Published : 23 Jan 2021 03:15 am

Updated : 23 Jan 2021 09:38 am

 

Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 09:38 AM

சிறப்பு கவனம்: இதய நோயாளிகளுக்கு கரோனா கற்பித்த பாடம்!

heart-patients

மைசூரில் வசிக்கும் இந்திரஜித் உணவு விடுதி ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்துவருகிறார். வயது 50. அவருக்கு ஒருமுறை லேசாக நெஞ்சுவலி வந்தது. ‘ஆஞ்சைனா’ எனும் முதல் கட்ட மாரடைப்பு அது. மாத்திரைகளில் சமாளித்துவிடலாம் என்கிற நிலைமை. அப்போதிலிருந்து கடந்த எட்டு ஆண்டுகளாக மருந்துகளையும் உடற்பயிற்சிகளையும் முறையாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்தைக் காப்பாற்றிவந்தார்.

நாவல் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியது. ஊரடங்கில் அனைவரும் வீட்டில் முடங்கினார்கள். பெரும்பாலோரைப் போல் வழக்கமான உடல் பரிசோதனை களுக்கு மருத்துவரிடம் இந்திரஜித் செல்ல முடியவில்லை. வருமானம் குறைந்ததால், மருந்துகளைச் சாப்பிடவில்லை. நடைப்பயிற்சிக்குச் செல்லவில்லை. அவ்வப்போது நெஞ்சுவலி வந்தது. கவனிக்க முடியவில்லை.


ஒருமுறை வீட்டுப் பரணிலிருந்த சாமான்களை ஒதுக்கிக் கொண்டிருந்தபோது நடு மார்பில் வலி உண்டானது. உடல் வியர்த்தது. கண்ணைக் கட்டிக்கொண்டு மயக்கம் வந்தது. அவசரமாக அரசு மருத்துவமனைக்குப் போனார். அவருக்கு மாரடைப்பு என்றது ‘இ.சி.ஜி.’. அடுத்து, ‘ஆஞ்சியோகிராம்’ செய்யப்பட்டது. அவரது இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு இருந்தது. ‘ஸ்டென்ட்’ பொருத்தப்பட்டது. உயிர் பிழைத்துக்கொண்டார். ஆனால், இந்திரஜித்துக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, எல்லோருக்கும் கிடைத்துவிடாது.

அதிகரிக்கும் இதயநோய்கள்

கடந்து சென்ற கரோனா காலத்தில் இந்திரஜித்தைப் போல் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் இதயத் தாக்குதலால் சிரமப்பட்டவர்கள் பல லட்சம் பேர். அவர்களில் மாரடைப்பு, பக்கவாதம் உட்பட்ட இதய ரத்தக்குழாய் நோய்களுக்கு (CVD) சிகிச்சை எடுக்காமலும், எடுக்க முடியாமலும் இறந்தவர்கள் சுமார் 17 லட்சம் பேர். ஓர் ஒப்பீட்டுக்குச் சொன்னால், நாட்டில் இதுவரை கரோனாவில் இறந்தவர்கள் ஒன்றரை லட்சம் பேர்தான். ஆனால், கரோனாவால் இறந்தவர்களின் கணக்கு ஊடகங்களில் இடம்பெற்ற அளவுக்கு, இதயநோய்களால் இறந்தவர்களின் கணக்கு வெளிச்சம் பெறவில்லை. அது மட்டுமல்ல, அந்த இறப்புகளில் பாதிக்குமேல் வீட்டில் ஏற்பட்டது என்பதால் பொதுவெளியிலும் தெரியவில்லை.

இந்தியாவில் கரோனா தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் மருத்துவ மனைகளுக்கு இதய நோயாளிகள் வருவது 40 சதவீதம் குறைந்தது; அடுத்த நான்கு மாதங்களில் 50 சதவீதம் குறைந்தது. ஊரடங்கில் அநேகரும் அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியதால், அவசரமான வாழ்க்கை முறையும் பரபரப்பு மிகுந்த நேரமும் பெருமளவு குறைந்தன. பொருளாதாரரீதியில் வசதியானவர்களுக்கு மன அழுத்தம் குறைந்த வாழ்க்கை சாத்தியப்பட்டது.

வாகனப் போக்குவரத்து குறைந்த தால் காற்று மாசு குறைந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டன. உணவகங்களும் மூடப்பட்டதால் துரித உணவுப் பழக்கத்தைப் பெரும்பாலோர் துறந்தனர். வீட்டுச் சாப்பாடு நிரந்தரமானது. வீட்டில் உள்ள உறவுகளோடு நேரம் செல வழிப்பது அதிகரித்தது. மனம் மகிழ்ச்சி கண்டது. இப்படிப் பல காரணங்களால் இதயத்தில் பிரச்சினை ஏற்படுவது குறைந்து விட்டது என மருத்துவர்கள் கணித்தனர். ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும், இதய நோயாளிகளின் வருகை மறுபடியும் அதிகரித்தது. அதிலும் இளம் வயது நோயாளிகள் அதிகரித்தனர்.

