Published : 06 Nov 2015 11:35 AM
Last Updated : 06 Nov 2015 11:35 AM

இயக்குநரின் குரல்: உதயநிதியின் புதிய பயணம்! - இயக்குநர் திருக்குமரன்

காமெடிக் கதைகளில் துருதுருப்புடன் வலம் வந்துகொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினை அதிரடி நாயகனாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் திருக்குமரன். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மான் கராத்தே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். தனது முதல் படத்துக்குப் பேட்டியே அளிக்காத இவரிடம் இரண்டாவது படத்துக்காக உரையாடியபோது…

'கெத்து' எந்த மாதிரியான கதைக்களம்?

ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். படத்தின் கதையோட்டம் பரபரப்பாகவும், ஊகிக்க முடியாத வகையிலும் இருக்கும். சத்யராஜ் , உதயநிதி இருவரும் அப்பா, மகனாக நடித்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரம் எப்போதுமே வம்புச் சண்டைக்கு போகும். மகன் எந்தச் சண்டை வந்தாலும் ஒதுங்கிப் போகிறவர். இப்படி எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது.

அதிலிருந்து எப்படிச் சமாளித்து வெளியே வந்தார்கள் என்பதுதான் கதை. முழுக் கதையும் மலைப் பிரதேசத்தில் நடப்பதுபோலத் திரைக்கதை அமைத்திருக்கிறோம். படமாகப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உழைப்பு பேசப்படும். ஹாரிஸ் ஜெயராஜின் இசை படத்துக்குப் பெரிய பலமாக இருக்கும். படத்தின் காட்சியமைப்பு, இசை இரண்டிலுமே ரசிகர்களுக்குப் புது அனுபவம் கிடைக்கும்.

இந்தக் கதைக்கு உதயநிதியைத் தேர்வு செய்தது ஏன்?

கதையை எழுதி முடித்தவுடன், என் குரு ஏ.ஆர்.முருகதாஸிடம் போய்ச் சொன்னேன். “இந்தக் கதைக்குப் புதுசா ஒரு ஆக்‌ஷன் ஹீரோ பண்ணினால்தான் சரியாக இருக்கும்” என்று சொன்னவர், அவரே என்னை உதயநிதியிடம் அழைத்துக்கொண்டு போய் சிபாரிசு செய்தார். அப்படித்தான் இந்தக் கதையில் உதயநிதி கச்சிதமாகப் பொருந்தினார்.

நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்களில் நடித்துவந்த உதயநிதி, ஆக்‌ஷன் கதாபாத்திரத்துக்கு எப்படிப் பொருந்தியிருக்கிறார்?

படமாகப் பார்க்கும்போது உதயநிதி புதிதாகத் தெரிவார். அவரோடு முந்தைய படங்களில் பணியாற்றியவர்கள் யாருமே இப்படத்தில் இல்லாமல் புதிதாக இருக்க வேண்டும் என முடிவு பண்ணினேன். கதைக்காகக் கொஞ்சம் உடலை ஏற்றி, கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். வழக்கமான உதயநிதி படம் என்று நீங்கள் நினைத்து வந்தால், ஏமாற்றமாகத்தான் இருக்கும். சண்டைக் காட்சிகளெல்லாம் ரொம்ப யதார்த்தமாக இருக்கும் விதத்தில் அன்பறிவு சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு தனது வழக்கமான பாணியில் பயணிக்காமல் வித்தியாசமான களங்களில் உதயநிதி படங்கள் பண்ணுவார். அதேபோல இந்தப் படத்தின் வில்லன் விக்ராந்த் பற்றிப் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவரது நடிப்பு கண்டிப்பாகப் பேசப்படும். ஏனென்றால் படத்தில் அவருக்கு இரண்டே வசனங்கள்தான். முழுக்க பார்வை, உடலமைப்பு , உடல் மொழி ஆகியவற்றின் மூலமே மிரட்டியிருக்கிறார்.

ஆக்‌ஷன் கதைக் களத்தில் ஏமி ஜாக்சனுக்கு என்ன வேலை?

ஏமி ஜாக்சன் ஒரு ஐயங்கார் பெண்ணாக நடித்திருக்கிறார். இதுவரை அவர் மார்டனாக நடித்த எந்த ஒரு படத்தின் சாயலும் இப்படத்தில் இருக்கக் கூடாது என்று தீர்மானித்தேன். அவங்க பாட்டியாக சச்சு நடித்திருக்கிறார்கள்.

எந்த மாதிரியான படங்களை இயக்க ஆசை?

எனது குருவின் வழியில் பயணிக்கவே ஆசைப்படுகிறேன். ‘ரமணா' படம் முடிந்தவுடன் ஏ.ஆர். முருகதாஸ் சாரிடம் சேர்ந்தேன். தற்போது அவர் இயக்கிவரும் ‘அகிரா' வரை அவரிடம் பணியாற்றிவருகிறேன். அவருக்கு இருக்கும் பணிகளுக்கு இடையே, ‘கெத்து' படம் பற்றி அடிக்கடி விசாரிப்பார். படப்பிடிப்புக்கு வந்தார். என் மீது அக்கறை உள்ளவர். வித்தியாசமாகவும் கொஞ்சம் பெரிதாகவும் யோசிப்பவர். திரைக்கதையும் வசனமும் ரொம்ப வலிமையாக இருக்க வேண்டும் என மிகவும் மெனக்கெடுவார். என்னுடைய கதைகளும் அவருடைய பாதையில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஒரே மாதிரியான படங்களுக்குள் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x