என்னைச் செதுக்கிய மாணவர்கள்: சதுரங்க வாத்தியார் சக்ரவர்த்தி

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: சதுரங்க வாத்தியார் சக்ரவர்த்தி
Updated on
4 min read

மனப்பாடக் கல்வியில் சிந்திக்கும் வேலையே இல்லை. பிறகு, சிந்தனையைப் பற்றிச் சிந்திக்கும் திறன் படைத்த ஒரு மாணவரின் நிலை என்ன ஆகும்?

- கமலா வி. முகுந்தா

(‘குழந்தைகள் விரும்பும் பள்ளி’ எனும் நூலின் ஆசிரியர்)

உடல் ஊனமுற்றவர் எனும் வன்சொல்லை நீக்கிவிட்டோம். மாற்றுத் திறனாளிகள் என்று சட்டப்படி மாற்றிவிட்டோம். பள்ளிக்கூடங்களில் அவர்களுக்கு எந்த தனிச் சலுகையும் கிடையாது. ஒருவேளை அப்படிப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு தேர்வில் ஏதேனும் சிறப்புச் சலுகை வேண்டுமாயின் அதைப் பெறுவதற்குள் அவர் படுகின்ற பாடுகள் வார்த்தையில் அடங்காதவை.

அவர்களில் தனித்திறன் படைத்தவர்களும், நிபுணத்துவம் பெற்றவர்களும், எவ்வளவுதான் தங்களை நிருபித்தாலும் பொறியியலிலோ மருத்துவத்திலோ சட்டப்படிப்பிலோ அவர்களுக்கு இடம்கிடைப்பது சிரமம்தான். அரசியல்வாதிகளும் நடிகர்களும் ஊடகங்களில் வருவதற்காகச் செய்யும் தான தர்மங்களால் மட்டுமேதான் கை மிதிவண்டிகளும், சக்கர நாற்காலிகளும் கிடைக்குமோ என்பதாக அவர்களின் நிலை ஆகிவிட்டது. இத்தகைய நிலையிலிருந்து தனது அற்புதங்கள் மூலம் என் சிந்தனையைத் தூண்டியவர்தான் சக்கரவர்த்தி. செஸ் விளையாட்டில் சூரர்.

செஸ் பாடம்

பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக செஸ் விளையாட்டு இருக்க வேண்டும் என்பது உலகின் 57 நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என ஜுனியஸ் க்வாஸன்ட் எனும் சர்வதேச அமைப்பின் 2014 ம் ஆண்டறிக்கை கூறுகிறது. கல்வியில் மன ஓட்ட விரிவாக்கமும் சிந்தனையைக் கட்டுப்படுத்தலும் குழந்தைகளுக்குச் சாத்தியமாக மன-வரைபடம் (Mind Mapping) தேவை என்பது சமீபகாலமாக முன்வைக்கப்படுகிறது.

- டோனி பியுஸன்

அதனை உளவியலின் கல்விக்கோட்பாடாக முன்வைத்தவர் இங்கிலாந்தின் கல்வியாளர் டோனி பியுஸன். இந்தக் கோட்பாட்டை வளர்த்தெடுக்க செஸ் விளையாட்டு ஒரு பிரதான வழி என்கிறார் டோனி பியுஸன்.

மனதின் வரைபடம்

பார்வைத் திறனற்ற குழந்தையொன்று தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை, தான் கேட்கிற ஓசைகள் மற்றும் தொட்டுணரும் விஷயங்களின் வழியாக மன வரைபடமாகக் கட்டமைக்கிறது. பாடத்திட்டத்தில் தான் முன்பின் உணராத ஒரு உலகைக் கற்கும் குழந்தை அதனை கிரகித்து உணர்கிறது. இரண்டுவிதமான முறைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என நிரூபித்தவர் பியுஸன். இரண்டுக்குமே தேவைப்படுவது சிந்தனை பற்றிய சிந்திப்புத் திறன் என்பது அவரது வாதம்.

மரக்கிளை மன வரைபடம், வண்ணங்களின் பிரதிநிதித்துவ மன வரைபடம், பளிச்சிடும் புள்ளி மனவரைபடம் என அவர் அவற்றைத் தரம் பிரிக்கவும் செய்தார். மிகவும் சிக்கலான நீண்ட கருத்துக் குவியல்களை மன வரைபடமாக்கிக் குழந்தைகள் கற்கும்போது அவற்றைத் தமதாக்கி நிரந்தர அறிவுடன் இணைக்கிறார்கள். ஆனால், செஸ் விளையாட்டின் வழியே அதனை அடைவது மிகவும் ஆச்சரியமான பலன்களைத் தருகிறது என்று எனக்குக் காட்டியவர்தான் சக்ரவர்த்தி.

