Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார், டிங்கு?

- என். ஷாஜஹான், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

சூயிங்கத்தை இவர்தான் கண்டுபிடித்தார் என்று எளிதில் சொல்லிவிட முடியாது. சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதிய கற்காலத்திலேயே மனிதர்கள் சூயிங்கம் போன்ற பொருளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் ஃபின்லாந்தில் கிடைத்திருக்கிறது. மாயன், அஸ்டெக் இன மக்களும் மரப்பிசினைப் பயன்படுத்தி சூயிங்கம் போன்ற ஒரு பொருளை உருவாக்கி, மென்று இருக்கிறார்கள். பற்களைச் சுத்தம் செய்வதற்கும் வாயிலிருந்து துர்நாற்றம் வராமல் இருப்பதற்கும் இந்தச் சூயிங்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கிரேக்கர்களும் மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு, சூயிங்கம் போன்ற பொருளை, பற்களின் நலத்துக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பூர்வகுடி அமெரிக்கர்களிடமிருந்து கற்றுக்கொண்டு, சில விஷயங்களில் மாற்றம் செய்து நவீன சூயிங்கத்தை 1848-ம் ஆண்டு ஜான் பி. கர்டிஸ் உருவாக்கினார். 1850-ம் ஆண்டு பாரஃபின் மெழுகைக் கொண்டு சூயிங்கம் தயாரிக்கப்பட்டு, பிரபலமானது. நறுமணத்துடன் கூடிய சூயிங்கத்தை, 1860-ம்ஆண்டு ஜான் கோல்கன் முதன் முதலில் உருவாக்கினார். இனிப்புச் சுவையுடைய சூயிங்கத்தைத் தயாரித்து, 1869-ம்ஆண்டு வில்லியம் செம்பிள் முதல் முறை காப்புரிமைப் பெற்றார்.

1884-ம் ஆண்டு ப்ளாக் ஜாக் என்பவர் இனிப்பும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட அதிமதுரத்தை வைத்து சூயிங்கத்தை உருவாக்கினார். 1899-ம்ஆண்டு ரிக்ளே’ஸ் ஸ்பியர்மின்ட் கம் வெகு வேகமாகப் பிரபலமானது. இன்றுவரை பயன்பாட்டில் இருந்துவருகிறது. 1960-ம் ஆண்டு சிந்தடிக் ரப்பரைப் பயன்படுத்தி சூயிங்கம் தயாரிக்கப்பட்டது. இது செலவு குறைவு என்பதால் பலரும் இந்த நுட்பத்தில் சூயிங்கத்தைத் தயாரித்து வருகின்றனர், ஷாஜஹான்.

பேய், பாம்பு, பரீட்சை என்ற பெயரைக் கேட்டாலே பயம் வந்துவிடுகிறது. இந்தப் பயம் உணர்ச்சி எப்படி உண்டாகிறது, டிங்கு?

- கே. சிந்துஜா, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

இதயம், தசை, நரம்புகள், ரத்தக்குழாய் போன்றவற்றின் இயக்கத்துக்கும் சுவாசம், பார்வை போன்ற பல்வேறு பணிகளுக்கும் நம்மைத் தயார் செய்வது, அட்ரீனலின் ஹார்மோன் தான். சண்டை, ஓட்டம், பயம்ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் உடல் செய்ய வேண்டிய விரைவான செயல்பாடுகளுக்குத் தயார் செய்வதும் இந்த ஹார்மோன்தான். பேய், பாம்பு என்றால் பயத்தில் ஓட ஆரம்பிப்பதற்கும், கோபம் வந்தால் சண்டை போடுவதற்கும், பரீட்சை, இருளைக் கண்டால் பயம் வருவதற்கும் அட்ரீனலின் ஹார்மோன் அதிகமாகச் சுரந்து உடலியக்கங்களைச் செயல்படுத்துவதுதான் காரணம். எதையாவது பார்த்து உடல் சிலிர்ப்பதற்கும் இந்த ஹார்மோன் தான் காரணம், சிந்துஜா.

மனிதர்கள் நிலாவுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

- ரா. அன்புமதி, 7-ம் வகுப்பு, மைக்கேல் ஜாய் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.

இந்த அழகான, அற்புதமான பூமியையே மனிதர்களால் மாசு படுத்தாமல் பாதுகாக்க முடியவில்லை. எதற்காக நிலாவுக்கும் செல்ல வேண்டும் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், மனிதர்களுக்குப் புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வத்தின் காரணமாகத்தான் மனித இனம் இவ்வளவு பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. பூமிக்கு அருகில் இருக்கும் துணைக்கோள் நிலா. பூமியைத் தவிர, வேறு ஏதாவது கோள் அல்லது துணைக்கோளில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று அறிந்துகொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பினாலும் திரும்பி வரக்கூடிய வாய்ப்பு இன்றைய சூழ்நிலையில் இல்லை. ஆனால், நிலாவுக்குச் செல்வதும் திரும்பி வருவதும் சாத்தியமானது என்பதால் ஆராய்ச்சிகள் கொஞ்சம் எளிதாக இருக்கின்றன, அன்புமதி.

நம் காது அருகில் வந்து கொசு பாடுகிறதே ஏன், டிங்கு?

- எம். தக்‌ஷித் கிருஷ்ணா, 3-ம் வகுப்பு, பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி, கோவை.

நம் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறும் கார்பன்டை ஆக்ஸைடால் கவரப்பட்டு நம் தலைக்கு அருகில் வருகிறது கொசு. எந்த இடத்தில் இறங்கி ரத்தத்தை உறிஞ்சலாம் என்று வட்டமிட்டபடி யோசித்து, சட்டென்று கடித்துவிட்டுப் பறக்கிறது. கொசு பறக்கும்போது ரீங்காரம் வந்துகொண்டேதான் இருக்கும். தலைக்கு அருகில் வரும்போது ரீங்காரச் சத்தம் நமக்கு நன்றாகக் கேட்கிறது. அதனால் நம் காதில் பாடுவதுபோல் தெரிகிறது, தக்‌ஷித் கிருஷ்ணா.

வயதானவர்களுக்குக் கூன் விழுகிறதே ஏன், டிங்கு?

- ஆர்.ஜோஷ்னா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

முதுமை காரணமாக கழுத்து, முதுகெலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டிருக்கும். இதனால் உடலின் எடையைத் தாங்க முடியாமல், முதுகு வளைந்துவிடும். நோய் காரணமாகவும் முதுகு வளையும். கடினமான வேலை செய்பவர்களுக்கும் தலையில் பாரம் சுமப்பவர்களுக்கும் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு முதுகு வளையலாம். சத்துக்குறை பாட்டாலும் முதுகு வளையலாம், ஜோஷ்னா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x