Last Updated : 21 Feb, 2021 03:19 AM

 

Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

முகங்கள்: முல்லை டீச்சர்!

சேவை என்று சொல்லப்பட்டவை எல்லாம் கடமைக்காகச் செய்யப்படுபவையாகச் சுருங்கிப்போனபோதும், அரிதாகச் சில நிகழ்வுகள் நம் நம்பிக்கையை மீட்டுத்தந்துவிடுகின்றன. குடியரசு நாளன்று தமிழக முதல்வரிடமிருந்து வீரதீரச் செயலுக்கான விருதைப் பெற்றவர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். பள்ளி ஆசிரியர் அப்படி எதைச் சாதித்தார் என்கிற கேள்விக்குப் பதிலாகத் தன் உயிரையே பணயமாக வைத்தவர் அவர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிவருபவர் முல்லை. அப்பா, பாண்டுரங்கன் தமிழாசிரியர், அம்மா மாணிக்கம் இல்லத்தரசி. அப்பாவின் வழியில் அந்த வீட்டின் மூன்று பெண்களும் ஓர் ஆணும் ஆசிரியப் பணியையே தேர்ந்தெடுத்தனர். முல்லையின் புகுந்த வீடும் ஆசிரியப் பின்புலம் கொண்டதுதான். மாமனார், மாமியார் இருவருமே ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.

எல்லா நாளையும்போலத்தான் 2020 ஜனவரி 29ஆம் தேதியும் முல்லைக்கு விடிந்தது. அரசுப் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் பள்ளிப் பரிமாற்ற நிகழ்வுக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் பணியில் இருந்தார் முல்லை. அதாவது இவர்களது பள்ளி மாணவர்கள் வேறொரு பள்ளிக்குச் சென்று பத்து நாள்கள் படிக்க வேண்டும். அதேபோல் அந்தப் பள்ளி மாணவர்கள் இங்கே வருவார்கள். அதன்படி மறுநாள் தங்கள் பள்ளிக்கு மேல் வீராணம் பள்ளியிலிருந்து வரவிருந்த மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்கான ஒத்திகை அன்று மதியம் நடந்தது. மரத்தடியில் அமர்ந்திருந்த எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார் முல்லை.

எதிர்பாராத விபத்து

“அன்னைக்கு மதியம் ரெண்டரை மணி இருக்கும். காஸ் கசியற மாதிரி வாசனை வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகுதுன்னு தோணுச்சு. அங்கே 26 குழந்தைங்க இருந்தாங்க. உடனே அவங்களை எல்லாம் அவசர அவசரமா வெளியேத்தினேன். நான் வெளியே போறதுக்குள்ள சிலிண்டர் வெடிச்சிடுச்சி” என்று சொல்கிறவர் கிட்டத்தட்ட 20 நாள்கள் கழிந்த நிலையில்தான் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே உணர்ந்திருக்கிறார். பள்ளியையொட்டி இருந்த வீட்டில்தான் காஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்திருக்கிறது. ஆரம்பத்திலேயே குழந்தைகளை வெளியேற்றிவிட்டதால் ஓரிரு குழந்தைகள் லேசான காயம் பட்டதுடன் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. ஆனால், முல்லையின் நிலைதான் கவலைக்கிடமாகிவிட்டது.

“அங்கிருந்த சுவர் இடிந்து என் மேல விழுந்துடுச்சு. கால் அப்படியே பிளந்துடுச்சுபோல. இதெல்லாம் அப்புறம் எங்க ஆசிரியர்கள் சொல்லித் தான் தெரியும். நான் மயங்கிட்டேன்” என்று புன்னகைக்கிறார் முல்லை.

அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கேயும் முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு அன்று இரவு ஒரு மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

“சிகிச்சையிலும் மயக்க நிலை யிலும் இருந்ததால் எனக்கு எதுவுமே நினைவில்லை. 20 நாள் கழிச்சுதான் காலில் உணர்வில்லாதது மாதிரி இருந்தது. அப்பதான் எனக்கு ஆபரேஷன் நடந்ததே தெரிந்தது. காலிலும் இடுப்பிலும் மொத்தம் எட்டு ஆபரேஷன் செஞ்சிருந்தாங்க. அவசர சிகிச்சைப் பிரிவிலும் நார்மல் வார்டிலுமா ரெண்டு மாசம் மருத்துவமனையிலேயே இருந்தேன். அது கரோனா ஊரடங்கு காலமா இருந்ததால நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும்னு யாரையும் பார்க்கக்கூட அனுமதிக்கலை. எப்படியோ ஒருவழியா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தேன்” என்று சொல்லும்போதே முல்லையின் முகத்தில் புன்னகை அரும்புகிறது.

