Published : 08 Nov 2015 12:50 PM
Last Updated : 08 Nov 2015 12:50 PM

பெண் நூலகம்: தோட்டாக்களைத் துளைத்த இதயம்

வெவ்வேறு கொள்கைகளின் பின்னணியில் கொள்ளைக்காரர்களாக மாறியவர்கள் உண்டு. ஆனால் பணத்துக்கு ஆசைப்படாமலும், அறமில்லாத செயல்களைச் செய்யும் மனிதர்களைப் பழிவாங்கவும், ஏழைகளுக்கு உதவி செய்யவும் சிலர் கொள்ளையர்களாக மாறியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் பூலான் தேவி.

வலியும் போராட்டங்களும் நிறைந்த அவரது வாழ்க்கை, ‘நான், பூலான் தேவி’ என்ற சுயசரிதை நூலாக வெளியாகியிருக்கிறது. எழுத்துக்களை அறிந்திருக்காத பூலான் தேவியின் வார்த்தைகளில் விரியும் இந்நூலை, மரியே தெரஸ்கூன் மற்றும் பால் ராம்பாலி ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். பூலான் தேவியின் பால்ய காலமும் இளமைப் பருவத்தில் சந்திக்க நேர்ந்த போராட்டமும் சரணடைதலும் விடுதலையும் சுயசரிதையில் இடம்பெற்றிருக்கின்றன.

‘பூலான் தேவியின் சுயசரிதையைப் படிக்கும் யாருக்கும் அவர் பக்கம் இருக்கும் நியாயம் புரியும்’ என்று ‘தி டைம்ஸ்’ என்ற இதழ் குறிப்பிட்டிருக்கிறது. இந்நூலைப் படிக்கும்போது பூலான் என்ற சிறுமி எப்போது போராளி பூலான் தேவியாக வெடிப்பாள் என்ற ஆவலும் துடிப்பும் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

இறுகிய மலர்

நெற்றியில் கட்டப்பட்ட சிவப்புத் துணி, காக்கிச் சீருடை, கையில் ஆள் உயரமுள்ள துப்பாக்கி, எதையும் சந்தேகிக்கும் பார்வையில் வெளிப்படும் எச்சரிக்கை உணர்வு, ஏன் என்ற கேள்வியுடன் முகத்தில் தெரியும் ஆழ்ந்த இறுக்கம். இவைதான் கொள்ளைக்காரியாக அறியப்பட்ட பூலான் தேவியின் இளமைத் தோற்றம். இந்தத் தோற்றத்துக்குப் பின் மறைந்திருக்கும் வலிகளை பூலான் தேவி இந்த நூலில் பேசியிருக்கிறார்.

சரணடையும்போது பூலானுக்கு வயது 20. இரு மாநில அரசாங்கமும் இந்திய அரசும் அவரைச் சரணடைந்துவிடும்படி கோரியதும் அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருவோருக்கு 1980-களிலேயே ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்ததும் அவரது 20 வயதுக்குள்தான் நிகழ்ந்தன. கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சவால்கள் நிறைந்த வாழ்க்கை அவருடையது. தனது சுயமரியாதையைக் காத்துக் கொள்வதற்காகவும் குரலற்றவர்களுக்குக் குரல் கொடுக்கவும் ஆயுதத்தை ஏந்தியவர் அவர்.

செம்மண்ணைக் குழைத்து மெழுகிய சுவர்கள், காய்ந்த புற்களைக் கொண்டு வேயப்பட்ட கூரை ஆகியவற்றால் உருவானதுதான் பூலான் தேவியின் வீடு. உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறு கிராமத்தில் படகோட்டி (மல்லா) சமூகத்தில் பிறந்தவர் பூலான் தேவி. அவரது தந்தை, தன் தந்தையின் முதல் மனைவியின் மகனால் வஞ்சிக்கப்பட்டார். தந்தையின் சொத்தில் அவருக்கு எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. அவர் சட்ட ரீதியாக மட்டுமே தன் அண்ணனுடன் போராடினார். அண்ணன் இறந்த பிறகு தன் அண்ணன் மகனுடன் (மாயாதின்) போராடினார். ஆனால் அவருக்குக் கிடைத்ததெல்லாம் ஏமாற்றமும் கண்ணீரும் வறுமையும்தான். நான்கு பெண் குழந்தைகளுக்கும் ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையான அவர், தன் பெண் குழந்தைகளுக்குச் சீதனம் சேர்க்கவும் வேண்டியிருந்ததால் அவரது சட்ட ரீதியிலான போரட்டமும் வலுவிழந்த ஆற்றைப் போல ஓடியது. தன் தந்தையின் ஏமாற்றமும் அவருக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணமும்தான் பூலான் தேவியை அடங்க மறுக்கும், எதிர்த்துக் கேள்வி கேட்கும் சிறுமியாக்கியது.

