Published : 12 Feb 2021 03:16 AM
Last Updated : 12 Feb 2021 03:16 AM

18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா - சிறப்பு முன்னோட்டம்: சமரசங்களில் சிக்காத சர்வதேசத் திரைப்படங்கள்!

இ.தங்கராஜ்

ஒரு சிறந்த திரைப்படம் என்பது சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு வெளியான ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ (The Girl with a Bracelet) என்கிற பிரெஞ்சு திரைப்படம் அதற்கு சிறந்த உதாரணம் என உலக சினிமா காதலர்கள் பாராட்டியிருக்கிறார்கள். கரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய 18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா இரண்டு மாதம் இடைவெளிக்குப் பின்னர், இம்மாதம் 19-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. அதில், தொடக்க விழா படமாக ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ திரையிடப்படுகிறது.

பதின்ம வயதுக்குரிய குழப்பங்கள், கொண்டாட்ட மனநிலை ஆகிய இரண்டின் கலவையாக இருப்பவள் பதினாறு வயது லிஸ். தனது நெருங்கிய நண்பனைக் கொன்றுவிட்டதாக அவள் மீது கொலைப்பழி விழுகிறது. கைது செய்யப்படும் லிஸ், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள். லிஸ்ஸின் பெற்றோர் பதைபதைப்புடன் அமர்ந்திருக்க, அவள் மீது கேள்விக் கணைகள் பாய்கின்றன. நீண்ட விசாரணைக் காட்சிகளின் வழியாக லிஸ்ஸுடைய ரகசிய வாழ்க்கையின் பக்கங்கள் புலனாகத் தொடங்குகின்றன.

லிஸ்ஸுடன் தொடர்புடைய பலரும் விசாரிக்கப்படுகிறார்கள். பிரான்ஸ் நாட்டில், பதின்ம வயதுகொண்டவர்கள் மீதான குற்றவழக்கு விசாரணையின் நடைமுறைகள், உண்மையைக் கண்டடையும் செயல்முறையாக எவ்வாறு இயங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் இந்தப் படத்தில், உரையாடலே திரைக்கதையை இயக்குகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் பதில்கள், அவரது எதிர் கேள்விகள்,

வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவற்றில் இடம்பெறும் வார்த்தைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை எடுக்காட்டும் வலுவான உரையாடலை விமர்சகர்கள் பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள். இவ்வழக்கு விசாரணை முடியும் கட்டத்துக்கு வந்தபின்னரும், லிஸ் தான் உண்மையான குற்றவாளியா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் நீதிமன்றம் திண்டாடுகிறது. ஆனால், மனிதர்கள் உள்நுழைய முடியாத ஒரு குகைக்குள், அடிபட்ட ஒரு சிறுத்தைக்குட்டியைப் போல், உண்மை ஏன் பதுங்கியிருக்கிறது என்பதை படத்தின் முடிவில் எடுத்துக்காட்டியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீபன் டெமோஸ்டியே.

முதல் உலக நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் உலகத் திரைப்படங்கள், இன்று உலகின் சந்தையாகிவிட்ட மூன்றாம் உலக நாடுகளின் நுகர்வுக் கலாச்சார வாழ்க்கையுடன் அதிகமும் பொருந்திப்போகக் கூடியவை. அவ்வகையில் ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ திரைப்படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் தொடக்க உற்சாகத்துக்கு தீக்குச்சியாக இருக்கும்.

57 நாடுகள் 97 படங்கள்

தற்கால பிரெஞ்சு சினிமா மட்டுமல்ல, 57 உலக நாடுகளிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான 97 படங்கள் 18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இவை அனைத்தும் வணிக சமரசத்துக்கு வெளியே நிற்கும் உலகப் படங்கள். மேலும் திரைப்பட விழாக்களுக்கே உரிதான சலுகை என்கிற வகையில், உள்நாட்டுத் தணிக்கையின்றி திரையிடப்படுபவை. இந்த 97 படங்களில், சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் போட்டிப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட ஏழு படங்களும் அடக்கம். கிரீஸ் நாட்டின் ‘ஆப்பிள்ஸ்’ (Apples), போஸ்னியா நாட்டின் ‘க்வோ வாடிஸ் ஐடா?’ (Quo vadis, Aida? - எங்கே போகிறாய் ஐடா?), போர்ச்சுகல் நாட்டின் ‘லிசன்’ (Listen), அர்ஜென்டினாவின் ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்

