Last Updated : 27 Feb, 2021 03:16 AM

 

Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

சூழலும் சாதியும்

‘சூழலியலும் சாதியும்’ (காடோடி பதிப்பகம்) என்கிற தலைப்பில் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய புதிய நூல் வெளியாகியிருக்கிறது. அந்த நூலிலிருந்து ஒரு பகுதி:

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதே இயற்கையின் அடிப்படைப் பண்பு. சக மனிதர்களைச் சாதிக் கருதி ஒதுக்கும் ஒருவர், பிற உயிர்களை நேசிப்பதாகக் கூறுவது ஏமாற்றுவேலை. சாதியும் மதமும் இயற்கைப் பண்புக்கு எதிரானவை.

‘சாதி’ எனும் சொல் தமிழ்ச்சொல் அல்ல என்பது மிகப்பெரிய ஆறுதல். அதன் வேர்ச்சொல் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளது. ஆனாலும், அச்சொல் தமிழ்ச் சூழலுக்குள் இறக்குமதியாகிச் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் ஏராளம். இது, முற்றுகைத் தாவரப் பண்பினை ஒத்திருக்கிறது.

தாவரங்களில் ‘முற்றுகைத் தாவரம்’ என்றொரு வகைமை உள்ளது. சூழலியல் நோக்கில் அது ஆபத்தான வகையாகும். அத்தாவரம், ஒரு நிலத்தின் இயல் தாவரங்களை ஒழித்துக்கட்டி அந்நிலத்தை விரைவில் அது கைப்பற்றிவிடும். எடுத்துக்காட்டு: ‘பார்த்தீனியம்’ செடிகள். இச்செடிகளை அழித்தாலும் சூழலில் பரவியுள்ள அவற்றின் விதைகள் பல்லாண்டுக் கால விதையுறக்கத்துக்குப் பிறகு, எப்போது வேண்டுமானாலும் மீண்டும் முளைத்துப் பரவும் ஆபத்துமிக்கவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்படியொரு முற்றுகைத் தாவரம் நம் நிலமெங்கும் முளைத்துப் பரவியது.

அப்படிப் பரவிய ஆரியர்களின் கோட்பாடுகள் ரிக்வேத காலம் தொடங்கி மாறிக்கொண்டே வந்துள்ளன. அவர்களின் தொடர்ந்த இடப்பெயர்ச்சியின்போது அந்தந்த நிலத்துக்கேற்பவே அவை மாறின என்பதைச் சூழலியல் சான்றுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

நீர், நிலம், தீ, காற்று, வானம், திசைகள், தாவரங்கள், உயிரினங்கள் ஆகிய அனைத்தும் தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி பலருக்குப் புதிதாக இருக்கலாம். சுற்றுச்சூழல் தூய்மை என்ற சிறந்த சிந்தனையின் மீது கழுவமுடியாத சாதியக் கறை படிந்தது எப்படி? இயற்கையின் அசல் நிறமான ‘கறுப்பு’ இழிவாக்கப்பட்டது எப்படி?

இந்தப் பின்னணியில் சாதியம் என்ற அறமற்றச் சிந்தனையைப் பல தளங்களிலும் கட்டுடைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனொரு பகுதியாக ‘அசுத்தம்’ என்பதில் தொடங்கி, ‘அகமணம்’ என்பது முடியச் சாதியத்தின் அனைத்துக் காரணிகளையும் சூழலியல் நோக்கில் ஆய்வுசெய்கையில், வியப்பளிக்கும் விதமாக அவற்றின் பின்னணியில் சுற்றுச்சூழல் தன்னைப் பொருத்திக் கொள்வதைக் காணமுடிந்தது.

தற்காலத்தில் பார்ப்பனியம் தன்னை நவபார்ப்பனியமாகத் தகவமைத்துக்கொண்டுள்ள நிலையில், நூலில் இடம்பெறும் பார்ப்பனியம் என்கிற சொல் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதன்று. ‘சாதி என்பது பார்ப்பனர்களோடு இணைத்து விளக்கப்பட்டாலும், சாதியின் பெயரால் பலனடையும் அனைத்துச் சாதியினருக்கும் அதில் பங்குள்ளது’ என்கிற அம்பேத்கரின் கூற்றை வழிமொழிகிறேன். பெரியாரின் மொழியில் சொன்னால், ‘நமது எதிரி ‘பார்ப்பனர்’ கிடையாது, ‘பார்ப்பனியம்’ மட்டுமே’. இந்தப் புரிதலோடு இந்த நூலை அணுக வேண்டும்.

சூழலும் சாதியும், நக்கீரன், காடோடி பதிப்பகம் தொடர்புக்கு: 80727 30977

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x