Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

2021-ல் காலநிலை: அமைதி நிலவுமா? ஆபத்தா?

நாராயணி சுப்ரமணியன்

கடுமையான காட்டுத்தீ நிகழ்வு கள், வெள்ளப்பெருக்கு, அதிதீவிரப் புயல்கள் எல்லாம் நிறைந்த ஆண்டாக 2020 இருந்தது. அட்லாண்டிக் கடலில் மட்டும் 30 புயல்கள் உருவாகின.

2020 நவம்பர் மாதத்தில் இரண்டு வார இடைவெளியில் அடுத்தடுத்து இடா, ஐயோட்டா என்கிற இரண்டு புயல்கள் மத்திய அமெரிக்க நாடுகளைத் தாக்கின. சோமாலியாவில் வீசிய ‘கதி’ என்கிற புயலால், இரண்டு ஆண்டுக் கால சராசரி மழை, இரண்டே நாள்களில் கொட்டித் தீர்த்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தீவிரமான காட்டுத்தீ நிகழ்வுகளால் அமெரிக்கா பாதிக்கப்பட்டது. ஃபிலிப்பைன்ஸில் வீசிய கோனி புயல், மனித வரலாற்றில் இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட புயல்களிலேயே தீவிரமானது என்று கருதப்படுகிறது. கோனி புயலின்போது காற்றின் வேகம் சராசரியாக மணிக்கு 315 கி.மீ. வேகத்தில் வீசியது. இந்தியாவிலும் பல்வேறு புயல்கள் பொருட் சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தின. அதீதக் குளிர், அதீத வெப்பம் இரண்டுமே நிலவிய ஆண்டாக 2020 அமைந்தது.

கோவிட்-19 பரவல், அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு ஆகிய வற்றால் அன்றாட வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களாலும் மன உளைச்சலாலும் இது போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள் கடந்த ஆண்டு பெரிதும் விவாதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டின் நிகழ்வுகளையும் இப்போது இருக்கிற காலநிலையையும் ஆராய்ந்த அறிவியலாளர்கள், 2021ஆம் ஆண்டின் காலநிலையும் சுற்றுச்சூழலும் எப்படியிருக்கும் என்கிற கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

லா நினா என்ன செய்யும்?

எல் நினோ தெற்கு ஊசலாட்டம் (El Nino Southern Oscillation) என்பது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இயற்கையான காலநிலை சுழற்சி. இதில் மூன்று அங்கங்கள் உண்டு: எல்-நினோ, லா-நினா, இரண்டும் அற்ற சமநிலைப் பருவம். வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில், கடலுக்கும் வளிமண்டலத்துக்கும் இடையே காற்று, வெப்பத்தின் பரிமாற்றத்தால் இந்த சுழற்சி தூண்டப்படுகிறது. இரண்டு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊசலாட்டம் நிகழும். ஊசலாட்டத்தின் ஒவ்வொரு அங்கமும் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள்வரை நீடிக்கலாம்.

எல்-நினோ நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும். லா-நினா நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும். சமநிலைப் பருவத்தில் இடைப்பட்ட வெப்பநிலை இருக்கும். பசிபிக் பெருங்கடலில் நிகழும் இந்த ஊசலாட்டம், உலகளாவிய வீச்சைக் கொண்டது. இந்தியாவின் பருவமழை, வெப்பநிலை என்று பல அம்சங்களைப் பாதிக்கக்கூடியது.

2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், குளிர் நிகழ்வான லா நினா தொடங்கிவிட்டதாக உலக வானிலை அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2021 மார்ச் மாதம்வரை இது தொடரும் என்றும், இது மே மாதம் வரை நீடிப்பதற்கு 65% வாய்ப்பு இருப்பதாகவும் அறிவியலாளர்கள் உறுதிசெய்திருக்கிறார்கள். பொதுவாக லா நினா நிகழ்வின்போது சராசரி வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஆனால் காலநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு ஆகியவற்றின் பின்னணியில் இந்த நிகழ்வு வருகிறது என்பதால், அவற்றையும் இணைத்துக்கொண்டே லா நினாவை அணுகவேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

2020ம் ஆண்டின் பிற்பகுதியில் குளிர் நிகழ்வான லா நினா உருவாகிவிட்டாலும் இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட அதிகமான சராசரி வெப்பநிலை நிலவிய ஆண்டுகளில் ஒன்றாக 2020 அறிவிக்கப்பட்டுள்ளது. பசுங்குடில் விளைவின் தீவிரத்தை லா நினாவால் ஓரளவு மட்டுமே குறைக்க முடிந்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, 2020ஆம் ஆண்டைவிட, 2021ஆம் ஆண்டின் வெப்பநிலை குறைவாக இருக்கும். என்றாலும், சராசரி அளவைவிட அது நிச்சயமாக அதிகமாகவே இருக்கப்போகிறது.