(The Sleepwalkers), ஐஸ்லாந்தின் ‘ஆக்னஸ் ஜாய்’ (Agnes Joy), எத்தியோப்பியாவின் ‘ரன்னிங் எகைன்ஸ்ட் த விண்ட்’ (Running Against the Wind), கிர்கிஸ்தானின் ‘ரன்னிங் டு த ஸ்கை’ (Running to the Sky) ஆகியன அந்த ஏழு படங்கள்.

ஆஸ்கர் கவனம் என்பதற்கு அப்பால், அதிக கவனஈர்ப்பு பெறும் சர்வதேசத் திரைப்பட விழாக்கள் பல. அவற்றில் சுயாதீனப் படங்களுக்கு சர்வதேச அங்கீகாரமும் குறிப்பிடத்தக்க அளவில் பரிசுப் பணமும் அளித்துவரும் தளம், ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா. கடந்த ஆண்டு ‘நசீர்’ என்கிற சுயாதீனத் தமிழ்த் திரைப்படம் ரோட்டர்டாமில் ‘நெட்பேக்’ (NETPAC) விருதை வென்றது. மற்றொரு சுயாதீனத் தமிழ்ப் படமான ‘கூழாங்கல்’ இந்த ஆண்டு ரோட்டர்டாமின் உயரிய ‘டைகர்’ விருதை வென்றுள்ளது. அப்படிப்பட்ட ரோட்டர்டாமில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் விருது வென்ற, ‘எ ஃபெர்பெக்ட்லி நார்மல் ஃபேமிலி’ (A Perfectly Normal Family - டென்மார்க்), ‘எ ஒய்ட் ஒய்ட் டே’ (A White White Day – ஐஸ்லாந்து), ‘பெர்லின் அலெக்ஸாண்டர்பிளாட்ஸ்’ (Berlin Alexanderplatz – ஜெர்மனி), ‘காலா அசார்’ (Kala Azar – கிரீஸ்) ஆகிய 4 படங்கள் திரையிடப்படுகின்றன.

திரைப்பட விழாக்களுக்கெல்லாம் ‘பாட்ஷா’ என்று புகழப்படும் கான் தொடங்கி பூஸன் வரை, பல்வேறு சர்வதேசப் போட்டிப் பிரிவுகளை நடத்திவரும் 6 பிரம்மாண்ட படவிழாக்களில் அங்கீகாரமும் விருதுகளும் பெற்ற 18 படங்கள் 18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் கூடுதல் கவனம் பெறும் படங்களாக இருக்கப்போகின்றன.

சிறப்பு கவனம் பெறும் நாடுகள்

தணிக்கைக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்றைக்கும் மாறுபட்ட திரைப்படங்களை தந்துவருகிறது ஈரான். அந்நாட்டின் 11 திரைப்படங்கள் ‘கண்ட்ரி ஃபோகஸ்’ என்கிற பிரிவில் திரையிடப்படுகின்றன. அவற்றில் திரை ஆர்வலர்களுக்கு நன்கு பரிச்சயமான 4 ஈரானிய இயக்குநர்களின் படங்களும்

புதிய தலைமுறையின் படைப்பாக்கத்தில் உருவாகி திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற படங்களும் திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.

ஈரானைப் போலவே ‘கண்ட்ரி ஃபோகஸ்’ பிரிவில் பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் தூதரகமான அலியான்ஸ் ஃபிரான்சேஸ் ஆஃப் சென்னை தேர்வுசெய்து ஒருங்கிணைக்கும் 6 பிரெஞ்சுப் படங்கள், டெல்லியில் உள்ள ஹங்கேரி கலாச்சாரத் தூதரகம் ஒருங்கிணைத்துள்ள 4 ஹங்கேரித் திரைப்படங்கள், சென்னையின் கதே இன்ஸ்டியூட் ஒருங்கிணைக்கும் 4 ஜெர்மானியத் திரைப்படங்கள், டெல்லியில் செயல்பட்டுவரும் சிலி நாட்டின் கலாச்சாரத் தூதரகம் ஒருங்கிணைக்கும் 2 தற்கால சிலி திரைப்படங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