சக்கர நாற்காலி சக்ரவர்த்தி

போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வு இல்லாத அந்த நாளில் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, அதனால் சக்கர நாற்காலிவாசியானவர் சக்ரவர்த்தி. நான் வேலை பார்க்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பில் அறிமுகமானார். இத்தகைய மாற்றுத் திறனாளிகளுக்குப் பொருத்தமான முறையில் நமது பள்ளிக் கட்டிடங்கள் வடிவமைக்கப் படுவதில்லை.

எல்லாக் குழந்தைகள் தோளிலும் சுமையாகக் கனக்கும் புத்தக மூட்டை சக்ரவர்த்திக்கு ஒரு கூடுதல் தண்டனை. வீட்டுப் பாட நோட்டை ஆசிரியரின் மேசையில் வைப்பதுகூட இத்தகைய குழந்தைகளுக்கு ஒரு சவால்தான். கழிவறை செல்ல சக்ரவர்த்தி படும் அவஸ்தைகள் என்னை பலமுறை வேதனைப்படுத்தும்.

புயல் அறிவிப்புக்குப் பிறகான ஒரு அவசரமான மாலை நேரம். பள்ளியே காலியாகிவிட்டது. மழைத் தூறலுக்கு நடுவே கை பெடல் சைக்கிளை அழுத்தியபடி காற்றை எதிர்த்து அவர் ஊர்ந்துவருகிறார். அவரது பையிலிருந்து சிதறிய பொருட்களை வேகமாகப் பொறுக்கினேன். அவை செஸ் காய்கள்! “சாரி சார். இதெல்லாம் ஸ்கூலுக்கு எடுத்து வரக் கூடாது. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க” என்கிறார். நான் அவரது தோளைத் தொடுகிறேன். “ நீ செஸ் ஆடுவியா?” என்று நான் கேட்டேன். அவ்வளவுதான் அந்த நொடியில் நாங்கள் நண்பர்கள் ஆனோம்.

கற்பனையில் செஸ்

சக ஆசிரியர்கள், மற்ற மாணவர்களின். முறைப்பு, முணுமுணுப்பு, ஏளனம், எச்சரிக்கை என எல்லாவற்றையும் கடந்து ராஜா, ராணி, பிஷப், குதிரை, கோட்டை, செக் என்று எங்களது உலகமே மாறிவிட்டது.

உண்மையில், என்னால் சக்ரவர்த்தியை ஒருமுறைகூட செஸ் விளையாட்டில் வெல்ல முடிந்ததே இல்லை. அந்த விஷயத்தில் அவர் ஒரு அற்புதம். சனிக்கிழமை அரை நாள் விடுமுறை, மழையால் விடப்பட்ட திடீர் விடுமுறைகள் என்று எங்களது விளையாட்டு மணிக்கணக்கில் நடக்கும்.

மூன்று, நான்கு விளையாட்டுகளுக்கு ஒருமுறை நான் ஜெயிப்பதற்கு (பிழைச்சுப் போங்க சார்!) சக்ரவர்த்தி என்னை அனுமதிப்பார். எனக்கும் சுவாரஸ்யம் போய்விடக் கூடாது அல்லவா! அந்த நாட்களில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் மிகவும் குறைவு. அவர் மாதிரியான மாற்றுத்திறனாளிகளை அனுப்பவும் மாட்டார்கள். எனவே, அவரது செஸ் சகா நான் மட்டுமே.

படிப்பில் கணக்குப் பாடத்தில் சக்ரவர்த்தி மிகவும் திணறுவார். நான் அமைதியாக அவரிடம் இருந்த பலவீனத்தைப் பரிசீலித்தேன். உணவுக்கே கஷ்டப்படும் குடும்பச் சூழல். உடல் ஊனமும் சேர்ந்து, ஏறத்தாழக் கைவிடப்பட்ட வாழ்க்கை.

எங்கள் செஸ் விளையாட்டின் அடுத்த கட்டமாக, நாங்கள் செஸ் விளையாட செஸ் அட்டையோ காய்களோ தேவைப்படவில்லை. எங்களது மனக்காட்சியில் இந்த இந்த காய்கள் இந்த இந்த இடத்தில் உள்ளன என்று மன-வரைபடமாகவே செஸ் விளையாட என்னைப் பழக்கினார் சக்ரவர்த்தி! ஒருவரோடு ஒருவர் கண்மூடி உரையாடுவோம்.

