Last Updated : 30 Jan, 2021 03:15 AM

 

Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

சுகதகுமாரி 1934-2020: அமைதிப் பள்ளத்தாக்கினுள் ஓர் எழுத்துப் பறவை

1970-களின் மத்தியப் பகுதி. சூழலியல், இயற்கைப் பாதுகாப்பு போன்ற சொல்லாடல்கள் தமிழ்ச் சூழலுக்கு, கேரளத்துக்கு, ஏன் இந்தியா முழுமைக்குமேகூடப் புதியவைதாம். இன்றைக்கு ஒப்பீட்டளவில் இந்த அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு கூடுதலாகி உள்ளது. அன்றைக்கு இவை உலக அளவிலேயே கூட நடைபழகத் தொடங்கியிருந்த காலம் எனலாம். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி அமைதிப் பள்ளத்தாக்கு. அரிய வகைத் தாவரங்கள், உயிரினங்கள், நீரோடைகள், பறவைகள் நிரம்பிய பகுதி அது. அங்கு ஒரு நீர் மின்நிலையத்தைக் கட்ட மாநில, மத்திய அரசுகள் விரும்பின. மின்சாரம் தேவைதான். ஆனால், எதை ஈடாக வைத்து மின்னாற்றலைப் பெறுவது?

இந்தத் திட்டம் நிறைவேறினால் அமைதிப் பள்ளத்தாக்கில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள், தாவரங்கள் அழியும். சூழலியல் நாசமாகும். அந்தப் பள்ளத்தாக்கின் அமைதியும் இயற்கை வளங்களும் காணாமல் போகும். இவற்றைத் தடுத்து அந்தக் காட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், அறிவியல் அறிஞர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், இளம் ஆண்கள், பெண்கள் அடங்கிய ஒரு சிறிய பாதுகாப்புக் குழு உருவானது. கல்விப்புல அறிஞரும் செயல்பாட்டாளருமான பேராசிரியர் எம்.கே. பிரசாத் ஒரு கட்டுரையில், இந்தப் பிரச்சினையின் தீவிரத்தன்மையை விளக்கி எழுதியிருந்தார். புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் சுகதகுமாரி அதைப் படித்தபோது, அவரது மனம் பதறியது.

களத்தில் இறங்கிய கவிஞர்

‘கோடரி வெட்டு விழப்போகிறது; ஏற்கெனவே தாமதமாகிவிட்டது' என்கிற தலைப்பில், ஒரே வாரத்தில் ஒரு முன்னணி மலையாள செய்தித்தாளில் சுகதகுமாரியே ஒரு கட்டுரையை எழுதினார். "பூமியின் மீதிருக்கும் செழுமை வாய்ந்த, அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள, மிகக் குறைந்தபட்ச அளவுக்கே ஆராயப்பட்டுள்ள உயிரினங்கள் வாழும் பகுதிகளுள் ஒன்று அமைதிப் பள்ளத்தாக்கு. ஆனால், அந்தப் பகுதியின் அமைதியைக் குலைத்து, உயிர்ப்பன்மையின் வலைப்பின்னலால் உருவாக்கப்பட்டுள்ள உயிர்ச்சங்கிலி யைத் துண்டிக்கும் திட்டம் அந்தப் பகுதியில் அமைக்கப்படப் போகிறது.

இதை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை, பொறுப்புணர்வுள்ள குடிமக்களுடை யது". சுகதகுமாரியின் கட்டுரை, பலரின் கவனத்தை ஈர்த்ததுடன், ஏராளமான எதிர்வினைகளையும் உருவாக்கியது. அரசியல்வாதிகளும், பொதுமக்களில் செல்வாக்குமிக்க ஒரு பகுதியினரும் வழக்கம்போல், ‘இதெல்லாம் கவைக்கு உதவாத விதண்டாவாதம்’ என ஒதுக்கித் தள்ளினர். திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று அரசு பிடிவாதம் பிடித்தது.

