Published : 16 Nov 2015 02:56 PM
Last Updated : 16 Nov 2015 02:56 PM

சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு...

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முதல் முறை யாக சீனாவிலிருந்து கார்களைத் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்ய உள்ளது.

1908-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பழம்பெருமை வாய்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 396 தொழிற்சாலைகள் உள்ளன.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவில் ஷான்டோங் மாகாணத்தில் ஒரு ஆலையை வைத்துள்ளது. இந்த ஆலையில் புதிய ரக `புய்க் என்விஷன்’ என்ற காரைத் தயாரித்து அமெரிக்காவில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் நடுத்தர ரக எஸ்யுவி மாடலாகும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கார்களை சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்ட மிட்டுள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் தென் கொரியாவில் உள்ள ஆலையிலிருந்து `என்கோர்’ என்ற பிராண்டு கார்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது. அதேபோல அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஆலையில் தயாராகும் `என்கிளேவ்’ என்ற காரை ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவில் விற்பனை செய்கிறது.

அமெரிக்க சந்தையில் `புய்க் என்விஷன்’ காருக்கு அதிக தேவை உள்ளது. இந்நிறுவனத்தின் டெட்ராய்ட் ஆலையில் இந்த கார் தயாரிப்புக்கான வசதி இல்லை. மேலும் டெட்ராய்ட் ஆலையில் தயாரிப்பதைக் காட்டிலும் சீன ஆலையில் தயாரிப்பு செலவு குறைவு. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

சீன சந்தையில் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸின் புய்க் கார்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. வட அமெரிக்காவில் விற்பனையாவதைக் காட்டிலும் நான்கு மடங்கு கார்கள் இங்கு விற்பனையாகின்றன.

இதனால் சீனாவில் உள்ள ஆலை அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே ஜெனரல் மோட்டார்ஸ் நிர்மாணித்து விட்டது.

செலவு குறைப்பு நடவடிக்கையாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவிலிருந்து காரை இறக்குமதி செய்து அமெரிக்காவில் விற்பதற்கு அந்நிறுவன தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செலவு குறைவு என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளிலி ருந்து தயாரிக்கும் போக்கு அனைத்து நிறுவனங்களிலுமே உள்ளது.

அமெரிக்க நிறுவனமே தனது நாட்டில் தயாரிப்பதை விட சீனாவில் தயாரித்து விற்பனை செய்வது லாபகரமானது என்று நினைப்பது சீனாவுக்கு சாதகம். ஆனால் இதுதான் தாராளமய சிந்தனையின் மறுபக்கம் என்பது புரிவது எப்போது?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x