Last Updated : 02 Feb, 2021 03:17 AM

 

Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM

தமிழால் செழிப்போம்!

நினைத்ததைச் சொல்வதற்கும் வேண்டியதைப் பெறுவதற்கும் மொழியின் பங்கு முதன்மையானது. மொழித் தேர்ச்சியே அறிவு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தேடிக் கற்பதும் கற்பதைப் புரிந்துகொள்வதும் புரிந்துகொண்டதைச் செயலாக மாற்றுவதும் மொழியால்தான் நிகழ்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், நல்ல வேலைக்கும் வெற்றிகரமான வாழ்க்கைக்கும் மொழிப் புலமையும் ஆளுமையும் அவசியம்.

மொழிப் புலமையைப் பொறுத்தவரை, அதற்குத் தாய்மொழி, அந்நிய மொழி என்கிற பாகுபாடு கிடையாது. முறையாகப் பயின்றால்தான் மொழி நமக்குக் கைகூடும். மொழியில், அதன் இலக்கணத்தில் தேர்ச்சி இல்லாமல், எந்த மொழியையும் வசப்படுத்த முடியாது. கலைக் கல்லூரிகளில் மொழிக்கென்று தனியாகவே பட்டப்படிப்புகள் உள்ளன. மருத்துவமும் பொறியியலும் அறிவியலும் மட்டுமல்ல மொழியும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் படிப்பே. குறிப்பாகத் தமிழ் மொழி.

எங்குப் படிக்கலாம்?

மொழி, படைப்பாற்றலில் ஆர்வம் உள்ளவர்கள் 2-க்கு பிறகுக் கலைக்கல்லூரிகளில் சேர்ந்து தமிழ் இளநிலைப் பட்டப்படிப்பு படிக்கலாம். பொதுவாக மாணவர்களுக்குப் பள்ளிகளில் படிக்கும்போது தங்களின் இயல்பான ஆர்வத்தைக் கண்டுணர முடியாத அளவுக்குச் சுற்றத்தின் விருப்பம் திணிக்கப்படும். மாணவர்களும் ஏதோ ஒரு படிப்பைப் படிக்க நேரும். பட்டம் பெற்றுத் தன்னம்பிக்கை பெற்ற பின்னே மாணவர்களுக்குத் தங்களின் இயல்பான தேடல் புரிபடும். காலம் கடந்துவிட்டது என்று நினைக்காமல், தங்கள் தேடலை நோக்கிப் பயணிக்க தமிழுக்கென்று பல இணைய வகுப்புகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது ’தமிழ் இணையக் கல்விக்கழகம்’: www.tamilvu.org

தமிழை அழகாகவும் தெளிவாகவும் இலகுவாகவும் கற்றுக்கொள்ளும் விதமாக இந்த இணையவழிப் பல்கலைக்கழகத்தில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாடங்கள் மட்டுமின்றி புத்தகங்களும் அகராதிகளும் கொண்ட நூலகத்தையும் தரவுகள், தமிழ் செயலிகள், கான் அகாடமி வீடியோக்கள் ஆகியவற்றை அது கொண்டுள்ளது.

வயதுக்கேற்ற படிப்பு

மழலைக் கல்வி, சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு எனக் கல்வித் திட்டங்கள் அதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மழலைக் கல்வியில் இளம் குழந்தைகள் பள்ளிப் பாடங்களைக் கற்பதற்குமுன், பாடல் மூலமாகவும், காட்சிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் பாடங்களைப் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்து, ஆர்வத்துடன் கற்கும் வகையில் மழலைப் பாடங்கள் தரப்பட்டுள்ளன.

பெரியவர்களுக்கு அவர்களின் திறனைப் பொறுத்து BBOO, BB00 அடிப்படை நிலை, BM00 இடைநிலை, BA00 மேல்நிலை போன்ற சான்றிதழ் படிப்புகளும் பட்டயப் படிப்பும் (Diploma) மேற்பட்டயப் படிப்பும் இளநிலைப் பட்டப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

தமிழ் கசக்குமா?

வகுப்புகள் அதுவும் இணையவழித் தமிழ் வகுப்புகள் என்றவுடன் அலுப்பாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம். சர்க்கரைப் பொங்கலைச் சுவைத்தபடி முனைவர் மா. நன்னன் வழங்கும் ‘தமிழ் கற்போம்’ என்ற அதன் அறிமுகக் காணொலியே அவர்களின் அலுப்புக்கு மருந்து.

கவிக்கோ ஞானச்செல்வன் வழங்கும் ‘நல்ல தமிழ் அறிவோம்' எனும் தொடர் சொற்பொழிவு நல்ல தமிழை இயல்பாகப் பார்ப்பவரிடம் கடத்திவிடுகிறது. பத்துப் பகுதிகளைக்கொண்ட அந்தத் தொடர் சொற்பொழிவு முழுவதையும் பார்ப்பதற்கு மொத்தமாக ஐந்து மணி நேரம் பிடிக்கும். அதை முழுவதும் கேட்பவர்களுக்குத் தமிழில் நிபுணத்துவம் உறுதியாகக் கைகூடும்.

இணைய நூலகம்

நூல்கள், நிகண்டுகள், அகராதிகள், கலைச்சொற்கள், கலைக் களஞ்சியங்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம், தமிழிணையம் போன்றவை இந்த இணைய நூலகத்தில் உள்ளன. நூல்களைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கான புத்தகங்கள் முதல் சங்க இலக்கியம் புத்தகங்கள்வரை பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன.

புத்தகங்களுக்கு இணையாகப் பல அகராதிகள் உள்ளன. Pal’s Dictionary (Eng-Tamil), மு. சண்முகம் பிள்ளையின் தமிழ் - தமிழ் அகரமுதலி, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில - தமிழ் அகராதி, Tamil Lexicon Vol - 1 to 7, த.இ.க வின் - உச்சரிப்புடன் கூடிய மின் அகராதி, சங்க இலக்கிய அகராதி (பாட்டும் தொகையும்), காலக் குறிப்பு அகராதி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி போன்றவை திறன்மிக்கவை மட்டுமல்ல, பயனுள்ளவையும்கூட.

படித்தால் உண்டு வேலை

பாரதியைப் போன்றோ புதுமைப்பித்தனைப் போன்றோ இப்போது எந்த எழுத்தாளரும் வறுமையில் வாடுவதில்லை. சினிமா பாடலாசிரியர்களின் வருமானமும் இன்று பெருகிவிட்டது. ஊடகத்துறையும் தன் பங்குக்கு சொல்லிக்கொள்ளும்படியான ஊதியத்தைச் செய்தியாளர்களுக்கும் துணை ஆசிரியர்களுக்கும் வழங்குகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் ஆசிரியர்களுக்கு இன்று நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. எழுத்தாளரோ பாடலாசிரியரோ தமிழ் ஆசிரியரோ அவர் யாராக இருந்தாலும், அவரின் மொழியாற்றலுக்குத் தேவையானது ஒரேயொரு விஷயம்தான், அது தமிழ்மொழி புலமை. தமிழையும் அதன் இலக்கணத்தையும் முறையாகப் படித்தால் வேலை மட்டுமல்ல, நல்ல சம்பளமும் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x