சுகதகுமாரி அடுத்து முயற்சியை மேற்கொண்டார். கேரளத்தின் முன்னணி எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் அனைவருக்கும் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த ஓர் அறைகூவல் கடிதத்தை எழுதியனுப்பினார். இந்தப் போராட்டம் தோற்றுப் போய்க்கொண்டிருக்கும் போராட்டமாகக் கருதப்பட்டது. “ஒவ்வொரு போருமே இரு தரப்புகளைக் கொண்டது: வெற்றி பெறப்போகும் தரப்பு; தோற்கப்போகும் தரப்பு. நாம் தோற்கப்போகும் தரப்பினராக இருக்கலாம். அதனால் என்ன? தோற்கும் தரப்புக்கும் வீரர், வீராங்கனைகள் தேவைதானே? அதில் நீங்களும் எங்களோடு இணைந்துகொள்வீர்களா?” என்று சுகதகுமாரி கேட்டிருந்தார்.

இந்த அறைகூவலின் விளைவு ஆச்சரியமூட்டுவதாயிருந்தது. இந்தியாவில், ஒரு காட்டுப்பகுதியைப் பாதுகாப்பதற்கென்றே முன் ஒருபோதும் நடந்திராத அளவுக்குப் பிரம்மாண்டமான, பெரும் வீரப்போராட்டமாக அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம் மாறியது. சுகதகுமாரியின் கடித அழைப்பு, ஒரு போர் முழக்கமாகிவிட்டது. ‘மரத்தின்னு ஸ்துதி' என்கிற தலைப்பில் அவர் எழுதிய பாடல், மரங்களை வணங்கும் வழிபாட்டுப் பாடலாக மட்டுமன்றி, பாதுகாப்பு இயக்கத்தின் தேசியகீதமாகவும் மாறிப்போனது.

திரண்ட மக்கள், எழுத்தாளர்கள்

இப்படியோர் அழைப்புக்காகவே காத்திருந்தவர்கள்போல், எழுத்தாளர் கள் அணிதிரண்டனர். முதல் எதிர்வினை யாரிடமிருந்து வந்தது தெரியுமா? கேரள இலக்கியப் பிதாமகர்களுள் ஒருவரான வைக்கம் முகம்மது பஷீரிடமிருந்து! ஒரு கடித உறையினுள், நூறு ரூபாய் நன்கொடையுடன், ‘தோற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போரில், என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்' என்கிற குறிப்பையும் எழுதியிருந்தார் பஷீர்.

பெரும்பான்மையாக இளம் ஆண்களும் பெண்களும் நிரம்பிய ஒரு மக்கள் படை, விரைவிலேயே போராட்டத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. விளைவாகத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் நீடித்தது. சுகதகுமாரி செயலாளராகப் பணியாற்றிய ‘பிரக்ருதி சம்ரக்‌ஷ்ண சமிதி' அமைப்பால் வீறுடன் பரவ லாக்கப்பட்ட இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும், மைய நீரோட்ட ஊடகங்களும் ஆதரவாக இருக்க வில்லை. ஆனால், “மக்கள் என்னுடைய குரலுக்குக் காதுகொடுப்பதில் கவனம் செலுத்தி, அக்கறை காட்டினர். காரணம், என் கவிதையின் மொழி வழியே பல ஆண்டுகளாக நான் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன்…” என்று சுகதகுமாரி எழுதியுள்ளார்.

கிட்டியது வெற்றி

விரைவிலேயே, இந்தப் போராட்டம் ஒரேயொரு காட்டைப் பாதுகாப்பதற்கானதாக மட்டுமன்றி, ஒட்டுமொத்த இயற்கையைப் பாதுகாப்பதற்கானதாகவும் அமைந்தது. இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதில் தாங்கள் ஆற்ற வேண்டிய பங்கு பற்றியும் இந்தியாவில் சாதாரண மனிதர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டிய முதல் போராட்டம் இதுதான்.