ஆனால், சிகிச்சைக்குப் பிறகான வாழ்க்கையில் அவரது பழைய இயல்பு தொலைந்திருந்ததை உணர்ந்தார். உடல்வலியும் மனச்சோர்வுமாக அவதிப்பட்டவரை சுற்றியிருந்தவர்களின் வார்த்தைகள் ஓரளவுக்குத் தேற்றின.

“இப்பவும் தொடர்ந்து சிகிச்சைக்குப் போயிட்டுத்தான் இருக்கேன். காலில் வைத்த ஆறு கம்பிகளை எடுத்துட்டாங்க. இன்னும் மூணு இருக்கு. இயல்பா நடக்க முடியாது. அதுக்குன்னு வடிவமைச்ச ஷூவைப் போட்டுக்கிட்டா ஓரளவுக்கு நடக்க முடியும். என் இரட்டை மகன்களில் ஒருவன் மருத்துவமும் இன்னொருவன் பொறியியலும் படிக்கிறாங்க. நான் சோகமா இருக்கறதைப் பார்த்து எனக்கு பேஷன்ட்னு பேரே வைத்து விட்டான் ஒருவன். அழுக்கு நைட்டியுமா அழுமூஞ்சியுமா இருக்கா தீங்கம்மான்னு சொல்லுவான். நானும் எல்லாத்தையும் கடந்துவரணும்னு நினைப்பேன். கணவர், மகன்கள், என் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்னு என்னைச் சுற்றிலும் எல்லாரும் அக்கறையா இருந்தாங்க. அவங்களோட வார்த்தைதான் நான் தேறிவர உதவுச்சு” என்று சொல்கிறார் முல்லை.

பள்ளிக்குச் செல்வதில் மகிழ்ச்சி

“எங்கள் தலைமை ஆசிரியர் தயாளன், தினமும் வந்து நலம் விசாரித்து விட்டுப் போவார். மாணவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து அழுதுட்டாங்க. நீங்க இல்லைன்னா எங்க குழந்தைகளோட கதி என்ன ஆகியிருக்கும்னு பெற்றோர்கள் சொன்னப்ப வலியெல்லாம் குறைஞ்ச மாதிரி இருந்தது. நான் வலியால அரற்றும்போதெல்லாம், உன்னாலயே இதைத் தாங்கிக்க முடியலையே, அந்தக் குழந்தைங்க எப்படித் தாங்கியிருப்பாங்க? அந்தக் குழந்தைகளுக்கு நீ நல்லதுதான் செய்திருக்கன்னு என் கணவர் சொல்வார். வலிக்கும்போதும் சின்னசின்ன வேலைக்கும் அடுத்தவங்க துணையை நாடும்போதும் இதைத்தான் நினைத்துக்கொள்வேன்” என்று சொல்கிறவருக்குப் பள்ளி திறந்ததில் அவ்வளவு மகிழ்ச்சி.

“இரண்டு வாரமா ஸ்கூலுக்குப் போகத் தொடங்கிட்டேன். இங்கே வந்த பிறகுதான் பழைய உற்சாகம் மீண்ட மாதிரி இருக்கு. என்னோட பையை எடுக்கச் சென்ற மாணவியைத் தடுத்து வெளியே அனுப்பிவிட்டு நான் கிளம்புவதற்குள் சிலிண்டர் வெடித்து விட்டதுபோல. அந்த மாணவி சொன்ன போதுதான் எனக்கே தெரிந்தது. தன் பேத்தியைக் காப்பாற்றியதற்காக அவளுடைய ஆயா என் கையைப் பற்றிக்கொண்டு அழுதபோது, நான் சரியாகத்தான் செயல் பட்டிருக்கிறேன் என்று தோன்றியது. அன்று நான் சட்டென்று எடுத்த முடிவு, நான் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம் தந்துவிட்டதுபோல் இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் முல்லை. பாடப்புத்தங்களில் இல்லாத வாழ்க்கைப் பாடத்தை இவரைப் போன்ற நல்லாசிரியர்கள் சிலர் மாணவர்களுக்குக் கற்றுத்தருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x