Published : 25 Jan 2021 10:14 AM
Last Updated : 25 Jan 2021 10:14 AM

கரோனா தடுப்பூசி: இந்தியாவின் முன் நிற்கும் சவால்கள்

ramesh.m@hindutamil.co.in

2020-ம் ஆண்டு கரோனா தொற்று பீதியிலேயே கழிந்துவிட்டது. வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு, போக்குவரத்தில் இடையூறு என அன்றாட வாழ்வை முடக்கிப்போட்டதன் மூலம் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது. எனினும், கரோனாவுக்கு தடுப்பூசி தயாராகிவிட்டது என்ற நல்ல செய்தியோடு புத்தாண்டு பிறந்துள்ளது.

இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருவதும் நல்ல அறிகுறியே. இதனிடையே இரண்டாவது அலையாக புதிய வகையில் அதி விரைவாக பரவும் தன்மை கொண்டதாக கரோனா உருவெடுத்திருக்கிறது என்ற செய்தி அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை புதிய வகை கரோனா தீவிரம் கொண்டால், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் பெரிய அளவிலான ஊரடங்கு கொண்டுவரப்படுமா என்ற அச்சமும், அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடிகளும் பலருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில்தான் கரோனோ தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

களம் காணும் தடுப்பூசிகள்

இந்தியாவில் தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா ஆகியவற்றின் கூட்டுடன் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோவாக்ஸின்’ தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் மூன்று கோடி பேருக்குத் தடுப்பூசி போடப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவன சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைத்து முன்களப் பணியாளர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், காவல்துறையினர், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு முதல் கட்டமாக தடுப்பு ஊசி போடப்படும்.இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட வேண்டும். முன்களப் பணியாளகர்கள் மூன்று கோடி பேருக்கு ஆகும் செலவை மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் இதுவரையில் 2.5 கோடி பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் இந்திய அரசின் முயற்சி பாராட்டுக்குரியது. தவிர, 30 கோடி பேருக்கு தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் போடப்பட்டு விடும் என்ற பிரதமரின் அறிவிப்பும் வரவேற்கத்தகது.

தடுப்பூசிகள் மீதான நம்பகத்தன்மை?

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கினாலும், தடுப்பூசி குறித்து மக்களிடையே அச்சம் நிலவுவதை கவனிக்க முடிகிறது. 100பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டால் அதில் 45 பேர் வருவதில்லை. முன்களப் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் மத்தியிலேயே முதல் கட்ட தடுப்பு ஊசி போடும் பணியில் இலக்கை எட்ட முடியாமல் போனால் பொதுமக்கள் மத்தியில் இதை முழுமையாக செயல்படுத்துவது மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

வெளிநாட்டு தடுப்பூசிகள் அனைத்து பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகே மக்களுக்குச் செலுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் தயாராகும் இரண்டு தடுப்பூசிகளும் மூன்றாம் கட்ட ஆய்வை முடிக்கவில்லை. அதன் காரணமாகவே இந்திய தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே அச்சம் நிலவுகிறது. ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்தாலும், அத்தடுப்பூசியைக் கண்டுபிடித்தது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். சீரம் தயாரித்த ‘கோவிஷீல்ட்’தான், இந்தியாவில் மூன்றாம் கட்ட ஆய்வை நிறைவு செய்யவில்லையே தவிர பிரிட்டனில் மூன்று கட்டப் பரிசோதனைகளையும் அத்தடுப்பூசி நிறைவு செய்திருக்கிறது. அதனால், அந்த தடுப்பூசி குறித்து பெரிதளவு அச்சம் நிலவவில்லை.

ஆனால், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆய்வை நிறைவு செய்யவில்லை. அதன் செயல்திறன் உறுதி செய்யப்படவில்லை. இந்தச் சூழலில்தான் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகிறது. பொது மக்கள் மட்டுமல்ல, மருத்துவ நிபுணர்களுமே இந்திய தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர். பொதுவாக எந்த ஒரு நோய்க்கான தடுப்பு ஊசியும் அது தயாரிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுவதை நிரூபிக்க குறைந்தது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரைஆகும். ஆனால் தற்போது உருவாகியுள்ள நெருக்கடி கரோனா தடுப்பூசியை குறுகிய காலத்தில் கண்டறிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, அத்தடுப்பூசிகளின் செயல்பாடுகளை பரிசோதிப் பதற்கான சூழலிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

1 கரோனா பரவல் குறைந்தாலும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதற்கான விளக்கத்தை மக்களிடம் அரசு எடுத்துரைக்க வேண்டும்.

2 மக்களின் நம்பிக்கையப் பெற வேண்டும். தடுப்பு ஊசி பாதுகாப்பானதுதான் என்பதையும் அது ஆரோக்கியமான மனிதர்களை கரோனா நோய் தொற்றிலிருந்து நிச்சயம் காப்பாற்றும் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளது.