‘‘குதிரை 13- ம் கட்டம்’’என்பேன். “சிப்பாய் வைச்சு செக் சார்’’ என்பார் அவர். எங்களின் பிரமை பிடித்த நிலை பலரை அதிர வைத்திருக்கும். இதுதான் மன வரைபட முறையாக்கம்! இது அவ்வளவு எளிதாக சக்ரவர்த்தி மூலம் எனக்கு சாத்தியமாயிற்று! அதைவிட அற்புதமானது அவரது செஸ் காய்கள் பற்றிய சித்தாந்தம். விளையாட்டு வீரர் விளையாட்டின் அங்கம் ஆவது என்கிறார்களே அது இப்படித்தான்.

செஸ்ஸும் பள்ளியும்

செஸ் விளையாட்டில் சக்ரவர்த்திக்குப் பிடித்தது சாதாரணமானதாகக் கருதப்படும் சிப்பாய் காய்களைத்தான். “ராஜா, ராணிக்கும் பிஷப்புக்கும், ஏன் குதிரைக்கும்கூட பவர் உண்டு. ஆனால், சாதாரண சிப்பாய்க்கு எந்த பவரும் இல்லை என்பதாக செஸ் விளையாட்டு இருக்கிறது. ஆனால், சிப்பாய் மட்டும் யாராக வேண்டுமானாலும் மாற முடியும். மற்றவர்கள் யாருமே தாங்களாகவேதான் இருக்க முடியும். ஒரு சிப்பாய் ஏழே நகர்வில் ராஜாவாகக் கூட ஆகும் சாத்தியம் உண்டு’’ என்று சொல்வார்.

‘செஸ் அட்டை சாதாரண சிப்பாய்களுக்காகத்தான். பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் இருக்கிறார். ஆசிரியர்கள், பணியாளர்கள் இருக்கின்றனர். இவர்களெல்லாம் இருந்துவிட்டால் அதற்குப் பெயர் பள்ளியா? மாணவர்கள் இருந்தால்தானே அது பள்ளி. பணியாளர், ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஏன் கல்வித்துறை மேலதிகாரி என யாராக வேண்டுமானாலும் ஒரு மாணவரால் ஆக முடியுமே!’ என்று பள்ளியையும் செஸ் விளையாட்டையும் ஒப்பிட்டு எனக்குப் புதிய வெளிச்சம் அவர் காட்டினார்.

அவர் பத்தாம் வகுப்பு படித்தபோது அரையாண்டு விடுமுறைக்குப் பின் பள்ளி வரவில்லை. பதற்றத்தோடு விசாரித்தேன். விடுமுறையில் கடும் காய்ச்சலோடு போராடித் தோற்று நிரந்தரமாய்ப் பிரிந்துவிட்டார் என்றார்கள்.

அந்த அதிர்ச்சியிலிருந்து இன்றுவரை நான் மீளவில்லை. அந்த சதுரங்கச் சக்ரவர்த்தி எனது மன-வரைபடமாக எனக்குள்ளேயே பதிந்துவிட்டார். அதன்பிறகு நான் செஸ் ஆடுவதே இல்லை.

- ஆர்.ராஜேஷ், சிதம்பரம்

எதிரொலி - அன்பான சாருக்கு சல்யூட்

அன்புள்ள சார், நான் உங்களின் மாணவன் ஆர்.ராஜேஷ். என்னைச் செதுக்கிய மாணவர்கள் தொடரைத் தவறாமல் படிக்கிறேன். கடந்த வாரத்தில் என்னைப் பற்றிய கட்டுரை வெளியானது உண்மையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது எனக்கு ஒரு கவுரவம்.

25 வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களை அப்படியே கண் முன் கொண்டுவந்துவிட்டீர்கள். உங்களின் ஞாபக சக்தி ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் எப்போதும் தைரியமானவர். நமது கல்விமுறையை விமர்சிப்பதில் இந்தத் தடவை நீங்கள் தேர்வு செய்துள்ள பாணி மிகவும் அற்புதம். எல்லா மாணவர்களையும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். அதே நேரத்தில் முக்கியமான கல்விப் பிரச்சினைகளை அதில் இணைக்கிறீர்கள்.

நான் விமானப் படையில் இருப்பதாக எழுதியிருந்தீர்கள். தற்போது நான் 19 வருடச் சேவையை முடித்த மூத்த விமானப் படைவீரன். சாதி, மதம், கடந்த முறையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களிடம் கலந்து பழகிவிட்டு திரும்பிவிட்டேன். தற்போது ஒரு வங்கியில் பணியாற்றுகிறேன். எனது பள்ளி நாட்களில் நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. என் போன்றோருக்கு இன்னும் நீங்கள் உத்வேகமூட்டும் சக்தியாக இருக்கிறீர்கள். என் அன்பான சாருக்கு மீண்டும் ஒரு சல்யூட்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

ஓவியம்: வெங்கி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in