இதை உறுதிசெய்யும் விதமாக, ‘இந்தியாவில் இளம் வயது மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது’ என்று சொன்னது ‘லான்சட்’ மருத்துவ ஆய்விதழ். 2015இல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, 55 வயதுக்குக் கீழ் உள்ளவர்களில் 40 சதவீதம் பேருக்குப் புதிதாக மாரடைப்பு வந்திருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 30-லிருந்து 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களையும் அது பாதிக்க இருக்கிறது என்று அப்போதே அந்த இதழ் கணித்தது. அதுதான் இப்போது நிகழ்கிறது. வளர்ந்த நாடுகளில் 45 வயதுக்குப் பிறகுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் 30 வயதிலேயே அது வந்துவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?

அதிகரித்த அச்சம்

இந்தியர்களுக்கு மரபு வழியாகவே மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது. கரோனா காலத்தில் மேற்கத்திய உணவு தற்காலிகமாக விடை பெற்றாலும், இதயத்துக்கு எதிரியான மைதா உணவு வகைகள் வீட்டு உணவிலும் இயல்பாகக் கலந்தன. நகர்ப்புற இளைஞர்கள் உடற்பயிற்சிகளை மறந்தனர். உடல் இயக்கம் குறைந்தது.

சேமிப்பு இல்லாத இளைஞர்களுக்குப் பணி தொடருமா என்ற சந்தேகம், பணி இழப்பால் ஏற்பட்ட இருள் சூழ்ந்த எதிர்காலம், குறைந்த வருமானம், மாதாந்திரக் கடனை அடைக்க முடியாத கவலை… இப்படிப்பட்ட காரணங்கள் இதயச்சுமையை அதிகரித்தன.

கரோனா வந்து உடலால் பாதிக்கப்பட்டவர்களைவிட மனத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். அது மனித மனங்களில் அச்சத்தை விதைத்தது. என்னாகுமோ, ஏதாகுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது. ‘அச்சப் பதற்ற நோய்’ (Illness Anxiety Disorder) எனும் மனநோயைக் கொண்டுவந்தது. அது புதிதாகப் பலருடைய இதயங்களைத் தாக்கியது. ஏற்கனவே பாதிப்பைக் கண்டிருந்த இதயங்களை மோசமாக்கியது.

விடுபட்ட பரிசோதனைகள்

ஊரடங்கில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் செயல்படவில்லை. கரோனா பயத்தில் பயனாளிகளும் மருத்துவ மனைக்குச் செல்லத் தயங்கினர். பொது வாகன வசதிகள் குறைந்தன. இதுபோன்ற காரணங்களால் வழக்கமான சிகிச்சை முறைகளை அநேகரால் தொடர முடியவில்லை. இதயநோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மிகை கொலஸ்ட்ரால், சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய் போன்றவற்றுடன் இருந்த நோயாளிகள் மாதாமாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய ஆய்வகப் பரிசோதனைகள் விடுபட்டுப்போயின.

அதன் விளைவாக, அவர்கள் உடலில் உண்டான அசாதாரண மாற்றங்களைக் காலத்தோடு கவனிக்க முடியாமல் போனது. தோராயமான சிகிச்சைகளே சாத்தியமாயின. இந்த நிலைமை பல மாதங்களுக்கு நீடித்ததால், ஏற்கனவே இருந்த இணை நோய்கள் தீவிரமடைந்தன. அவை கொடுத்த அழுத்தத்தில் மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் 20 சதவீதம் அதிகரித்தது.

கவனிக்கத் தவறிய மனநலம்

கரோனா காலத்தில் பலருக்குத் தனிமைச் சூழல் மனநலத்தைக் கெடுத்தது; மனச்சோர்வைக் கொடுத்தது. அதேநேரம், மற்ற சிகிச்சைகளுக்கு அவர்கள் எடுத்த முன்னெடுப்புகளைவிட மனநல மீட்புக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் மிகக் குறைவு. அப்படியே முயற்சித்தாலும், ‘தொலை மருத்துவத்’தில்தான் (Tele medicine) சிகிச்சை பெற முடிந்தது. மனநலப் பாதிப்புகளுக்கு நேரடி மருத்துவ ஆலோசனைகள் கொடுத்த நற்பலன்கள், தொலை மருத்துவத்தில் கிடைக்கவில்லை. இதுவும் இதயத்தைப் பாதிக்கக் காரணமானது.

அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

திடீரென்று அறிவிக்கப்பட்ட கரோனா ஊரடங்கில் கைவசம் சேமிப்பு இல்லாமல் பொருளாதாரச் சரிவைச் சந்தித்த இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் இதயநோய்களையும் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். குடும்ப வழியில் மாரடைப்பு வரச் சாத்தியம் இருந்தவர்கள் கரோனா கொடுத்த வாழ்க்கைமுறை அழுத்தத்தால் சீக்கிரத்தில் மாரடைப்புக்கு உள்ளானார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் இருந்து வழக்கமான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மறந்துபோனவர்களும் நெஞ்சுவலி போன்ற இதயநோய் அறிகுறிகளை அலட்சியமாகக் கையாண்டவர்களும் மாரடைப்புக்கு அதிக அளவில் பலியானார்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூப்பின் காரணமாகவும், ஏற்கனவே இருந்த இணைநோய்கள் காரணமாகவும் மாரடைப்பு வந்து இறந்தவர்களும் அதிகம்.

கரோனா கற்பித்த பாடங்கள்

ஊரடங்குக் காலத்தில் இயல்பான வாழ்க்கையைத் தொடர்வதற்கு மட்டுமன்றி இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் பாதிப்பதைத் தடுப்பதற்கும் பொருளாதாரச் சேமிப்பு அவசியம் என்பதை முதல் பாடமாக கரோனா நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

சிகிச்சைக்கு வழிவிடும் மருத்துவக் கதவுகள் தொற்றுக்காலத்தில் அநேகமாக மூடப்பட்டுவிட்டதைக் காரணம் காட்டி, நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது ஆபத்து என்பதையும் கரோனா கற்றுக் கொடுத்திருக்கிறது.

உடல்நலம் பேணுவதற்கு மட்டுமல்லாமல் கரோனா தொற்று தீவிரம் காட்டாமல் இருப்பதற்கும் உடலில் உள்ள இணைநோய்களுக்குப் பரிசோதனைகளும் சிகிச்சை முறைகளும் இடைவெளியின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை யும் அது வலியுறுத்தியிருக்கிறது.

இணைய வழியில் தரப்படும் தொலை மருத்துவத்தைவிட, நோயாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகள்தாம் உடல்நலம், மனநலம் பேணுதலில் முக்கியம் என்பதும் கரோனா கற்பித்த பாடம்தான்.

இறுதியாக, கரோனா காலத்தில் முக்கால்வாசி தனியார் மருத்துவ மனைகள் செயல்படாத நிலைமையிலும் அவற்றுக்குச் செலவழிக்க முடியாத நிலைமையிலும் சாமானியர், நடுத்தரவர்க்கத்தினருக்கு கரோனா சிகிச்சை, பிரசவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்குப் பெரிதும் கைகொடுத்தவை அரசு மருத்துவமனைகளே! ஆகவே, நாட்டில் பெருந்தொற்றால் ஏற்படும் ஆரோக்கிய ஆபத்துகளை எதிர்கொள்ள அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதும் நவீனப்படுத்த வேண்டியதும் அவசியம். இதுவும் கரோனா கற்பித்த அதிமுக்கியமான பாடமே!

என்ன பரிசோதனை? என்ன சிகிச்சை?

மாரடைப்புக்குப் பரிசோதனைகள்: இ.சி.ஜி., ட்ரெட்மில், ‘ட்ரோப்போனின்– I’, எக்கோ, ஆஞ்சியோகிராம், இதய மின்செயலியல் பரிசோதனைகள் (EP testing). சிகிச்சைகள்: ‘ஆஞ்சைனா’வுக்கு மாத்திரைகள் போதும். ‘மாரடைப்பு’க்கு ‘ஸ்டென்ட்’ பொருத்துதல் அல்லது ‘பைபாஸ்’ சிகிச்சை உதவும். ‘இதயச் செயலிழப்பு’க்குக் காரணத்தைப் பொறுத்து மாத்திரைகள் மற்றும் ‘ஸ்டென்ட்’ தேவைப்படும். இதயத் துடிப்புப் பிரச்சினைகளுக்கு ‘அட்ரோபின்’, ‘அமியடரோன்’ மருந்துகளும், மின்னதிர்ச்சி, ‘அப்லேஷன்’ சிகிச்சைகளும் உள்ளன; ‘இதய நிறுத்த’த்தைத் தடுக்க ‘பேஸ்மேக்கர்’, ‘ஐ.சி.டி.’ (ICD) எனும் துடிப்பு மீட்புக் கருவிகளில் ஒன்று மார்பில் பதியம் செய்யப்படும். உயிர் காக்கப்படும்.

மாரடைப்பை அறிய எளிய பரிசோதனை!

