Last Updated : 15 Feb, 2021 08:23 AM

 

Published : 15 Feb 2021 08:23 AM
Last Updated : 15 Feb 2021 08:23 AM

மாற்று எரிசக்திக்கு வழி ஏது?

ramesh.m@hindutamil.co.in

கரியமில வாயு வெளியேற்றத்தால் புவியின் வெப்பநிலை அதிகரித்தல், அதன் காரணமாக பனிப்பாறை உருகி கடல்மட்டம் உயர்வது போன்ற சங்கிலித் தொடர் நிகழ்வின் வெளிப்பாடுதான் உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிகழ்ந்த சோக சம்பவம். பனிப்பாறை உருகி திடீரென உருவான வெள்ளம் பொருள் இழப்பை மட்டுமல்ல அதிக எண்ணிக்கையிலான உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் வழிகளில் ஒன்றான நீர்மின் திட்டங் களின் எதிர்காலத்தையும் இந்த நிகழ்வு கேள்விக் குறியாக்கியுள்ளது.

உலக அளவில் எரிஆற்றலை அதிகம் உற்பத்தி செய்யும் மற்றும் நுகரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. தொழிற்சாலைகளின் பெருக்கம், வாகனங்கள், வீட்டுப் பயன்பாடுகள் என தொடர்ச்சியாக இந்தியாவின் எரிபொருள் நுகர்வு அதிகரித்தபடி இருக்கிறது. இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில் நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள்கள் முக்கியபங்கு வகிக்கின்றன. இத்தகைய புதைபடிவ எரி பொருள்களே கரியமில வாயு வெளியேற்றுத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன.

ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றுக்கு ஏற்ப எரி பொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும், அதே நேரத்தில் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் இந்தியா உள்ளது. வாகனங்களுக்கான எரிசக்தியைப் பொருத்த வரையில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களை நோக்கி இந்தியா தீவிரமாக நகர்ந்துவருகிறது. வாகனப்பயன்பாடு மட்டுமல்ல, பலவேறு தளங்களிலும் மின்மயமாக்கலை நோக்கி நகர வேண்டிய சூழலில் இந்தியா இருக்கிறது.

மின்மயமாகும் இந்தியா

கடந்த இருபது ஆண்டுகளில் மின்சாரத் தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் உருவாகும் மின்சாரத் தேவையை தற்போது இந்தியாவில் இருக்கும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கட்டமைப்பு மூலம் பூர்த்தி செய்ய முடியாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் மின்சார உற்பத்தியானது பிரதானமாக அனல் மின் நிலையத்தையே சார்ந்து இருக்கிறது. இந்தியாவில் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்கள்தான் 54 சதவீத மின் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மரபு சாரா மின்னுற்பத்தியான சூரிய மின்னாற்றல் மற்றும் காற்றாலை மின்னுற்பத்தியின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது.

அதிக செலவு பிடிக்கும் அணு மின்நிலையங்களில் பங்களிப்பு 2.3 சதவீதமாகும். எரிவாயு மின்னுற்பத்தி 7 சதவீதத்துக்கும் குறைவே, நீர் மின்னுற்பத்தியின் பங்களிப்பு 12.5 சதவீதம்தான். டீசலைக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு 0.7 சதவீத அளவுக்கு உள்ளன. நிலக்கரியைக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் குறைக்கவேண்டியது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் மரபு சாரா எரிசக்தி மற்றும் நீர் மின் திட்டங்கள்தான் இதற்கு மாற்றாக உள்ளன. சூரிய மின்னுற்பத்தி, காற்றாலை மற்றும் நீர்மின் நிலையங்கள் வழியிலான மின்சார உற்பத்தி 46 சதவீதம் அளவில் உள்ளது. தற்போதைய அளவில் அனல் மின் நிலையப் பயன்பாட்டை குறைக்க நாம் நீர் மின் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாகிறது.