வறுமையையும், நீதி பெற்றுத்தர ஆளில்லாத தன் குடும்பத்தின் கையறு நிலையையும் தனது 8-9 வயதிலேயே உணரத் தொடங்கிவிட்டார் பூலான் தேவி. ‘தான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவன், தனக்கு விதிக்கப்பட்டது இதுதான்’ என்ற மனப்பான்மையில் தன் தந்தை இழந்துவிட்ட போராட்ட குணத்தைக் கையில் எடுத்தார் பூலான் தேவி. அவர் தாய் பெற்றிருந்த போராட்ட குணத்தின் நீட்சிதான் பூலான் தேவி. தன் குழந்தைக்கு நேரும் ஒவ்வொரு அநீதிக்கும் எதிராகக் குறைந்தபட்ச எதிர்ப்பையாவது தனது தாய் வெளிப்படுத்தியிருப்பதை பூலான் தேவி தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

‘உயர்சாதியைச் சார்ந்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் கட்டளை இடுவதை ஏன் என்று கேட்காமல் செய்ய வேண்டும்? அப்போதுதான் அவர்கள் நமக்குச் சாப்பிட ஏதேனும் கொடுப்பார்கள். கடவுள் அப்படித்தான் முடிவு செய்துள்ளார்’ என்ற தன் தந்தையின் சொற்களைக் கேட்கும் சிறுமி பூலான் தேவி, கோயிலில் உள்ள கடவுளைப் பார்ப்பதற்குத் தன் தங்கையுடன் செல்கிறார். “நான் அவற்றுக்கு எதிரில் நின்று, அந்தக் கண்களை உற்று நோக்கியிருக்கிறேன். இருந்தாலும் ஒன்றும் நடக்கவில்லை. அவை உயிர் பெற்று எழுந்து வரவேயில்லை” என்று சொல்லும் பூலான், அதன் பிறகு கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டதாகக் கூறுகிறார். ஆனால், கொள்ளைக்காரியாக மாறிய பிறகு, பூலான் தேவி துர்கா தேவியின் அவதாரமாகவே மக்களால் பார்க்கப்பட்டார். தன்னை துர்கா தேவி வழிநடத்துவதாகவே நம்பினார்.

தனது 11 வயதில் தன்னைவிட 20 வயது மூத்த, மனைவியை இழந்த புட்டிலாலைத் திருமணம் செய்து கொள்ளும் நிர்பந்தத்துக்கு ஆளானார் பூலான். வயதுக்கு வரும் முன்னரே அவர் மீது திணிக்கப்பட்ட தாம்பத்திய வாழ்க்கை அவரை மேலும் கசப்புக்கு உள்ளாக்கியது. மணமுறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதன் காரணமாகவே ஊர் இளைஞர்களின் சீண்டலுக்கு ஆளானார். தன் பெற்றோர் கண் முன்பே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். தன் ஒன்றுவிட்ட சகோதரன் மாயாதினுக்கும் அவனுடைய செல்வாக்குக்கும் எதிராக பூலான் ஓயாமல் போராடினார். பூலானை நடத்தை கெட்டவள் எனவும் கொள்ளைக்காரி எனவும் ஊரில் உள்ள அனைவரையும் நம்பவைத்தவன் மாயாதின். அவனுடைய வார்த்தைகளை நம்பிய ஊர் மக்களையும் பூலான் வெறுத்தார்.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி, தன் தந்தையின் கண் முன்னே காவலர்கள் தன்னை நிர்வாணமாக்கி விசாரித்த சம்பவம் பூலானைக் கடுமையாகப் பாதித்தது. கண்களை மூடிக்கொண்டு அழுவதைத் தவிர பூலானின் தந்தை வேறொன்றையும் அப்போது அறிந்திருக்கவில்லை. தன்னை ஒரு கொள்ளைக்காரியாக மாற்றியது மாயாதின்தான் என்பதில் பூலான் உறுதியாக இருந்தார். எனவேதான் அவனைக் கொன்றுவிட எண்ணினார். தன் தந்தை கேட்டுக்கொண்டதற்காக பூலான் அதைச் செய்யாமல் விட்டார்.

