Published : 31 Jan 2021 08:23 AM
Last Updated : 31 Jan 2021 08:23 AM

போக்சோ: குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரண்

தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்தது குறித்துப் புகார் அளித்தால் வழக்கு, விசாரணை என்று குழந்தைகள் அலைக்கழிக்கப்படுவார்கள் என்கிற அச்சமே பலரையும் புகார் அளிக்கத் தயங்கச் செய்கிறது. உண்மையில், ‘போக்சோ’ (Protection Of Children from Sexual Offences) சட்டம் குழந்தை களுக்குப் பாதுகாப்பான சூழலையே ஏற்படுத்தித் தருகிறது என்கிறார் அரசு சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ்.

குழந்தைகள் மீதான வன் முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன்’ சார்பில் ‘அச்சம் தவிர்’ என்கிற இணையவழிக் கருத்தரங்கு அண்மையில் நடத்தப்பட்டது. அதில் பேசிய வழக்கறிஞர் ரமேஷ் கூறிய தகவல் கள் அனைவரும் அறிய வேண்டியவை. “பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளையும் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் வகையில் 2012-ல் இயற்றப்பட்டதுதான் ‘போக்சோ’ சட்டம். இது குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. குழந்தை மீது நிகழ்த்தப்பட்ட பாலி யல் வன்முறை குறித்துப் புகார் அளிக்க நாம் காவல்நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

புகாரைப் பெற்றுக்கொள்ள காவலரே வீட்டுக்கு வருவார். அப்படி வரும்போது சீருடையைத் தவிர்த்து சாதாரண உடையில் வருவார். குழந்தையிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்குக் குழந்தையை அழைத்துச் சென்றால் அங்கிருக்கும் நீதிபதி, பொதுவான வழக்குகளை விசாரிப்பதுபோல் இருக்க மாட்டார். அங்கிருக்கும் டேபிளில் சாக்லேட், பொம்மை போன்ற வற்றை வைத்து, குழந்தையிடம் நட்புடன் பேசுவார்.

சாட்சி சொல்லும்போது தனக்குத் தீங்கிழைத்தவரைப் பார்த்தால் குழந்தைகள் அச்சப்படக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காகக் குழந்தைகள் எந்தச் சூழலிலும் குற்றம்சாட்டப்பட்டவரைப் பார்க்க முடியாதபடி பார்த்துக் கொள்வார்கள். குழந்தைகள், தனியாக ஒரு அறையில் அமரவைக்கப்படுவார்கள். அங்கே பொம்மைகளோடு குழந்தைகள் விளை யாடிக்கொண்டிருக்க, குழந்தையின் செயல்பாடுகளை நீதிபதி மட்டுமே பார்க்க முடியும்.

நீதிமன்றத்தின் குறுக்கு விசாரணை களைச் சந்திக்க வளர்ந்த பெண்களே தயங்கும் போது, குழந்தைகள் எப்படித் தாங்குவார்கள்? அதனால்தான், ‘போக்சோ’ சட்டத்தின்படி வழக்கறிஞர் எந்தக் கேள்வியையும் நேரடியாகக் குழந்தையிடம் கேட்க முடியாது. தான் கேட்க விரும்புகிறவற்றை நீதிபதியிடம் சொல்லி, நீதிபதிதான் அதைக் கேட்டுத் தெளிவுபடுத்துவார்.

ஆண், பெண் இருபால் குழந்தைகளுக்கும் பொதுவான சட்டம் இது. பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் மட்டும்தான் பாலியல் துன்புறுத்தல் நடக்கும் என்றிருந்த நிலையில் ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடும் என்று இந்தச் சட்டம்தான் அவர்களுக்கும் துணைநிற்கிறது. இதில்தான் உச்சபட்ச தண்டனைகளும் வழங்கப்படும்.

இதில் கையாளப்படும் சொற்களும் கவனிக்கத்தக்கவை. இதில் எந்த இடத்திலும் ‘ரேப்’ என்கிற சொல்லே வராது. மாறாக ‘பாலியல் துன்புறுத்தல்’ என்பதைத்தான் பயன்படுத்துவார்கள். தவிர, இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றவாளிகளைச் சொல்வதுபோல் இதில் குழந்தைகள் சட்டத்தை மீறிவிட்டார்கள் என்று சொல்வதில்லை. சட்டத்தோடு முரண்பட்டு நிற்கிறார்கள் என்றுதான் சொல்வார்கள்.

பிற வழக்குகளில் பொய்யான புகார் கொடுத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், குழந்தைகளுக்கு அது கிடையாது. பதற்றத்தில் கொஞ்சம் மிகைப்படுத்தியோ தவறுதலாகவோ குழந்தைகள் எதையாவது மாற்றிச் சொல்லிவிட்டாலும் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் கிடையாது.
குற்றம் நடந்தது என்று தெரிந்தும் அதை மறைப்பதும் இதில் குற்றம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். பெற்றவர்களே மறைத்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை உண்டு.

புகார் கொடுப்பதில் இருந்து சட்ட நடவடிக்கைகளில் பங்குபெறும் வரையில் குழந்தையின் பெயரோ, குடும்பத்தினரைப் பற்றிய தகவலோ, குழந்தையை அடையாளம் காணும் வகையில் வேறு எந்தச் செய்தியுமோ ஊடகங்களில் வெளியிடக் கூடாது. விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘போக்சோ’ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிபதிகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால்தான் தற்போது நிறைய வழக்குகள் பதிவாகின்றன. வெளியே தெரிந்தால் அவமானம், நீதிமன்ற அலைச்சல்கள் போன்றவை குறித்த தவறான எண்ணங்கள் மாற்றப்பட்டுள்ளன.

18 வயதுக்குக் கீழே இருக்கிற குழந்தைகள் அனைவருமே மின்சாரம் பாயும் கம்பிகள். அவர்களை யார் தொட்டாலும் தூக்கியெறியப்படுவார்கள் என்கிற அச்சம்கூடக் குற்றத்தைத் தடுப்பதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால்தான் இந்தக் குழந்தைகள்நலச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x