Published : 24 Feb 2021 03:17 am

Updated : 24 Feb 2021 08:57 am

 

Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 08:57 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பெரு வெடிப்புக்கு ஆதாரம் உண்டா?

tinkuvidam-kelungal

பெரு வெடிப்பிலிருந்து கோள்கள் உருவானதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பெரு வெடிப்பு நடந்ததற்கான ஆதாரம் இருக்கிறதா, டிங்கு?

- ர. புத்த பிரவீன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.


பெரு வெடிப்பு (Big Bang) நிகழ்ந்து 14 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன. வெடித்ததிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நொடியும் பல மடங்காக விரிவாக்கம் நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி விரிவடையும்போது வெப்பம் குறைந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அண்டவெளி முழுவதும் ஒரே சீராக நுண்ணலைக் கதிர் (மைக்ரோவேவ்) வீச்சு காணப்படுகிறது.

இது பெரு வெடிப்பு நிகழ்ந்த காலத்தில் உருவான நுண்ணலைக் கதிர்வீச்சாக இருக்கும் என்கிறார்கள். வானியலாளர்களின் கணிதச் சமன்பாட்டின்படியும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டின்படியும் அடிப்படைத் துகள்களின் நிலையான கோட்பாட்டின்படியும் பிரபஞ்சம் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதைக் கணித்திருக்கின்றனர். நாசாவின் ஹப்பிள், ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கிகளின் மூலம் விண்வெளி விரிவடைவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் மேலும் மேலும் விரிவடைந்துகொண்டே செல்லுமா, அல்லது மீண்டும் சுருங்குமா என்பதே தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வாக இருக்கிறது, புத்த பிரவீன்.

வானம் நீல நிறமாக இருப்பதால் கடல் நீர் நீலமாகக் காட்சியளிக்கிறது. ஆனால், வானம் எதனால் நீல நிறமாக இருக்கிறது, டிங்கு?

- எம். ரிதன்யா, 7-ம் வகுப்பு, பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி, கோவை.

நல்ல கேள்வி. நம் கண்களுக்கு வெண்மையாகத் தோன்றும் சூரிய ஒளி, வானவில்லின் அனைத்து வண்ணங்களின் கலவைதான் என்பது உங்களுக்குத் தெரியுமா? சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை அடையும்போது, காற்று மற்றும் மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறது. அப்போது சிவப்பு நிறத்தைவிட நீல வண்ணம் குறுகிய அலைநீளமும் குறைவான அதிர்வெண்களையும் கொண்டதால், அதிக அளவில் சிதறடிக்கப்படுகிறது. அதனால் வானம் பெரும்பாலும் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது, ரிதன்யா.

ஏரல் கடல் சுருங்குவதாகச் சொல்கிறார்களே எப்படி, டிங்கு?

- சு. பரத், 5 ம் வகுப்பு, இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தக்கலை, குமரி.

ஏரல் கடல் என்று சொல்லப்பட்டாலும் அது கடல் அல்ல, மிகப் பெரிய ஏரி. கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கிறது. இந்த ஏரி நிலத்தால் சூழப்பட்டிருக்கிறது. இந்த ஏரியில் கலக்கும் ஆறுகளின் நீரை, நீர்ப்பாசனத்துக்காக ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. அதனால் இந்த ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய நான்கு ஏரிகளில் ஏரல் கடலும் ஒன்றாக இருந்தது. தற்போது நான்கில் ஒரு பங்கு அளவாகச் சுருங்கிவிட்டது, பரத்.

ராக்கெட் புறப்படுவதற்கு முன் கவுண்ட் டவுன் சொல்லப்படுவது ஏன், டிங்கு?

- அ. யாழினி பர்வதம், 11-ம் வகுப்பு, சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தி.நகர், சென்னை.

சிறு தவறும் இன்றி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட வேண்டும். அதற்காக ராக்கெட்டுகளுக்கு ஏற்ப, விண்ணில் செலுத்தப்படுவதற்கு 72 முதல் 96 மணி நேரத்துக்கு முன்பு கவுண்ட் டவுன் ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு விஷயமாகச் சரி பார்ப்பார்கள். ராக்கெட் செலுத்துவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு அனைவரும் பார்க்கும்படியான கவுண்ட் டவுன் ஆரம்பிக்கும். மணிக்கணக்கில் ஆரம்பிக்கும் கவுண்ட் டவுன் நிமிடங்கள், நொடிகள் என்று மாற்றம் அடைந்து, விண்ணில் பறக்கும்போது பூஜ்ஜியத்துக்கு வந்துவிடும், யாழினி.டிங்குவிடம் கேளுங்கள்பெரு வெடிப்புஆதாரம் உண்டாTinkuvidam Kelungalவானம்நீல நிறம்ஏரல் கடல்ராக்கெட்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

week-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x