Published : 02 Mar 2021 09:54 am

Updated : 02 Mar 2021 09:54 am

 

Published : 02 Mar 2021 09:54 AM
Last Updated : 02 Mar 2021 09:54 AM

பெண் எழுத்து: ஆறாத பெருவலி

pen-eluthu

இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய ஆமைபோல் மிதக்கும் ஆஸ்ரேலியப் பெருந்தீவுக்குத் தன்னைக் கடத்திக் கொண்டவர்களின் ஆறாத பெருவலியைச் சொல்கிறது ஆழியாளின் இந்தத் தொகுப்பு. இதிலிருக்கும் கவிதைகள் ஒரு தலைமுறையின் நெடுந்துயரை, வாழ்வின் இருண்மைகளை, கனவின் அதீதத்தைக் காட்சிப்படுத்துகின்றன. எளிய சொற்களின் ஒளிர்தலில் உயிர்ப்பைக் கண்டடைதலும் இனப்பேரழிவின் எச்சத்தில் மூச்செடுக்கும் மொழியுடலும்தான் ஆழியாளின் கவிதைகள்.

நெடுமரங்களாய் வாழ்தல்
ஆசிரியர்: ஆழியாள்
வெளியீடு:
அணங்கு பெண்ணியப் பதிப்பகம்
விலை: ரூ.70
தொடர்புக்கு: 9599329181


போராட்டமே வாழ்க்கை

ஆணுக்கு எளிதாகக் கிடைத்துவிடுகிற அனைத் தையும் பெண் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. பேராசிரியர் மோகனாவும் போராடித்தான் வென்றிருக்கிறார். கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவருக்குக் கல்வி பெறுவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. தன்னை மூழ்கடிக்க முயன்ற ஒவ்வொரு சவாலையும் துணிவோடு எதிர்கொண்டு களமாடினார். அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம், பெண்கள் இயக்கம், தொழிற்சங்கம் என்று பல்வேறு அமைப்புகளில் பங்கேற்றுக் களப்பணியாற்றிவர், புற்றுநோயிலிருந்தும் போராடி மீண்டார். தான் கடந்துவந்த பாதையை சுயசரிதையாக அவர் எழுதியிருக்கிறார். துணிவும் விடாமுயற்சியும் இருந்தால் எத்தகைய சோதனையையும் எதிர்கொள்ள முடியும் என்று இந்நூல் மூலம் நம்பிக்கைதருகிறார் மோகனா.

மோகனா ஓர் இரும்புப் பெண்மணியின் கதை
ஆசிரியர்: பேரா.சோ.மோகனா,
வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை: ரூ.120
தொடர்புக்கு: 044-24332924

வாழ்க்கைக் கதைகள்

மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்ரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகாலப் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம் - தாய்மை, காதல், கல்வி, பணி, சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன.

ஒரு வாழ்க்கை சில சிதறல்கள் (அராபியப் பெண்ணியச் சிறுகதைகள்)
தொகுப்பும் மொழியாக்கமும்: ஜான்சி ராணி. வெளியீடு: எதிர் வெளியீடு விலை: ரூ.160
தொடர்புக்கு: 9942511302

சிதைக்கப்பட்ட வாழ்க்கை

எங்குமே பெண்களின் மீதான மதிப்பு என்பது அவர்களது உடலை மையமிட்டதாகவே அமைகிறது. அந்த மதிப்பீடு ஆண்களின் உடலுக்குப் பொருந்துவதில்லை. அத்தகைய சீரழிக்கப்பட்ட பெண் உடலின் அவலங்களைப் பேசுகிறது இந்தக் குறுநாவல். இதயம்கூட வெறும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை இது. சிதைக்கப்பட்ட இப்பெண்களின் வாழ்க்கை, அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டது. உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட, குருதிக்கறை படிந்த அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நாவல் புரட்டிக்காட்டுகிறது. அதுவே, இதே பொருண்மையில் எழுதப்பட்ட பிற கதைகளிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது.

வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி
ஆசிரியர்: நக்கீரன், விலை: ரூ. 70, வெளியீடு: காடோடி, தொடர்புக்கு: 8072730977

பெண்ணை ஒடுக்கும் ‘பண்பாடு’

பல்வேறு வடிவங்களில் பாதுகாக்கப்பட்டு உன்னதமான வையாகவும் முன்மாதிரிகளாகவும் காட்டப்படும் காலத்துக்கு ஒவ்வாத ஆண், பெண் பற்றிய புனைவுக் கற்பனைகளை அடையாளம் காட்டுகின்றன இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள். பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இலக்கியங்கள், இலக்கணங்கள், சிற்பங்கள், புராணங்கள், வழிபாட்டு மரபுகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் காணப்படுகிற பால் வேற்றுமைப் பதிவுகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள், நாம் வாழும் ஆணாதிக்கச் சமூகத்தின் அவலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்
(பெண் தொன்மம் குறித்த ஆய்வுகள்)
ஆசிரியர்: பெ. நிர்மலா
வெளியீடு: பல்கலைப் பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 7358329646

தொகுப்பு : ப்ரதிமா


பெண் எழுத்துஆறாத பெருவலிPen Eluthuஇந்தியப் பெருங்கடல்போராட்டமே வாழ்க்கைவாழ்க்கைக் கதைகள்சிதைக்கப்பட்ட வாழ்க்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x