Published : 16 Nov 2015 02:58 PM
Last Updated : 16 Nov 2015 02:58 PM

டிப்ஸ்: மழைக் காலமும், பிரேக் பராமரிப்பின் அவசியமும்

நன்றாக கார் ஓட்ட தெரிந்தவர்கள் கூட மழை காலத்தில் கார் ஓட்ட கொஞ்சம் அச்சப்படுவார்கள். மழையில் பிரேக் அடித்தால் கார் நிற்குமோ நிற்காதோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முறை நாம் பணிமனைக்குச் சென்று நம்முடைய காரில் பிரேக் நன்றாக உள்ளனவா என்று பார்ப்பது சிறந்தது. அப்படி பார்க்கத் தவறியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கவனமாகப் பின்பற்றவும்.

மழை நேரங்களில் கார் ஓட்டுபவர்கள் கார் எடுப்பதற்கு முன்பாக பானெட்டைத் திறந்து பிரேக் ஆயில் அளவு சரியாக உள்ளதா என்று சரி பார்த்து விட்டு பின்பு காரை எடுக்கவும்.

ஹேண்ட் பிரேக் லீவர் சரியான அளவில் அட்ஜஸ்ட் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும். அவசர சமயத்தில் ஹேண்ட் பிரேக் நமக்கு உதவும்.

மழை நேரத்தில் ஓட்டுபவர்கள் மித‌மான வேகத்திலேயே ஓட்டவும். ஒரு வாகனத்திற்கும் மற்றொரு வாகனத்திற்கும் உள்ள இடைவெளியை சரியாக கடை பிடித்து ஓட்டவும். ஏனென்றால் பிரேக் போடும் போது மற்றொரு வாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்க்கலாம்.

ஏபிஎஸ் பிரேக் அல்லாத வாகனங்கள் பிரேக்கை ஒரேயடியாக அழுத்தாமல் இரண்டு அல்லது மூன்று முறை விட்டு விட்டு அழுத்தும் போது மழையில் வாகனம் ஒரு பக்கமாக இழுத்து செல்வதைத் தவிர்க்கலாம்.

பொதுவாக பிரேக் பேடும், பிரேக் ஷுவும் தண்ணீரில் தொடர்ந்து நனைந்து கொண்டிருந்தால் அதில் வழுவழுப்பு தன்மை அதிகமாகி விடும்,இந்த நிலையில் பிரேக்கை அழுத்தும்போது பிரேக் பிடிக்காமல் கொஞ்சம் இழுத்துக் கொண்டு போகும். ஆகவே வாகனம் தண்ணீர் அதிகம் உள்ள பகுதியை கடந்து வந்த பின்பு இரண்டு அல்லது மூன்று முறை பிரேக்கை அழுத்தி விடவும், அவ்வாறு அழுத்தும் போது வழுவழுப்பு தன்மை குறைந்து பிரேக் நன்றாகப் பிடிக்கும்.

மழை நேரத்தில் பிரேக் பெடல் மீது கால் வைத்தோ அல்லது ஹேண்ட் பிரேக் போட்டோ வாகனத்தை ஓட்டக் கூடாது. ஏனென்றால் பிரேக் பேடும் பிரேக் ஷுவும் தண்ணீரில் உள்ள காரணத்தால் விரைவாக தேய்ந்து விடும், அதோடு பிரேக் செயல்பாடு குறைந்து போகும்.

வாகனத்தை மேடான பகுதியில் பார்க் செய்யும் போது ஹேண்ட் பிரேக்கை மட்டும் பயன்படுத்தாமல் ஏதாவது ஒரு கியரில் வாகனத்தை நிறுத்தி பின்பு பார்க் செய்யவும்.

தகவல் உதவி: கே.ஸ்ரீனிவாசன்,

துணைத் தலைவர், டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x