மிரட்டும் புயல்களும் மழையும்

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தின் சராசரி வெப்ப நிலை, ஒரு அடிப்படை அலகாகக் கருதப்படுகிறது. 2021இன் உலகளாவிய சராசரி வெப்பநிலை, இந்த அடிப்படை அளவைவிட, 0.91 டிகிரி செல்சியஸ் முதல் 1.15 டிகிரி செல்சியஸ்வரை கூடுதலாக இருக்கலாம். கடந்த ஏழு ஆண்டு களாகவே அடிப்படை அலகிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரி செல்சியஸ் என்றே வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருவது என்பது கவலையளிக்கும் அம்சம்.

அது மட்டுமல்லாமல், இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட ஆண்டுகளி லேயே அதிக சராசரி வெப்பநிலை நிலவிய முதல் ஐந்து ஆண்டுகளில் 2021க்கும் இடம் இருக்கும் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே, லா-நினாவால் வெப்ப நிலையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக நீடித்துவரும் இயற்கை சுழற்சியால்கூட பெரிதும் மாற்ற முடியாத அளவுக்குக் காலநிலை சிதைந்துவிட்டதையே இது காட்டுகிறது.

2021இன் லா நினா நிகழ்வால் அட்லாண்டிக் கடலில் ஏற்படும் புயல்கள் தீவிரமாக மாறுவதற்கு 60% வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே லா நினா நிகழ்வின்போது ஆசிய நாடுகளில் புயலும் மழையும் அதிகரிக்கும். தவிர, காலநிலை மாற்றத்தால் புயல்களின் தீவிரத்தன்மை அதிகரிக்கிறது என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, 2021இன் முதல் பாதியில் மழை அளவு, புயல்கள், காற்றின் ஈரப்பதம் ஆகியவை கூடுதலாக இருக்கவே சாத்தியம் அதிகம்.

கரிம உமிழ்வு கட்டுப்படாவிட்டால்…

கொள்ளைநோய் அச்சுறுத்தலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, உலகளாவிய கரிம உமிழ்வின் அளவு குறைந்தது, சூழலியலாளர்க ளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், 2020இன் பிற்பகுதியில் சிறிது சிறிதாக ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது, கரிம உமிழ்வின் அளவு பழையபடி உயர்ந்து, ஊரடங்கே நடைமுறைப்படுத்தப்படாத 2019இம் ஆண்டின் அளவைத் தொட்டுவிட்டது. 2021ஆம் ஆண்டிலும் இதே அளவு கரிம உமிழ்வு தொடரும்பட்சத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளும் தீவிரமானவையாக இருக்கும் என்பதே அறிவியலாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

லா நினா நிகழ்வு மே மாதம் முடியும் நிலையில், அதன்பிறகு சமநிலைப் பருவம் வருமா அல்லது எல் நினோ வருமா என்பதைப் பொறுத்து 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியின் காலநிலை அமையும். காலநிலை மாற்றத்தின் பின்னணியில் இவை யாவும் நடப்பதால், துல்லியமாக இப்படித்தான் நிகழும் என்று எந்த ஒன்றையும் கணித்துவிட முடியாது என்பதும் பெரும் சிக்கல்.

கடந்த ஆண்டின் சூழலியல்சார் பேரிடர்களால் பெருமளவில் பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் எதிர்கொண்டி ருந்ததால், சூழலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஓரளவு முக்கியத்துவம் கிடைக்கத் தொடங்கி யிருப்பது ஓரளவு நம்பிக்கை தருகிறது. சூழலியல் சீர்கேட்டால் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை உலக மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆகவே, அதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதிலும் உலக நாடுகளின் அரசுகள் கூடுதல் முனைப்புக் காட்டச் சாத்தியமிருக்கிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தொடர் செயல்பாடுகள், கரிம உமிழ்வு களைக் கட்டுப்படுத்துவது, பேரிடர்களுக்கான தயார்நிலை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பூவுலகைப் பேராபத்துகளிலிருந்து காப்பாற்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x