Last Updated : 06 Nov, 2015 12:01 PM

 

Published : 06 Nov 2015 12:01 PM
Last Updated : 06 Nov 2015 12:01 PM

கண்காட்சி கார்னர்: உடலே ‘கடவுள்’!

சென்னை கதே இன்ஸ்டிட்யூட், ஆஸ்காய்ஸ் ஸ்கூல் ஆஃப் போட்டோகிராபியுடன் இணைந்து இளம் ஜெர்மானிய ஒளிப்படக்கலைஞர்களின் ஒளிப்படக் கண்காட்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்தக் கண்காட்சிக்காக ஐந்து ஒளிப்படக் கலைஞர்களை பெர்லினில் இயங்கும் ஆஸ்காய்ஸ் ஸ்கூல் ஆஃப் போட்டோகிராபி தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த ஒளிப்படக் கல்லூரி, பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் நினைவாக புகழ்பெற்ற கிழக்கு ஜெர்மானிய ஒளிப்படக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.

இளம் ஜெர்மானிய ஒளிப்படக்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், ஒளிப்படக்கலையை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்காகவும் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது, கதே இன்ஸ்ட்டியூட்டில் கதார்ஜினா மாசுர்(Katarzyna Mazur), டோர்பன் கீக்(Torben Geeck) என இரண்டு ஒளிப்படக்கலைஞர்களின் ஒளிப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘அன்ன கோண்டா’(Anna Konda), எதிர்ப்பு (Anti) என்ற இரண்டு தலைப்புகளில் இருவரும் ஒளிப்படங்களை கண்காட்சிக்கு அனுப்பியிருக்கின்றனர். இந்தக் கண்காட்சியில் கிட்டத்தட்ட முப்பது ஒளிப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கதார்ஜினா மாசுர் போலாந்து நாட்டைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர். இவர் ஆவண ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர். ‘அன்ன கோண்டா’(Anna Konda) தலைப்பில் இவர் எடுத்திருக்கும் ஒளிப்படங்கள் பெர்லினில் செயல்படும் பெண்கள் மல்யுத்த சங்கத்தை(Female Fight Club) ஆவணப் படுத்தியிருக்கின்றன. இந்த பெண்கள் மல்யுத்தத்தம் பெர்லினில் கிட்டத்தட்ட நூற்றாண்டு பாராம்பரியத்தை கொண்டிருக்கிறது.

1920களில் இந்த பெண்கள் மல்யுத்தம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்கிறது. அதற்குப்பிறகு, 2010-ல் அன்ன கோண்டா, ரெட் டெவில் என்ற இரண்டு வீராங்கணைகளும் இணைந்து இந்த மல்யுத்த சங்கத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இந்த சங்கத்தில் சண்டையிட, வயதோ, எடையோ தடையில்லை. இது முழுக்க முழுக்க ஒருவரின் மனதுக்கு சவால்விடும் போட்டியாகவே அமைந்திருக்கிறது.

“நான் இந்த பெண்கள் மல்யுத்தத்தைப் பதிவுசெய்யும்போது, தங்கள் உடல்களை ‘கடவுள்’ போல் வழிபடும் பெண்களை சந்தித்தேன். அவர்கள் தங்கள் உடலை வலிமையாக்கும் விதம் தனித்துவம் வாய்ந்தது. இந்த மல்யுத்தம், பெண்மையின் ஒற்றுமையையும், வலிமையும் விளக்குவதாக இருந்தது” என்கிறார் கதார்ஜினா மாசுர்.

‘எதிர்ப்பு’(Anti) என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் ஒளிப்படங்களை டோர்பன் கீக் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் எடுத்திருக்கிறார். பெர்லினின் முக்கியமான பகுதியான ’அலெக்சாண்டர்பிளாட்ஸ்’ஸில் வசிக்கும் தெருவோர குழந்தைகளின் வாழ்க்கையை இவர் தன் ஒளிப்படங்களில் பதிவுசெய்திருக்கிறார்.

அவர்களோடு, இரவு, பகல், கோடை காலம், குளிர் காலம் என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பயணித்து இந்த ஒளிப்படங்களை எடுத்திருக்கிறார் டோர்பன் கீக். “இந்த பயணத்தின்போது, அந்த குழந்தைகள் நிலையான உறவுகளுக்காகவும், அன்புக்காகவும், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுவதற்காகவும் ஏங்குவதையும், பின்பு அதைத் தொடர முடியாமல் தவிக்கும் முரணையும் பார்க்கமுடிந்தது” என்று சொல்கிறார் டோர்பன் கீக்.

இந்தக் கண்காட்சி, கதே இன்ஸ்டிட்யூட்டில் நவம்பர் 21ந் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: >www.goethe.de/chennai

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x