காடுகள் பாதுகாப்புக்கென்று ஓர் அவசரச் சட்டத்தை 1980இல் நிறைவேற்றியாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியது. காடுகளை, இயற்கை சாராத வேறு எந்தப் பயன்பாடுகளுக்கும் மடைமாற்றி அழிக்கக் கூடாது என்பது அந்த அவசரச் சட்டத்தின் நோக்கம். வேறு வழியின்றி, அமைதிப் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட இருந்த நீர் மின்நிலையத் திட்டத்தைக் கைவிட்டு விடுவது என மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்தன.

இந்தப் போராட்ட வெற்றிக்குப் பின்னர்தான், உயிர்க்கோளக் காப்புக்காடுகள், தேசியப் பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள் உருவாக்கம் குறித்த யோசனைகள் இந்தியா முழுவதும் சிறகு விரித்துச் செழுமையடைய தொடங்கின எனலாம்.

எழுத்துத் தாண்டவம்

அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டத்தில் சுகதகுமாரியின் பங்கேற்பு அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதற்குப் பின் இயற்கையைச் சுரண்டுவதையும், சீரழிப்பதையும் பற்றி, மரங்கள்-காடுகள்-நதிகள்-மண் ஆகியவற்றை அழித்துவிட்டு ‘வளர்ச்சி’ பற்றிய முழக்கங்கள் எழுப்பப்படு வதையும் பற்றி, ‘கட்டுத்தளைகள் அற்று’ தான் ஒரு எழுத்துத் தாண்டவமே நிகழ்த்தி வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மனிதத் துயரங்களின் குறியீடு களாகப் பெண்களும் இயற்கையும் ஒன்றாகிப் பின்னிப் பிணைந்து அவருடைய கவிதைகளிலும், எழுத்துகளிலும் இடம்பெறத் தொடங்கின. சுகதகுமாரியின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், “எனக்குள் திரண்டெழுந்து பொங்கிய வலி, என் இதயத்தை நிறைத்துவிட்டது. அந்த வலியைத் தாங்கிக்கொள்ளவே முடியாத அளவுக்கு, அது கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாகிவிட்டபோது தான் நான் எழுதினேன்…”.

செத்துக்கொண்டிருந்த காடுகள், வேரறுக்கப்பட்ட ஆறுகள், மலைகள் பற்றி, வல்லாங்கால் எளிய மனித இதயங்கள் சிதைக்கப்பட்டுக் குரூரமான முறைகளில் தூக்கியெறியப்படுவதைப் பற்றி, அன்பின் - ரத்தத்தின் வண்ணங்கள் பற்றி, தோற்றுப்போன லட்சியங்கள் பற்றி, தோற்றுக்கொண்டிருக்கும் போர்களைப் பற்றி, மேகங்களைக் கைகளால் தொடுவதைப் பற்றி, இரவு நேர மழையுடன் உரையாடுவதைப் பற்றியெல்லாம் சுகதகுமாரி தொடர்ந்து எழுதிவந்திருக்கிறார்.

எழுத்துடன் நின்று விடவில்லை. அமைதிப் பள்ளத்தாக்குப் பிரச்சினைக்குப் பின், கேரளத்தில் நடை பெற்ற, முதன்மையான பெரும்பாலான சூழலியல் போராட்டங்களிலுமே முன்னணிக் கதாபாத்திரத்தை அவர் வகித்து வந்திருக்கிறார். பூயம்குட்டி, ஜீரகப்பாறை, அச்சன்கோவில், பொன்முடி, மாவூர், கூடங்குளம், விளாப்பில்சாலை - என அந்தப் போராட்டப் பட்டியல் நீள்கிறது. அவரது சொந்த ஊரான அரண்முலாவிலேயே ஒரு விமான நிலையம் அமைக்கத் திட்டமிட்டதை எதிர்த்து நடைபெற்ற வெற்றிகரமான போராட்டத்திலும் அவர் முன்னணியில் நின்றிருக்கிறார்.