‘ட்ரோப்போனின்’ பரிசோதனை: மாரடைப்பை உறுதிசெய்யும் எளிய ரத்தப் பரிசோதனை இது. ‘ட்ரோப்போனின்–I’ (Troponin-I) எனும் புரதத்தை அளப்பது. இதன் இயல்பு அளவு 0.4 நா.கி./மி.லி.க்குக் குறைவாக இருக்க வேண்டும். பொதுவாக, மாரடைப்பு ஏற்பட்ட 4 மணி நேரத்தில் இந்த அளவு கூடும். 2 வாரங்களுக்கு அதே அளவு நீடித்திருக்கும்.

இந்தப் பரிசோதனையை சுயமாகச் செய்து கொள்ளக் கூடாது. மாரடைப்பு தவிர வேறு சில இதயக்கோளாறுகளிலும் சிறுநீரக நோயிலும் இந்த அளவு அதிகரிக்கும். ஆகவே, நெஞ்சுவலிக்குக் காரணம் மாரடைப்பா என்பதை மருத்துவர்தான் முடிவுசெய்ய வேண்டும்.

நெஞ்சுவலி எல்லாம் மாரடைப்பா?

நெஞ்சில் வலி வந்தாலே மாரடைப்பு என அஞ்ச வேண்டியதில்லை; அலட்சியமாகவும் இருக்க வேண்டாம். மாரடைப்பில் பல வகை உண்டு. அறிகுறிகளை வைத்து அவற்றை இனம் காணலாம். அந்த அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்க வேண்டாம். தகுந்த பரிசோதனைகளை மேற்கொண்டு உரியச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

1. ‘ஆஞ்சைனா’ (Angina) எனும் நெஞ்சுவலி:

இதயத்தசைகளுக்கு ஆக்ஸிஜன் குறைவதால் ஏற்படும் நிலைமை இது. மாரடைப்புக்கான ‘முன்னோட்டம்’ என்று இதைச் சொல்லலாம். வேகமாக நடந்தால், பளு தூக்கினால், மாடிப்படி ஏறினால், வயிறு முட்டச் சாப்பிட்டால், உணர்ச்சிவசப்பட்டால் நெஞ்சு எரியும்; வலிக்கும். ஓய்வு எடுத்துக்கொண்டால் இந்த இரண்டும் சரியாகிவிடும். இந்த நிலைமையை ‘வயிற்று அல்சர்’ என நினைத்து ஏமாந்துவிடக் கூடாது.

2. மாரடைப்பு (Myocardial infarction):

இதயத் தசைகளுக்கு ரத்தம் குறைவதாலோ அடைத்துக்கொள்வதாலோ ஏற்படும் நிலைமை இது. நடு நெஞ்சில் கயிறு கட்டி அழுத்துவதுபோல் வலிக்கும். வலி இடது புஜத்துக்கும் கைக்கும் பரவும். உடல் வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. மயக்கம் வரும். ஆனால், வயதானவர்களுக்கும் நாட்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கும் வலி அவ்வளவாகத் தெரியாது. நெஞ்செரிச்சல் மட்டும் இருக்கும்.

3. இதயச் செயலிழப்பு (Cardiac failure):

உடலுக்குத் தேவையான ரத்தம் செலுத்த முடியாத அளவுக்கு இதயம் வலுவிழக்கும் நிலைமை இது. மாடிப்படி ஏறினால், தொலைவாக நடந்தால் மூச்சுத் திணறும். ஓய்வெடுத்தால் சரியாகும். படுத்தால் மூச்சு முட்டும்; உட்கார்ந்தால் சிரமம் குறையும். இரவில் இருமல் வந்து உறக்கத்தில் எழுப்பிவிடும். நாள்பட நாள்படப் பாதம், முகம், வயிறு வீங்கும்.

4. ‘இதய நிறுத்தம்’ (Cardiac arrest):

இது சீரற்ற இதயத் துடிப்புப் பிரச்சினைகளால் (Arrhythmias) ஏற்படுகிறது. இதய மின்னோட்டம் பழுதாவது இதற்குக் காரணம். இதயம் அதிவேகமாகவோ மெதுவாகவோ துடிக்கலாம் அல்லது லகான் இழந்த குதிரை ஓட்டம்போல் திடீர் திடீரென்று இதயம் முறைதவறி அசுர வேகத்திலும் துடிக்கலாம். அப்போது நெஞ்சு படபடப்பாக இருக்கும். நெஞ்சுவலி, மயக்கமும் வரும். இதை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், இதயம் ‘வேலைநிறுத்தம்’ செய்துவிடும். பல வீடுகளில் ‘வலிக்குதுன்னு நெஞ்சைப் பிடிச்சார்… அடுத்த நிமிஷம் பேச்சு மூச்சு இல்லை!’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அந்த மோசமான மாரடைப்பு இதுதான்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com


சிறப்பு கவனம்இதய நோயாளிகள்Heart patientsமாரடைப்புகரோனா வைரஸ்இதயநோய்கள்அச்சம்பரிசோதனைகள்மனநலம்கற்பித்த பாடங்கள்Angina

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x