Published : 10 Nov 2015 02:21 PM
Last Updated : 10 Nov 2015 02:21 PM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: லட்சுமியாக மாறிய சரஸ்வதி

பெற்ற அறிவைத் தேர்வுகளில் எழுத்து வடிவமாக்கி மதிப்பெண்ணாக உருமாற்றும் கட்டாயம் இருக்கும்வரை கல்வி கசக்கவே செய்யும். - கல்வியாளர் டெபாஷிஸ் சாட்டர்ஜி

தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வது, தேர்வை நடத்துவது, விடைத்தாளைத் திருத்துவது என்று ஆசிரியர்களின் வேலையை இன்று மூன்றே வாக்கியங்களில் அடக்கிவிடலாம். இத்தகைய தேர்வு அடிப்படையிலான கல்வி முறைமை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882- ல் ஹண்டர் கமிஷன் எனும் கல்விக் குழுவின் பரிந்துரைகளின்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கான கணக்காயர், எழுத்தர் பதவிகளுக்கான தேவைகளுக்காகவே இப்படி ஒரு கல்வி முறைமை திணிக்கப்பட்டு, சித்ரவதையாய் நீடிக்கிறது.

எழுது, எழுது, எழுது

உங்களுக்கு ஒரு விஷயம் பற்றிய அறிவு இருந்தால் போதாது. அதை எழுதிக் காட்ட வேண்டும். இல்லையேல் அப்படி ஒரு அறிவை நீங்கள் பெற்றுள்ளதை இந்தக் கல்விமுறை ஏற்பது கிடையாது. உதாரணமாக, நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது எது என்று ஒரு குழந்தைக்குத் தெரியும். அதாவது யானை. அதற்காக மதிப்பெண் கிடையாது. அந்தக் குழந்தைக்கு அதை எழுதிக் காட்டத் தெரிய வேண்டும். ஆங்கில மீடியமாக இருந்தால் ‘எலிஃபண்ட் (Elephant)’ என்று எழுத்துக்கூட்டி சொல் (spelling) வடிவ தவறு இல்லாமல் எழுதினால் மட்டுமே மதிப்பெண். இந்த ஸ்பெல்லிங் (தமிழோ, ஆங்கிலமோ) நம் கல்வியின் கையில் உள்ள ஒரு பிரம்பு ஆகிவிட்டது. அது குழந்தைகள் மீது ஏற்படுத்தும் வலி நம் கல்விக்கே உரிய பலவீனம்.

இன்று நீங்கள் கணினியில் (அல்லது உங்கள் கைபேசியில்) தவறாக ஒரு சொல்லைத் தட்டச்சு செய்தாலும் அந்தக் கருவிகள் தானாகவே அந்தச் சொல்லின் எழுத்துப் பிழையைத் திருத்திக்கொள்கின்றன. ஆனாலும் நம் கல்வி இன்னும் மாறாமல் இருக்கிறது. சரியாக எழுதுவது என்பதை மட்டும் வைத்து ஒரு குழந்தையின் புத்திக் கூர்மையை எடை போட முடியாது என்பதை எனக்குக் காட்டியவர்தான் சரஸ்வதி.

கற்றல் குறைபாடு

இப்படிச் சொல்லாக்கத்தைப் புரிந்து எழுதுகிற எண்ணத்தை எழுத்து வடிவமாக ஆக்குகிற திறனை இழப்பது என்பது ஒரு உளவியல் குறைபாடு என முதலில் அறிவித்தவர் ரெனெ-ஸாஸோ (Rene ZaZzO). பிரான்ஸ் நாட்டின் கல்வி-உளவியல் அறிஞர். எழுதுவதற்கு சிரமப்படும் குழந்தைகளை ‘முட்டாள்கள்’ என உலகம் கைவிட்டபோது ரெனெ-ஸாஸோ அந்தக் குழந்தைகளுக்கு இருப்பது டிஸ்லெக்ஸியா (Dyslexia) எனும் கற்றல் குறைபாடு மட்டுமே என நிருபித்தார்.

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வேகத்தில் கல்வி கற்கிறது என்றார் அவர். 10 சதவீதக் குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே டிஸ்லெக்ஸியா வந்துவிடும். அதற்கு வளர்ப்பு முறையும் ஒரு காரணம். வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் இருக்கும் கற்பித்தல் குறைபாடு காரணமாகச் சிறு வயதில் 7 சதவீதம் பேருக்கு டிஸ்லெக்ஸியா வருகிறது. இவை எல்லாம் ரெனெ-ஸாஸோவின் கண்டுபிடிப்புகள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் உலகம் டிஸ்லெக்ஸியா குறைபாட்டை விவாதித்துப் புரிந்துகொண்டது. இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் வேகமாகச் சிந்திப்பார்கள். ஆனால், அவர்களை எழுத வைக்கவே முடியாது. இத்தகைய குறைபாடுள்ளவராக இருந்து பிற்பாடு பெரும் புகழ்பெற்ற அறிவாளிகளாக மாறியவர்கள் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், விஞ்ஞானி மைக்கேல் பாரடே மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்று பலர். அத்தகையவர்களின் பட்டியல் நீளமானது. பிரபல எழுத்தாளர் அகதா கிறிஸ்டியும் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவரே. தனது நாவல்கள் எதையும் அவர் எழுதவில்லை. டிக்டேட்தான் (சொல்லி மற்றவரை எழுத வைப்பது) செய்தார் என்பதை அறிந்து உலகம் அதிர்ந்தது.