அற்புத மாயம்

அமைதி பள்ளத்தாக்குப் போராட்டத்தின் நடுவேதான் சுகதகுமாரி ஒரு புரிதலைப் பெற்றார். அநீதி, சமூகத்தீமைகள் ஆகியவற்றுக்கு எதிராகவும், சூழலியல் - அறிவியல் சார்ந்த கரிசனங்களுக்கு ஆதரவாகவும் அரசியல்வாதிகளையும் அறிவியலாளர்களையும் காட்டிலும் படைப்பூக்கமிக்க எழுத்தாளர்கள், தமது இலக்கியப் படைப்பாற்றல் திறன்கள், புகழ், தார்மிக அற வலிமை ஆகியவற்றுடன் உள்ளூர் மக்களின் மொழிகளில் மேம்பட்ட பரப்புரையை மேற்கொள்ள முடியும் என்கிற புரிதல்தான் அது. இப்படித் தமது ஒட்டுமொத்த ஆற்றலுடன் பரப்புரைகளை முன்னெடுப்பதன் மூலம், சமுதாயம் முழுமையையுமே ஆர்த்தெழச் செய்துவிட முடியும் என்கிற புரிதல்தான் அது!

அந்த உலகப் புகழ்பெற்ற போராட்டத்தின்பால் தான் ஈர்க்கப் பட்டதும், தனக்கு என்ன நேர்ந்தது என்று கவித்துவ அழகுடனும் உண்மையொளி துலங்கவும் இப்படிச் சொல்லியிருந்தார் சுகதகுமாரி: “ஒரு பறவையைப் போல் அந்தப் பள்ளத்தாக்கினுள் சிறகடித்துப் போய்த் தரையிறங்கினேன்…!”

அப்போதிருந்து, இத்தகைய ஓர் உள்ளார்ந்த - புரிதல் மிக்க உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய வையாக அவருடைய கவிதைகளும் பிற எழுத்துகளும் அமையத் தொடங்கின. அவை தமக்கேயுரிய மௌனமொழி வெளிப்பாட்டை, நுண்ணுணர்வை, இசைப்பாடல் பண்பைத் தக்கவைத்துக் கொண்டவையாக இருந்தன. இயற்கை யையும், அதன் படைப்புயிர்களையும் பற்றி எழுதுகையில், அவருடைய வார்த்தைகளில் ஓர் அற்புத மாயம் நிகழ்ந்துவிடுகிறது. அவருக்கே உரித்தான சிறப்புப் பண்பு வாய்ந்த ஓர் அரசியலைக் குறிப்பாகக் காட்டி நிற்கும் அடையாளங்களாகவும் அவருடைய கவிதைகள் ஆகின. “மனித உயிர்களின் தரப்பில் நிற்கும் அரசியல் அது“ என்று அவரே விவரித்திருக்கிறார்.

அதற்குப் பின் கேரளத்தின் காடுகள், ஆறுகள், மண், மலைகள், பறவைகள், யானைகள் போன்ற இயற்கைச் செல்வங்களைப் பாதுகாக்கும் குறிக்கோளுடன் நடத்தப்பட்ட எண்ணற்ற போராட்டங்களில் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்திவந்தார் சுகதகுமாரி. இந்தப் போராட்டங்களில் தன்னுடைய ஆயுதங்களாக அவர் பயன்படுத்தி வந்தவை கீழ்க்கண்ட இரண்டு மட்டுமே: ‘ஒரு பேனாவும் உறுதியான முதுகெலும்பும்!'

(நன்றி: ’கலர் ஆஃப் லவ்’, ஆர்.ராமகிருஷ்ணன், ஃபிரண்ட் லைன், ஜனவரி 29, 2021)

கட்டுரையாளர் எழுத்தாளர், தொடர்புக்கு: kamalalayan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x