Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

இயக்குநரின் குரல்: குற்றம் புரிந்தவன்!

யூடியூபைக் கலங்கடித்த ‘தங்லிஷ்’ எனும் வைரல் குறும்படத்தின் மூலம் புகழ்பெற்றவர் துவாரக்ராஜா. அதன்பின் பல குறும்படங்களை இயக்கி, நடித்த அனுபவத்துடன், ‘காதல் கசக்குதய்யா’ படத்தை இயக்கி கவனிக்கவைத்தார். தற்போது ‘பரோல்’ என்கிற தனது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அது பற்றி அவருடன் சிறிய உரையாடல்..

‘பரோல்’ என்கிற பிரபலமான சொல் தலைப்பாகக் கிடைத்திருக்கிறதே?

அதிர்ஷ்டம்தான்! கதைக்குப் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடுத்தபின், அதைத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவுசெய்யலாம் என்று போனால், ஏற்கெனவே அது பதிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால், ‘பரோல்’ என்கிற இந்தத் தலைப்பை அதிர்ஷ்டவசமாக யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. கொலைக் குற்றவாளியாக சிறையில் இருக்கும் தனது அண்ணனை, 24 மணி நேர பரோலில் அவரது தம்பி வீட்டுக்கு அழைத்துவரும்போது நடக்கும் கதை என்பதால் இந்தத் தலைப்பைப் பிடித்தேன்.

தலைப்பே இதுவொரு க்ரைம் த்ரில்லர் படம் எனச் சொல்கிறது..

ஆமாம்! க்ரைம் த்ரில்லர் என்றாலே பெரும்பாலும் குற்றப் புலனாய்வுப் படமாக மாறிவிடும், அல்லது ‘கைதி’ படம்போல் ஆக்‌ஷன் த்ரில்லராக மாறிவிடும். ஆனால், இதில் குடும்ப உணர்வுகள் கதையை நகர்த்திச் செல்லும். இதில் குடும்பம், உறவுகள் இடையிலான பிணைப்பை ஒரு குற்றப் பின்னணி கொண்ட கதையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன். 48 மணிநேரத்தில் நடக்கும் கதை. ஓர் இரட்டைக் கொலைச் சம்பவம் பற்றிய செய்தியைப் பத்திரிகையில் படித்தேன்.

கொலை செய்தவரிடம் அந்த நிமிடத்தில் இருந்த உணர்ச்சி நிலை என்ன, கொலை செய்தபிறகு அவரது உணர்ச்சி நிலை என்ன என்பதை அவரைத் தேடிச் சென்று அறிந்தபோது, அதைப் படமாக்க வேண்டும் எனத் தோன்றியது. உறவுகளுக்காகத் தியாகம் செய்யலாம், விட்டுக்கொடுத்துப் போகலாம். ஆனால், குற்றம்செய்வது தியாகம் ஆகாது என்பதை மறைமுகமாகச் சொல்லும் படமாக இதை உருவாக்கியிருக்கிறேன். சென்னை வியாசர்பாடியிலிருந்து தொடங்கும் கதை திருச்சி, மதுரை என்று தொடரும் பயணத்தில் நடக்கிறது. உண்மைச் சம்பவத்துடன் நம்பகமான அளவுக்குக் கற்பனையைக் கலந்திருக்கிறேன்.

நடிகர் குழு பற்றிக் கூறுங்கள்?

வேகமாக வளர்ந்துவரும் இரண்டு நடிகர்கள் அண்ணன் - தம்பியாக நடித்திருக்கிறார்கள். ‘சேதுபதி ஐபிஎஸ்’ படத்தில் எஸ்.ஐ. மூர்த்தியாக நடித்துப் புகழ்பெற்ற லிங்கா இதில் அண்ணனாக நடித்துள்ளார். ‘மாநகரம்’, ‘பீச்சாங்கை’ படங்களில் நடித்துக் கவர்ந்த ஆர்.எஸ்.கார்த்திக் தம்பியாக நடித்துள்ளார். இருவருமே இயற்கையாக நடிக்கக்கூடிய திறமைசாலிகள். அண்ணன் - தம்பியாக வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுடன் மோனிஷா, கல்பிகா, வினோதினி, ஜானகி சுரேஷ் உட்படப் பலர் நடித்திருக்கிறார்கள். விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x