அது வேற சரஸ்வதி

1960- களில் இந்தக் குறைபாடு கல்வியின் அங்கமாக ஏற்கப்பட்டது. இவர்களுக்காக ரெனெ-ஸாஸோ கண்டுபிடித்து அறிமுகம் செய்ததுதான் நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதும் (Objective - type) வினா- விடை முறை. இது இன்று குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் முறை. என்றாலும் இந்தத் தேர்வு முறை உண்மையான அறிவைப் பரிசோதிக்கும் வல்லமை மிக்கது அல்ல என்பதை எனக்குக் காட்டியவர்தான் சரஸ்வதி.

சரஸ்வதி எனக்கு முதலில் அறிமுகமானது ஒரு தேர்வு அறையில்தான். எட்டாம் வகுப்புக்கு முழு ஆண்டுத் தேர்வு நடந்தபோது அந்தத் தேர்வு அறைக்குக் கண்காணிப்பாளர் நான். தேர்வு முடிந்துவிட்டதற்கான மணி ஒலித்தபோதும் ஒரே பக்கத்தைத் திணறலோடு எழுதிக்கொண்டிருந்தார் அவர். விடைத் தாளைச் சமர்ப்பிக்கவும் தயங்கி கண் கலங்கினார். எல்லா ஆசிரியர்களையும் போலவே நானும் அவரைக் கிண்டலோடு நடத்தினேன். ‘‘தேர்வுக்கு ஒழுங்கா தயார் செய்தால் இப்படி பேந்த பேந்த முழிக்க வேண்டாமே” என்றேன். எனக்கு இப்போதும் ஞாபகம் வந்து மனதைப் பிசைவது அவரது “சாரி சார்” எனும் எனும் கெஞ்சல்தான். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே வேறு வகையான சரஸ்வதியை நான் பார்க்க நேர்ந்தது.

அந்த சரஸ்வதி திணறும் சரஸ்வதி அல்ல. திறன் மிகுந்த சரஸ்வதி. மாலையில் யதேச்சையாகப் பள்ளி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் குமாஸ்தாவுக்கு அருகே பெரிய லெட்ஜருக்கு முன்பாக அவர் உட்கார்ந்திருந்தார். அவரை குமாஸ்தா மகள் என்றே முதலில் நான் நினைத்தேன். ஆனால், நீண்ட வரிசையில் உள்ள பெரிய பெரிய கணக்குகளை ‘மள மள’வென சரியாகக் கூட்டினார் அவர். அந்த குமாஸ்தா அவரை அடிக்கடி அழைத்து, கால்குலேட்டராகப் பயன்படுத்துவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

லட்சுமிகரமாய் சரஸ்வதி

அதையும்விடப் பெரிய அதிசயமும் நடந்தது. பள்ளி நடத்துவதிலேயே சிக்கலான வேலை ஆசிரியர் மற்றும் வகுப்புவாரி கால அட்டவணை (டைம்-டேபிள்) போடுவது. அந்த வேலையை ஒரு விடுமுறை நாளில் சில மணி நேரத்தில் லாவகமாக உதவித் தலைமை ஆசிரியர் மேஜையில் சரஸ்வதி செய்வதைப் பார்த்து நம்ப முடியாமல் வியந்தேன். டிஸ்லெக்ஸியா பற்றி அதிகம் கல்வித் துறை அறியாத காலம் அது. இன்று அந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்குத் தேர்வில் கூடுதல் நேரம் வழங்குதல், எழுத்துப் பிழைகளோடு மதிப்பெண் சமரசம் என்று கல்வித் துறை சில சலுகைகளைத் தந்திருக்கிறது. அப்போது கல்வி உரிமைச் சட்டமும் இல்லை.

அதனால், சரஸ்வதி எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. பள்ளியிலிருந்தும் நின்றுவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் எனது, ஆசிரியர் கால அட்டவணையை, வாங்கும்போது சரஸ்வதியை நினைப்பேன். அவர் என்ன ஆனார் என்று மனம் நொந்ததும் உண்டு.

சமீபத்தில் கடலூர் ‘ஆதார் அட்டை முகவரி மாற்றத்துக்கு இங்கே அணுகவும்: சரஸ்வதி கணினி மையம்’ என அறிவிப்புப் பலகையைப் பார்த்து எனது ஆதார் அட்டையோடு உள்ளே நுழைந்தேன். நம் கல்வி முறையால் கைவிடப்பட்ட அந்த சரஸ்வதி ‘கல்லாப் பெட்டி’ எனும் சிம்மாசனத்தில் லட்சுமிகரமாக வீற்றிருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x