3 சொட்டு மருந்து அளிக்க செவிலியர்களை அனுப்புவது போல கரோனா தடுப்பூசியைப் போட முடியாது. தடுப்பூசிகளை தயாரிப்பது மட்டுமல்ல, அது குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும், மக்களின் நம்பிக்கையப் பெற்று முறையான திட்டமிடலுடன் ஏழை, பணக்காரர் பாகுபாடற்று அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதும் அரசின் கடமையாகும்.

தடுப்பூசி அவசியமா?

இவையெல்லாம் தவிர, கரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் இத்தகைய தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் இந்நோய் தொற்றுக்கு ஆளாயினர். ஆனால் இப்போது தினசரி 384 பேர் என்ற அளவுக்கு தொற்று பரவல் குறைந்துள்ளது. நகர்பகுதிகளில் மத்திய தர வகுப்பினர் மட்டுமே அதிக அளவில் இந்நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில், அதிலும் மிக மோசமான சுகாதாரச் சூழல் நிலவும் பகுதிகளில் வசிப்பவர்கள் கூட அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என்பது இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பண்டிகைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் நோய் தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவுக்கு நோய் பரவவில்லை. இதற்குக் காரணம் பலருக்கும் நோய் தொற்று ஏற்பட்டு அவர்களிடம் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகி இருக்கக்கூடும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பத்துறையை (டிஎஸ்டி) சேர்ந்த நிபுணர் குழுவினர் சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். கணித சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த முடிவின்படி நோய் தொற்று ஒருவருக்கு கண்டறியப்பட்டிருந்தால் ஏற்கெனவே 90 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கக்கூடும் என்பதாகும்.

இதே கணக்கீட்டின்படி பார்த்தால் இந்தியாவில் 60 சதவீதம் பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி, உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறனில் மீண்டு வந்துள்ளனர் என்று அர்த்தம். அதாவது, கரோனாவை எதிர்கொள்ளும் வகையில் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் இயற்கையாகவே உருவாகியுள்ளது என்பதாக புரிந்துகொள்ளலாம். இதுபோக, வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கரோனா தொற்று இந்தியாவில் குறைந்துவிடும் என கணிப்புகள் வெளிவருகின்றன. இவ்வாறு, நோய் தொற்று குறைந்து வரும் சூழலில் தடுப்பு ஊசி அவசியமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

ஆக, ஏன் கரோனா பரவல் குறைந்தாலும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதற்கான விளக்கத்தை மக்களிடம் அரசு எடுத்துரைக்க வேண்டும். மக்களின் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். தடுப்பு ஊசி பாதுகாப்பானதுதான் என்பதையும் அது ஆரோக்கியமான மனிதர்களை கரோனா நோய் தொற்றிலிருந்து நிச்சயம் காப்பாற்றும் என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயமும் அரசுக்கு உள்ளது. மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க முடிவு. மக்கள் பிரதிநிதிகள் போட்டுக் கொள்வதன் மூலம்தான் இந்த தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க முடியும்.

சுகாதார ஏற்றத்தாழ்வு

மிகவும் குளிர்ச்சியான சூழலில்தான் இந்த தடுப்பு மருந்துகளை பாதுகாக்க வேண்டும். முதல் நாளிலேயே தலைநகர் டெல்லியில் 1,000 குப்பிகள் வீணானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இத்திட்ட செயல்பாட்டை சரிவர செயல்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தடுப்பு மருந்து தருவதில் இந்தியாவுக்கு மிகுந்த அனுபவம் உள்ளது. ஆனாலும் முந்தைய தடுப்பூசிகளைப் போன்றதல்ல இது என்பதையும் உணர்தல் அவசியம். இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு போலியோ பாதிப்பில்லாத நாடாக இந்தியா உருவாகியுள்ளது.

ஆண்டுக்கு 20 கோடி பேருக்கு இவ்வித சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா தடுப்பு ஊசி போடப்படவேண்டும். அதுவும் இரண்டு தவணைகளில் போடப்படவேண்டும். மேலும் இந்த தடுப்பு ஊசி போடப்பட்ட நபருக்கு அடுத்த 30 நிமிஷங்களில் எத்தகைய பாதிப்பு அல்லது ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஊசி மருந்தை செலுத்துவதற்கு திறமையான மருத்துவர்கள் அடங்கிய குழு இருப்பது அவசியம்.

ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அதற்குரிய மாற்று மருந்துகளை அளிக்கும் வகையிலான மருத்துவ உபகரணங்களும் அவசியம். சொட்டு மருந்து அளிக்க செவிலியர்களை அனுப்புவது போல கரோனா தடுப்பூசியைப் போட முடியாது. தடுப்பூசிகளை தயாரிப்பது மட்டுமல்ல, அது குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும், மக்களின் நம்பிக்கையப் பெற்று முறையான திட்டமிடலுடன் ஏழை, பணக்காரர் பாகுபாடற்று அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதும் அரசின் கடமையாகும். இல்லையென்றால் பொருளாதாரத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வைப் போல மனிதர்களின் சுகாதார சூழலிலும் ஏற்றத்தாழ்வு உருவாக வழியேற்பட்டுவிடும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x