Published : 22 Jan 2021 08:56 AM
Last Updated : 22 Jan 2021 08:56 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: ‘மாறா’வுக்குப் பின்!

முற்றிலும் புதிய கதைக் களத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘ஃபியூச்சரிஸ்டிக்’ வகைத் திரைப்படங்களை ஓ.டி.டி.யில் மட்டுமே காண முடியும். அத்தகைய முயற்சியைத் திரையரங்குகளுக்கான படமாக எடுத்து வருவதாகக் கூறுகிறார் ‘கலியுகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பிரமோத் சுந்தர். ‘மாறா’ படத்தில் சிறந்த நடிப்புக்காக பாராட்டுக்களைப் பெற்றுவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இது. பிரைம் சினிமாஸ் கே.எஸ். ராமகிருஷ்ணா, பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து தயாரித்துவருகிறார்.

நக்கல் அரசியல்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' படத்துக்குப்பின் நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார் இயக்குநர் அமீர். அவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘நாற்காலி’ அரசியல்வாதிகளை காட்டமாக நக்கலடிக்கும் படம் என்கிறார் இயக்குநர். சமீபத்தில் படத்தின் இசையைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். வி.இசட். துரை இயக்கத்தில், மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரித்துள்ள இப்படத்தில், சாந்தினி ஸ்ரீ தரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர், சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி உட்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கிறது.

முதல் தோற்றம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பன்மொழித் திரைப்படமாக இயக்கிவருகிறார் ஏ.எல். விஜய். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படத்திலிருந்து, ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத், எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் ஒளிப்படத்தை, முதல்முறையாக வெளியிட்டிருக்கிறது படக்குழு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக, கோலோச்சிய காலத்தை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் படக்குழுவின் சிரத்தையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது இந்த ஒளிப்படம்.

‘அண்ணாத்த’ அப்புறம்!

‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பணிபுரிந்த பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னை திரும்பிய ரஜினி, தற்போது முழு ஓய்வில் இருந்துவருகிறார். ஏப்ரல் இறுதியில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க ரஜினியிடம் கால்ஷீட் பெற்றிருக்கிறதாம் தயாரிப்புத் தரப்பு. இதனால் படத்தின் இயக்குநர் சிவா, ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்துக்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்.

நொந்துபோன இயக்குநர்!

பொங்கல் திருநாளையொட்டி, ஓ.டி.டி.யில் வெளியான ‘பூமி’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. தர்க்கரீதியாக சில பிழைகள் இருந்தபோதும், வேளாண் தொழிலும் வேளாண்குடி மக்களும் காக்கப்பட வேண்டும் என்பதைக் கூறியிருந்தார் இயக்குநர் லக்ஷ்மன். இந்நிலையில், சமூக வலைதளங்களில் விமர்சனம் என்கிற பெயரில் சிலர் நேரடியாக இயக்குநரையும் படத்தின் நாயகன் ஜெயம் ரவியையும் தாக்கியிருந்தனர். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர், ‘நம் எதிர்காலத் தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தே இந்தப் படத்தை எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு, கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டுமக்களும் நாசமாய் போகட்டும். உங்களைப் போன்றவர்கள் வென்றுவிட்டீர்கள். நான் தோற்றுவிட்டேன்’ என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

கதையின் காதலி!

பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த ‘சில்லுக்கருப்பட்டி’ படத்துக்குப் பின், சுனைனா நடிப்பில் வெளியாகும் படம் ‘ட்ரிப்’. இதில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சுனைனா. “என்னைப் பொறுத்தவரை யார் கதாநாயகன் என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல; நான் கதை - கதாபாத்திரத்தின் காதலி. இந்தப் படத்தின் த்ரில்லர் கதையும் எனக்கான கேரக்டரும் கவர்ந்ததால் நடித்தேன்” என்கிறார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சக்திவேலன் பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x