Last Updated : 28 Jan, 2021 07:07 AM

 

Published : 28 Jan 2021 07:07 AM
Last Updated : 28 Jan 2021 07:07 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 25: நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்

“இதைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லை யென்றால், உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது” என்று இயேசு தீர்க்கமாகச் சொன்னார். எச்சரிக்கை உணர்வோடு எதைத் தவிர்க்க வேண்டும் என்று இயேசு சொன்னார்? “மக்கள் பார்க்க வேண்டும் என்று அவர்கள் முன்னால் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.”

இறைநம்பிக்கையின் வெளிப்பாடுகளாக - இறைவ னுக்காக - செய்யப்படுகிற மூன்று நற்செயல்களை இயேசு குறிப்பிட்டுச் சொன்னார். அவை தானதர்மம், இறைவேண்டல், நோன்பிருத்தல். அவர் வாழ்ந்த அந்தக் காலத்திலும் ஒரு முக்கியமான உண்மையை மறந்து செயல்பட்ட சில மனிதர்கள் இருந்தனர். யூதச் சட்டத்தை மிக நுணுக்கமாகக் கடைப்பிடிப்பதில் முனைப்போடு செயல்பட்ட பரிசேயர்கள் படித்தவர்களாகவும் பணக்காரர்களாகவும் இருந்தனர். அவர்களே இந்த அடிப்படையான உண்மையை மறந்துவிட்டு செயல் பட்டது வேடிக்கையான வேதனை. இறைவனுக்காகவே செய்யப்படு கிற இந்த மூன்று காரியங்களையும் ஏதோ மக்களுக்காக, மக்கள்முன் செய்யப்பட வேண்டிய செயல்கள் போல அவர்கள் இவற்றைச் செய்தனர்.

மற்றவர்கள் பார்க்கத் தானம்

முதலாவது எளியோருக்கு தானதர்மம் செய்வது. ‘வெளி வேடக்காரர்' என்று இயேசு பலமுறை குறிப்பிட்ட பரிசேயர்கள் தானதர்மம் செய்யும்போது மக்கள் தங்களைப் பார்க்க வேண்டும், தாங்கள் செய்யும் தானதர்மங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தனர். “வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்” என்பதைச் சொல்லிவிட்டு, அவரைப் பின்பற்றுவோர் தான தர்மம் செய்யும்போது, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொன்னார்.

“நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும். புகழ் வெளிச்சம் தேடாமல் யாருக்கும் தெரியாமல் தர்மம் செய்யுங்கள்” என்று அறிவுறுத்தினார் இயேசு.

மூன்று பேர்

தானதர்மம் செய்வதில் மூன்று பேர் இருக்கிறார்கள். முதலாவது இறைவன். இரண்டாவது தானம் செய்கின்ற நபர். மூன்றாவது இந்த உதவியை பெற்றுக் கொள்கிற ஏழை எளியோர். தாங்கள் தர்மம் செய்வதை பிறர் பார்க்க வேண்டும் என்று தம்பட்டம் அடித்து, ஊரைக் கூட்டி, எல்லோ ரும் பார்க்கும் விதத்தில் செய்வோர் தங்களை மட்டுமே நினைத்துக்கொண்டு, இறைவனையும் அவர் நேசிக்கும் ஏழை எளிய மக்களையும் மறந்துவிடுகின்றனர். இவர்கள் செய்யும் தானதர்மம் ஏழைகளைச் சென்றடைந்தாலும், அவர்களின் இலக்கு தங்களுக்கு கிடைக்கப்போகும் புகழ் மட்டுமே. அதனால், ஏழை எளிய மக்கள் வெறுமனே புகழ்பெறுவதற்கு இவர்களுக்கு உதவும் கருவிகள் ஆகிவிடுகின்றனர்.

இறைவன் தங்களுக்குத் தந்ததை நன்றியோடு நினைத்து, அதில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுக்கிறோம் என்பதை இவர்கள் உணர்ந்திருந்தால் மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்ற கட்டாயத் தோடு செயல்பட்டிருக்க மாட்டார்கள். இறைவனுக்குச் செய்வதை இறைவன் பார்த்தால் போதும். இரண்டாவது அறச்செயல் இறைவேண்டல் - இறைவனிடம் பிரார்த்தனை செய்தல். தானதர்மத்திலாவது இறைவனையும் இவர்களையும் தவிர மூன்றாவதாக ஏழை எளிய மக்கள் இருக்கிறார்கள். இறைவேண்டலில் இவர்களும் இறைவனும் மட்டும்தானே? இறைவனோடு பேசுவது தானே இறைவேண்டல்? இறைவன் நமக்குச் செய்யும் எண்ணற்ற நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி கூறுவதும் இறை வேண்டல். தாம் செய்த குற்றங்களை எண்ணி மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவது இறைவேண்டல். இறுதியாக, நமது ஏக்கங்களைச் சொல்லி, அவற்றை அவர் நிறைவுசெய்யுமாறு கேட்பதும் இறைவேண்டல்.

இறைவனுக்கும் நமக்கும் இடையே நிகழும் இச்செயலை மக்கள் பார்க்க வேண்டும் என்று செயல்பட்டால் என்ன பொருள்?

“அவர்கள் தொழுகைக் கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டிய இயேசு அவரது சீடர்கள் எவ்வாறு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று. கதவை அடைத்துக்கொண்டு, காண முடியாத இறைத்தந்தையிடம் மன்றாடுங்கள்” என்றார்.

விகாரப்படுத்த வேண்டாம்

மூன்றாவது அறச்செயல் நோன்பிருப்பது. உணவை மறுத்து நோன்பிருப்பதன் நோக்கம் என்ன? தீயதைத் தவிர்க்க அவசியமான மன வலிமை பெறுவதற்காகச் செய்யும் தியாகமாகவும் நோன்பிருப்பதைப் பார்க்கலாம். இதையும் மறந்துவிட்டு வெளிவேடக்காரர்கள் நோன்பிருக்கும்போது என்ன செய்கிறார்கள்? “தாங்கள் நோன்பிருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டிய இயேசு, அவரது சீடர்கள் எப்படி நோன்பிருக்க வேண்டும் என்பதை விளக்கினார். “நீங்கள் நோன்பிருக்கும்போது, உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்போது நீங்கள் நோன்பிருப்பது மனிதருக்குத் தெரியாது.”

ஆற்றல்மிக்க அறச்செயல்களை எந்த நற்பயனும் தராத வெற்றுச் செயல்களாக ஆக்குவது எது? புகழ் எனும் போதை மீதிருக்கிற மோகம்தான்.

(தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x