Published : 03 Mar 2021 03:23 am

Updated : 03 Mar 2021 12:50 pm

 

Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 12:50 PM

மாய உலகம்!: என் பெயர் சிப்கோ

maya-ulagam
ஓவியம்: லலிதா

தொப்பென்று மரக்கிளையிலிருந்து குதித்த சிறுமி திரும்பிப் பார்க்காமல் ஓடத் தொடங்கினாள். ஓடும்போதே அவளுக்குத் தோன்றியது. புலியோ சிறுத்தையோ நெருங்கி வரும்போதுகூட இப்படி ஓடியதில்லை நான். என்னைவிடவும் பெரிய பாம்பு என் காலை உரசியபடி ஊர்ந்து சென்றபோதுகூட இவ்வளவு நடுங்கியதில்லை நான். அச்சமல்ல, அச்சத்தின் நிழலைக்கூட இதுவரை இந்தக் காட்டில் நான் உணர்ந்ததில்லை. ஆனால், இந்த அந்நிய மனிதர்களை மட்டும் தொலைவில் காணும்போதே ஏன் நொறுங்கிவிடும் அளவுக்கு இதயம் இவ்வளவு வலிக்க வேண்டும்?

தோட்டத்திலும் வீட்டிலும் வயலிலும் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள், சிறுமியைக் கண்டதும் ஓடிவந்தார்கள். “என்ன குட்டி, என்னாச்சு?” உஸ்புஸ் என்று சில விநாடிகள் மூச்சிரைத்த பிறகு, சிறுமி தன் கைகளைத் தொலைவில் காட்டியபடி சொன்னாள்: "நாம் அஞ்சியபடி அவர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள். இந்த முறை என்னென்னவோ ஆயுதம் எல்லாம் தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள்.”


“ஐயோ, இப்போது என்ன செய்வது? இந்த நேரம் பார்த்தா ஊரிலுள்ள ஆண்கள் எல்லாம் வெளியே வேலைக்குப் போக வேண்டும்? பெண்களாகிய நாம் மட்டும் என்ன செய்யப் போகிறோம்? எவ்வளவு கெஞ்சினாலும் அவர்கள் கேட்கமாட்டார்களே! இந்த முறை பேசக்கூட முடியாது. ஆயுதம் எல்லாம் எடுத்து வந்துவிட்டார்களாமே” என்று கலங்கினார் ஒரு பெண். பலருடைய கண்களில் நீர் பொத்துக்கொண்டு பெருக ஆரம்பித்தது. அவ்வளவுதான், எல்லாம் முடிந்துவிட்டது என்று பொக்கை வாய் பாட்டி வாய்விட்டுக் கதறினார்.

பாட்டியின் நடுங்கும் விரல்களைப் பற்றிக்கொண்டாள் சிறுமி. அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் பாட்டி? எங்கோ கண்காணாமல் இருக்கும் நம்மை ஏன் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறார்கள்? மரங்கள்மீது ஏன் அவர்களுக்கு இவ்வளவு கோபம்? எவ்வளவோ முறை சொல்லிவிட்டோம். கத்திப் பார்த்துவிட்டோம், கெஞ்சிக்கேட்டுவிட்டோம், அழுது புரண்டுவிட்டோம். வேறு என்னதான் செய்வதாம்?

நகரமாம் நகரம்! ஒரு மரத்தை வெட்டுவது பெரும் பாவம் என்பதைக்கூடவா இவர்களுக்கு இதுவரை யாரும் சொல்லித் தந்ததில்லை! வா, வா என்று தன்னிடமுள்ள எல்லாக் கரங்களையும் நீட்டி வாய்விட்டு நம்மை அழைக்கும் ஒரு மரத்தைக் கனவிலும் யாராவது காயப்படுத்தத் துணிவார்களா? ஒரு பறவையோ விலங்கோ மரத்தைக் காயப்படுத்தி இதுவரை பார்த்திருக்கிறீர்களா? நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மைக் குனிந்து பார்க்கும் மரம் நம்மைப் பற்றி என்ன நினைத்துக்கொள்ளும்?