போட்டிப் பிரிவு

இந்தியன் பனோரமா பிரிவில் 4 தமிழ் திரைப்படங்கள் உட்பட இம்முறை 17 இந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. கரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது டிப்ளமோ குறும்படங்களை இந்த ஆண்டு படமாக்க இயலாத சூழ்நிலையில், அவை இடம்பெறவில்லை. வழக்கம்போல் தமிழ்த் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவு இம்முறையும் களைகட்டியிருக்கிறது. போட்டிப் பிரிவுக்கு 18 தமிழ்த் திரைப்படங்கள் விண்ணப்பித்த நிலையில், அவற்றிலிருந்து 13 படங்கள் தேர்வுபெற்றிருக்கின்றன.

இம்முறை ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’. ‘க/பெ.ரணசிங்கம்’ ஆகிய படங்களுக்கும் போட்டிப் பிரிவில் இடம் கிடைத்துள்ளது. சிறந்த படம் முதலிடம், சிறந்த படம் இரண்டாமிடம், ஸ்பெஷல் மென்ஷன் ஜுரி விருது, அமிதாப் பச்சன் ‘யூத் ஐகான்’ விருது ஆகிய பிரிவுகளின்கீழ் வெல்லும் படைப்புகளுக்கு 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு, விருதுக் கேடயம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன. தமிழ்த் திரைப்படப் போட்டிக்கு திரைக் கலைஞர் சுகன்யா, இயக்குநர் ஹலிதா ஷமீம், பத்திரிகையாளர் பரத்குமார் ஆகியோர் நடுவர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த 17 ஆண்டுகளாக சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) திரைப்படச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் திரைப்பட விழா இயக்குநருமான இ.தங்கராஜ், திரைப்பட விழாவின் 18-வது ஆண்டு பற்றிக் கூறும்போது: “சென்னையின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இத்திரைப்பட விழாவை, சர்வதேசத் தரத்துடன் நடத்துவதே எங்களது நோக்கம். எங்களது நோக்கத்தையும் செயல்பாடுகளையும் உற்றுநோக்கி, எப்போதும்போல் தமிழக அரசு நிதியுதவி அளித்திருக்கிறது. தமிழ்த் திரையுலகின் முக்கிய சங்கங்கள், அமைப்புகள் ஆகியோரின் ஒத்துழைப்பு, ‘தி இந்து’ ஆங்கிலம், 'இந்து தமிழ் திசை' செய்தித்தாள்களின் ஊடக ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் பிரம்மாண்டம் குறையாமல் நடக்க இருக்கிறது.

5 திரைகள்

இந்த ஆண்டு, சென்னையின் உலகத் தர திரையரங்க வளாகமான அண்ணா சாலை பி.வி.ஆர். மல்டி ஃபிளெக்ஸில் (முந்தைய பெயர்: சத்யம் சினிமாஸ்) உள்ள நான்கு 4கே திரையரங்குகள், கேசினா திரையரங்கம் ஆகிய ஐந்து திரைகளில் திரையிடுகிறோம். மற்றொரு சிறப்பு, இதுவரை இல்லாத வகையில் ஆப்கானிஸ்தான், கொசோவா, அங்கோலா, எத்தியோப்பியா, கிர்கிஸ்தான், லெபனான், ருவாண்டா உள்ளிட்ட 8 நாடுகளின் தற்காலத் திரைப்படங்கள் வந்துள்ளன.

தவிர ஊடகக் கல்வி பயிலும் மாணவர்கள், திரை ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில் திரைப்படப் படைப்பாளிகள் பங்கேற்கும் 8 ‘மாஸ்டர் கிளாஸ்’ பயிலரங்குகளை பி.வி.ஆர். திரையரங்க வளாகத்திலேயே நடத்தவிருக்கிறோம்” என்கிறார். 18-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை www.icaf.in / www.chennaifilmfest.com ஆகிய இணைதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x