திடம் நக்கலாகக் கேட்டது நரி.

கோபத்தில் பதில் எதுவும் சொல்லாத ஒட்டகம், "இப்படி ஊளையிட்டுத் தோட்டக்காரனை வர வச்சிட்டீயே…!” என்று வருத்தத்துடன் கேட்டது.

“ஓ…அதுவா…? எனக்கு எப்பவுமே வயிறு ரொம்புச்சுன்னா சந்தோஷத்தில இப்படித்தான் ஊளையிடுவேன். பரவாயில்லை, அதான் தப்பிச்சு வந்துட்டோம்ல. ஏரி தண்ணியில நடந்தா, கால் வலி குறைஞ்சிடும். கொஞ்சம் சீக்கிரம் போ..!”என்றது நரி.



“ஆமாமா, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஏதாவதொரு பழக்கம் இருக்குது. எனக்கும்கூட ரொம்ப நாளா விடமுடியாத பழக்கம் ஒண்ணு இருக்குது…!” என்றபடி ஏரியின் நடுவில் நின்றது ஒட்டகம்.

“அப்படி உனக்கென்ன பழக்கம் இருக்கு…?” என்று நரி கேட்டது.

“வேறொண்ணுமில்லே. ஏதாவது ஒரு கால்ல அடிபட்டா, பக்கத்தில இருக்கிற இன்னொரு காலையும் ஊன்றி நடக்க மாட்டான்…!” என்று ஒட்டகம் சொல்ல, ஒன்றும் புரியாமல் முழித்தது நரி.

ஒட்டகம் சட்டென தனது பின்னங்கால் இரண்டையும் அப்படியே ’அலாக்’காக மேலே தூக்கியது. ஒட்டகத்தின் முதுகில் ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்த நரி, அப்படியே தலைகுப்புற ஏரியில் விழுந்தது.

நீச்சல் தெரியாத நரியை ஏரித் தண்ணீர் அப்படியே அடித்துக்கொண்டு போனது.

“நீதான் பசியே எடுக்காத வெள்ளரிக் காயை சாப்பிட்டு இருக்கேல்ல. இனி,உனக்கு பசியே எடுக்காது…போ…!” என்றபடி கால் வலியோடு கரையேறியது ஒட்டகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x