Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

ராமன் வழிபட்ட சிவாலயம்

என்.வரதராஜன்

மகான்கள் முக்தியடைந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்து, அந்த இடத்தில் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து வழிபடும் வழக்கம் நிலவியது. அப்படியான முறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மணவூருக்கு கிழக்கே, செஞ்சி பானம்பாக்கத்துக்கு மேற்கே ராமன் கோவில் சிவாலயம் அமைந்துள்ளது.

இந்த ராமர் திருமேனி பஞ்சராம சேத்திரங்களில் ஒன்று. இங்கு ஆறடி உயரத்தில் சிவலிங்கத் திருமேனி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிவலிங்கத் திருமேனி, வனவாசத்தின்போது ராமபிரானால் பூஜிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. வைணவ-சைவ ஒற்றுமைக்கு இந்த ஆலயம் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இந்த ஆலயம் மிகவும் சிதிலமடைந்து லிங்கத் திருமேனி மட்டுமே மிச்சமாக இருந்த நிலையில், ஊராரின் முயற்சியுடன் லிங்கத் திருமேனிக்கு புதிய ஆலயம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. லிங்கத் திருமேனி இருந்த இடத்திலேயே ஆலயம் அமைக்க முடிவுசெய்து கடைக்கால் அமைக்கும்போது ஒரு தாழியில் அமர்ந்த நிலையில் ஒரு சாதுவின் எலும்புக்கூடு இருந்துள்ளது. அதை ஊர் மக்கள் எதுவும் செய்யாமல் அந்த இடத்திலேயே புதைத்து, அதன் மீது தற்போதைய கோவிலைக் கட்டியுள்ளனர்.

இந்தக் கோவிலில் ராமலிங்கேஸ்வரர் கிழக்கு பார்த்த சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் பர்வதவர்த்தினி. தெற்கு நோக்கிய சந்நிதியில் அபய வரத முத்திரையுடன் அம்பாள் அருள்பாலிக்கிறார். பிறவியை அறுக்கும் பாசக் கயிற்றையும் (மாயை) ஏந்தியுள்ளார். பர்வதம் என்ற பெயருக்கு மலை, மலையைச் சார்ந்த இடம். பர்வத ராஜகுமாரி என்ற பெயரை உடையவளுக்கு, மலைமகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

அண்ணாமலையார் தேவஸ்தானம், திருவண்ணாமலை சிவபட்டம் ஹாலாஸ்ய நாத சிவாச்சாரியார் தலைமையில் இந்த சிவாலயத்துக்கு பிப்ரவரி 1ஆம் தேதி (தை மாதம் 19ஆம் தேதி) மீன லக்னத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x