சாதிக்கு எதிரான தீ

சாதிய, வர்க்க, பாலின அடக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக மாறுவதற்கான விதை பூலானின் மனதில் இளம் வயதிலேயே தூவப்பட்டிருந்தது என்பதை அவருடைய சுயசரிதை காட்டுகிறது.

காய்ந்த வரட்டிகளைச் சுமந்து செல்லும்போதும், பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதும், கொள்ளைக்காரியாக மாறி, காடு மலைகளில் திரிந்தபோதும், கொள்ளையடித்தவற்றை ஏழை மக்களுக்குக் கொடுக்கும்போதும், தன்னைக் கொடுமை செய்தவர்களைப் பழிவாங்கும்போதும் பூலான் தேவியுடன் நாம் பயணம் செய்வோம் இந்த நூலின் வழியாக.

தனக்கு நேர்ந்த அநீதிகள் அனைத்துக்கும் பழிவாங்கவே பூலான் தேவி தன் மீது வலிந்து திணிக்கப்பட்ட கொள்ளைக்காரி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். தான் ஒரு பெண் என்பதை மறக்கவே அவர் விரும்பியிருக்கிறார். தன்னைச் சக ஆணாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டவர்களையே தன்னுடன் கொள்ளைக் கூட்டத்தில் இணைத்துக்கொண்டார் அவர். கொள்ளைக் கூட்டங்களுக்குள் நிகழ்ந்த முரண்பாடுகளையும் இந்தச் சுயசரிதை பேசுகிறது.

தனது இளமைக் காலம் முழுவதும் வஞ்சிக்கப்பட்டும், உரிமை மறுக்கப்பட்டும், அநீதி இழைக்கப்பட்டும், வீண் பழி சுமத்தப்பட்டும், பெண் என்பதால் அடக்கப்பட்டும் வாழ்ந்த பூலான் மனதில் பழிவாங்குதல் ஒரு தீப்பொறியாக உருவாகி இருந்தது. அந்தத் தீப்பொறி பிறகு காட்டுத்தீயாக மாறியது.

தன் சுயசரிதையின் முடிவுரையில் ‘‘எங்கு பிறந்தவர்களாயினும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, தோலின் நிறம் அல்லது எப்படிப்பட்ட உருவம் கொண்டவர்களாய் இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தத்தான் நான் விரும்புகிறேன்.’’ என்று தனது போராட்டத்திற்கான நியாயங்களை அவர் சுருக்கமாக குறிப்பிடுகிறார்.

பெண் உரிமை இந்தியாவில் மெதுவாகக் கண் திறந்துகொள்ள எத்தனித்த சமயத்தில் எத்தகைய வசதியும் இல்லாத நிலையிலும் சுயமரியாதை என்ற தீயைக் கையில் ஏந்தி உலகை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் பூலான் தேவி. தன் பக்கம் இருக்கும் நியாயத்தை உலகம் புரிந்துகொண்டது என்ற நிம்மதியில், சிறையில் இருந்து விடுதலையான பூலானின் கண்கள் ஜொலிக்கின்றன.

நான் பூலான் தேவி
மரியே தெரஸ்கூன்
பால் ராம்பாலி
தமிழில்: மு.ந. புகழேந்தி
விலை: ரூ. 300
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி 642 002
தொலைபேசி: 04259-226012 / 9942511302

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x