நீர் மின் நிலையங்களின் எதிர்காலம்

நீர் மின்னுற்பத்தி திட்டங்கள் மூலம் அடுத்த 30 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், இதனால் சுற்றுச் சூழலை பாதிக்கும் பசுமைக் குடில் வாயுவெளியேற்றத்தை 5.6 கிகா டன் வரை (ஓராண்டுக்கு 120 கோடி வாகனங்கள் வெளியிடும் கரும்புகைக்கு இணையான அளவு) தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. கரியமில வாயு வெளியேற்றத்தால் சர்வதேச அளவில் ஏற்படும் இழப்புகள் 20,900 கோடி டாலர் வரை தவிர்க்க முடியும் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆனால், நடைமுறையில் நீர் மின் நிலையங்கள் அமைப்பதில் இந்தியா பின்னடைவைச் சந்தித்து வருகிறது. நீர் மின் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புள்ள உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களில் சுற்றுச் சூழல் பாதிப்பு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இமயமலை பிராந்தியத்தில் பூகம்பம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகம் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தில் பாகீரதி மற்றும் அலகநந்தா ஆறுகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட நீர் மின் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அணை கட்டுவது உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. உத்தராகண்டில் இப்போது நிகழ்ந்த திடீர் வெள்ளப் பெருக்கைப் போலவே சிக்கிம் மாநிலத்தில் 2011-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பமும், இதுபோன்ற நீர்மின்திட்டப் பணிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

சூழல் ரீதியான பிரச்சினை ஒருபுறம் என்றால், மறுபுறம் அரசியல் ரீதியான எல்லைப் பிரச்சினைகள் நீர் மின் நிலையங்கள் உருவாக்கத்தில் சிக்கலை ஏற்படுத்துகின்றன. 2,880 கி.மீ. நீளம் கொண்ட பிரம்மபுத்திரா நதியைப் பொறுத்த மட்டில் 1,625 கி.மீ. தூரம் திபெத்திலும், 337 கி.மீ. தூரம் வங்கதேசத்திலும் பாய்கிறது. எஞ்சிய 918 கி.மீ. தூரம்தான் இந்திய பரப்பளவில் ஓடுகிறது. இதேபோல அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 8 ஆற்றுப் படுகைகளில் சுபன்ஸ்ரீ, லோஹித் மற்றும் சியாங் ஆறுகள் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாய்கின்றன. தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளால் இவற்றில் பெருமளவு நீர் மின் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

இவைபோக, நீர் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான விலை நிர்ணயம் நீர் மின் திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதன் காரணமாகவே நீர் மின் திட்டங்களிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு மின் விநியோக நிறுவனங்கள் தயங்குகின்றன. சூரிய மின்னுற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 2.43 என்ற விலையில் வாங்கும்போது, நீர் மின் திட்ட மின்சாரத்தின் விலை ஒரு யூனிட் ரூ.3.34 என நிர்ணயிக்கப்படுவது நீர்மின்சாரத்துக்கான சந்தை வாய்ப்பை மழுங்கச் செய்கிறது. நீர் மின் நிலையங்கள் அமைக்கும் முயற்சியில் ஏற்படும் பின்னடைவானது மாற்று எரிசக்தி உருவாக்கம் தொடர்பாக நமது வழிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டிய தேவையை உணர்த்துகிறது.

நடைமுறைத் தீர்வு

மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் அளித்த பரிந்துரைகளில், மின் கொள்முதலில் நாடு முழுவதற்கும் ஒரே விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது முக்கியமானது. இவர் பரிந்துரைத்த கருத்துக்கு இன்னமும் வடிவம் கொடுக்கப்படவில்லை. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பாரீஸ் ஒப்பந்தத்தை இந்தியா நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தால், இந்தப் பரிந்துரைக்கு செயல்வடிவம் கொடுப்பதும் சிறந்த தீர்வாக இருக்கும். அனைத்துக்கும் மேலாக இத்திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை அளித்தால் மட்டுமே பல நிறுவனங்கள் நீர் மின்னுற்பத்தி திட்டங்களில் முதலீடு செய்யும்.

மாற்று எரிசக்தியை நோக்கிய நகர்வு உலக அளவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்தியாவும் அந்தப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருப்பதுவரவேற்கத்தகுந்த விஷயம். ஆனால், நடைமுறையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், மாற்று எரிசக்தி உருவாக்கத்துக்கான புதிய வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது, போகாத ஊருக்கு வழி சொல்வதுபோல் ஆகிவிடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x