Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

முடங்கிய தொழில்களை உயிர்ப்பித்த வித்தகர்

சுப. மீனாட்சி சுந்தரம்

somasmen@gmail.com

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரத்தெருக்களில் சைக்கிளில் மண்ணெண்ணெய் விற்றுக் கொண்டிருந்த ஹிமத் ராய் குப்தா, வெறும் 10 ஆயிரம் ரூபாயுடன் டெல்லிக்கு வந்து ஒரு வர்த்தகராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர். இன்று இந்தியாவிற்கு விளக்கேற்றும் பிராண்டாக விளங்கும் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள‘ஹேவல்ஸ்’ என்ற நிறுவனத்தை கட்டியெழுப்பிய கதைதான் Havels, The Untold Storyof Qimmat Roy Gupta. இந்த புத்தகத்தை அவரது மகனும் தற்போதைய ஹேவல்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அனில் ராய் குப்தா எழுதி இருக்கிறார்.

மின்சார சாதனங்கள் தயாரிப்பில் ‘ஹேவல்ஸ்’நிறுவனத்தை இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக மாற்றியதில் ஹிமத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஹிமத்1937-ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார். ஆரம்பத்தில் ஹிமத், அவரது மாமா வைத்திருந்த மின்சாரப் பொருள்கள் விற்கும் கடையில் மேலாளராக சேர்ந்தார். மருமகனின் ஆர்வத்தை கண்ட மாமா அவரது கடையில் ஹிமத்தை பார்ட்னராக சேர்த்துக் கொண்டார். வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஆனால்,குறைந்த வருமானம் ஹிமத்தின் லட்சியத்தையோ ஆர்வத்தையோ பூர்த்தி செய்வதாக இல்லை. என் வழி தனி வழி என்று மாமாவிடமிருந்து பிரிந்தார். அந்த நேரத்தில் கையகப்படுத்தப்பட்டதுதான் ஹேவல்ஸ் என்ற பிராண்ட்.

ஹவேலி ராம் காந்தி என்ற குடும்பத்தினர் 1948ஆம் ஆண்டு பதிவு செய்த பிராண்டுதான் ஹேவல்ஸ். அறுபதுகளின் தொடக்கத்தில் வெளிநாட்டிலிருந்து சுவிட்ச் கியர், ஸ்டார்ட்டர் மற்றும் மீட்டர்களை இறக்குமதி செய்துஹேவல்ஸ் பிராண்டில் விற்றுக்கொண்டிருந்த ஹவேலி ராம் நிறுவனம், மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக இருந்தபோது இறக்குமதி கோட்டாக்களை ரத்து செய்ததன் காரணமாக தானே சொந்தமாக தயாரிப்பதற்காக தொழிற்சாலை தொடங்கியது.

குடும்பக் காரணங்களால் தொழிற்சாலையும் வியாபாரமும் சரிவர கவனிக்கப்படாததால் நிறுவனத்தின் தரமும் வியாபாரமும் சரியத் தொடங்கின.இந்த சமயத்தில், அதாவது 1971-ம் ஆண்டில்,தொழிற்சாலையை வாங்காமல் வெறும் டிரேட் மார்க்கையும் பிராண்ட் பெயரையும் மட்டும் விலைக்கு வாங்கினார் ஹிமத். தனது சொந்த தயாரிப்புகளை ஹேவல்ஸ் பிராண்ட் பெயரில் விற்க ஆரம்பித்தார். இதுபோல நலிவடைந்த வேறு சில நிறுவனங்களையும் அவர் வாங்கினார். அனைத்தையும் லாபமிக்கதாக மாற்றிக்காட்டினார்.

உள்நாட்டில் நலிந்த தொழிற்சாலைகளை கையகப்படுத்தி லாபகரமாக மாற்றிய ஹிமத், 2007-ம் ஆண்டு ஐரோப்பாவிலுள்ள சில்வேனியா என்னும் தொழிற்சாலையை கையகப்படுத்தினார். அது மற்ற இந்திய தொழில்நிறுவனங்களை வியக்கவைத்தது. ஏற்கனவே நம்ம ஊரில் லக்ஷ்மண் சில்வேனியா என்ற பெயரில் பிரபலமாக இருந்த மின் விளக்கு நிறுவனத்தின் தாய்தொழிற்சாலைதான் அது.

ஐரோப்பிய சந்தையில் போதுமான அனுபவம் இல்லாததும், மின்விளக்கு சந்தையைப் பற்றிய புரிதல் குறைவாக இருந்ததும், போதாக்குறைக்கு 2008ஆம் ஆண்டில் உலகத்தையே புரட்டிப்போட்ட பொருளாதார மந்தம் காரணமாக சில்வேனியா கையகப்படுத்தல் ஹேவல்ஸை நஷ்டத்தில் தள்ளியது. நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவதற்காக ஹிமத் மேற்கொண்ட முயற்சிகள் பிரமிக்கவைக்கும் படிப்பினை என்றால் அது மிகையாகாது.

பிறரை அதிகமாக விமர்சிக்காமல், பாராட்டுக்களை உடனடியாக வழங்குவது, பிறர் மீது அக்கறை காட்டுவது, அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது,மரியாதையுடன் நடத்துவது, பிறரின் தவறுகளை ஏற்றுக்கொள்வது போன்ற நேர்மறையான அணுகுமுறையால் ஹிமத் ராய்க்கு எதிரிகளே கிடையாது என்று அவரை நன்கு அறிந்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள். நிறுவனங்களும் பிராண்டுகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்கும் பிரமிப்பு மற்றும் மரியாதை காரணமாகவே தொடர்ந்து சந்தையில் நீடித்திருக்கின்றன. தரமான பொருள்களை வழங்கும் ஒரு பிராண்டாகவே தனது நிறுவனம் அறியப்படவேண்டும் என்பது இலக்கு. நிறுவனத்தை பற்றிய நற்பெயர், இமேஜ், பொசிஷனிங் ஆகிய மூன்றும் லாபத்தை விட முக்கியமானது என்று ஹிமத் அடிக்கடி கூறுவார்.

பொதுவாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்துவது ஒரு ரகம் என்றால், நலிவடைந்த நிறுவனங்களைக்கொண்டு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஹிமத்தின் கதை இன்னொரு ரகம். அந்தவகையில் தொழில் செய்ய விரும்புபவர்களும், மேலாண்மை பயிலும் மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

பிறரை அதிகமாக விமர்சிக்காமல், பாராட்டுக்களை உடனடியாக வழங்குவது, பிறர் மீது அக்கறை காட்டுவது, அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது,மரியாதையுடன் நடத்துவது, பிறரின் தவறுகளை ஏற்றுக்கொள்வது போன்ற நேர்மறையான அணுகுமுறையால் ஹிமத் ராய்க்கு எதிரிகளே கிடையாது என்று அவரை நன்கு அறிந்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x