மரத்துக்கு உயிரா இருக்கிறது, அதற்கு வலிக்கவா செய்யும் என்கிறார்கள். நகரத்தில் வசிப்பவர்கள் கற்றவர்கள் என்பது உண்மையல்ல போலிருக்கிறது. பட்டாம்பூச்சியிடம் கேட்டுப் பாருங்கள். பறவையிடம் கேட்டுப் பாருங்கள். புழு, பூச்சி, நத்தை, தேனீ, பாம்பு, மான், சிங்கம், யானை, சிறுத்தை எல்லாமே சொல்லும். மரத்துக்கு உயிர் இருக்கிறது என்றல்ல. மரம்தான் உயிர் என்று. ஒரு மரத்தைப் போல் முழுமையான, நிறைவான இன்னோர் உயிர் இந்தப் பூமியில் இல்லை. வானத்திலும் இல்லை, வானுக்கு அப்பாலும் இல்லை.

மேலே ஏறி கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு என் நண்பர்களோடு நான் கதைகள் பேசிச் சிரித்தால், மரமும் எங்களோடு சேர்ந்து குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். வாடிய முகத்தோடு அதன் காலடியில் சென்று அமர்ந்தால், என்ன ஆச்சு குழந்தை என்று தலையை வருடிக்கொடுக்கும். தெய்வம் என்றொன்று இருந்தால், அது மரமாகவே இருக்கும்.

எங்கு மரம் இல்லையோ அங்கு பறவைகள் இல்லை. பூச்சிகள் இல்லை. கடல் இல்லை. மலை இல்லை. காற்று இல்லை. அன்பு இல்லை. மரம் இல்லாத நிலத்தில் கதைகள் தோன்றுவதில்லை. ஒரு மரம் தொலையும்போது சிரிப்பும் உற்சாகமும் விளையாட்டும் தொலைந்துபோகின்றன. அப்படி ஓர் இடத்தில் நான் வாழ்ந்து என்ன ஆகப்போகிறது?

சிறுமி விறுவிறுவென்று நடந்து சென்று தன் கண்ணில் பட்ட முதல் மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அவர்கள் வரட்டும். நான் என் மரத்தைவிட்டு அகலப் போவதில்லை. ஒவ்வொரு முறையும் என்னை ஆசையோடு இழுத்துப் பிடித்து அணைத்துக்கொள்ளும் என் மரத்தை ஆபத்து நேரும்போது கைவிட மாட்டேன். எப்படி என் தாயைப் பிரிந்திருக்க மாட்டேனோ, என் தந்தையை, தங்கையை, பாட்டியை, மக்களைப் பிரிந்திருக்க மாட்டேனோ அப்படியே என் மரத்தையும் நான் பிரிந்திருக்க மாட்டேன்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு எழுந்த பாட்டி தடுமாறி, தடுமாறி நடந்து இன்னொரு மரத்தை அணைத்துக்கொண்டார். பிறகு நடுக்க மில்லாத குரலில் சொன்னார்: “இது என் தாய். என்னைப் பிளந்துவிட்டு, என்னைச் சாய்த்துவிட்டு, என் தாயை அவர்கள் நெருங்கட்டும்.” கைக்குழந்தைகளைக் கீழே வைத்துவிட்டு மற்ற பெண்களும் ஓடிச்சென்று ஆளுக்கொரு மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

இது நம் மரம். நம் வனம். நம் உத்தரகாண்ட். நம் உலகம். இந்த உலகைக் காக்க பெண்களாகிய நாங்கள் இப்போது திரண்டிருக்கிறோம். எங்களிடம் ஆயுதம் இல்லை. எங்களுக்குப் போரிடத் தெரியாது. ஆனால், எதிர்த்து நிற்கத் தெரியும். ஒரு பெண்ணின் கரங்களை ஒரு மரம் பற்றிக்கொள்ளும்போது, ஒரு பெண்ணும் ஒரு மரமும் கட்டியணைத்துக்கொள்ளும்போது புது பலம் பெற்று எழுந்து நிற்கிறது காடு. பெண்களையும் காடுகளையும் வீழ்த்தும் ஆற்றல் எந்த ஓர் ஆயுதத்துக்கும் இல்லை.

சிப்கோ என்றால் கட்டியணைத்தல். எங்கள் உயிரைக் கொடுத்து உலகிலுள்ள எல்லா மரங்களையும் நாங்கள் கட்டியணைப்போம். கோடரிகள் உதிர்ந்து நொறுங்கும்வரை நாங்கள் மரங்களைவிட்டு விலக மாட்டோம். அப்படி ஒரு காலம் வரும்வரை, என் பெயர் சிப்கோ. உன் பெயர் சிப்கோ. நம் பெயர் சிப்கோ.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com


மாய உல்கம்Maya Ulagamசிப்கோதொப்பென்று மரக்கிளைசிறுமிபுலிசிறுத்தை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x