Published : 20 Jan 2021 03:13 am

Updated : 20 Jan 2021 09:12 am

 

Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 09:12 AM

மாய உலகம்: வாழுங்கள், வாழ விடுங்கள்

maaya-ulagam
ஓவியம்: லலிதா

“என்னை என்ன செய்கிறீர் மகாவீரரே?”என்று புன்னகையோடு கேட்டது மீன்.

“கவலைப்படாதே, நான் உன்னைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன்” என்று கிசுகிசுத்தார் மகாவீரர். தன் இரு கைகளையும் அவர் குவித்திருக்க, அதில் நிரம்பியிருந்த நீரில் நீந்திக்கொண்டிருந்தது மீன்.


“ஓ... ஆனால், நான் ஆபத்தில் இருக்கிறேன் என்று யார் உங்களுக்குச் சொன்னது?”

மகாவீரர் குழப்பத்தோடு மீனைப் பார்த்தார். “நீ தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறாய் என்றல்லவா நினைத்தேன்? என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாற்று என்று நீ கூச்சலிடவில்லையா? உன் அகலமான கண்களில் இருந்தது பயம் இல்லையா? நீ தத்தளிப்பதைப் பார்த்ததும் என் இதயம் வலிக்க ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் குளத்திலிருந்து உன்னை அள்ளி எடுத்தேன்!”

துள்ளித் துள்ளி சிரித்தது மீன். “எந்த மீனாவது தண்ணீரில் மூழ்கி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என் கண் கொஞ்சம் பெரியது, அவ்வளவுதான். எத்தனை பெரிய கடலாக இருந்தாலும் நாங்கள் அஞ்சாமல் வாழ்வோம். எனக்குத் தெரிந்து குளத்திலிருந்து மீனைக் காப்பாற்றிய முதல் ஞானி நீங்கள்தான், மகாவீரரே!”

மகாவீரர் நாணத்தோடு மீனை அதன் குளத்தில் சேர்த்துவிட்டு நடக்கத் தொடங்கினார். இரண்டு அடி எடுத்து வைத்திருப்பாரா? சட்டென்று கண்களை மூடிக்கொண்டு ‘என்னை மன்னித்துக்கொள்!’ என்றார். அதற்குள் அவர் கண்கள் கலங்கிவிட்டன.

கீழிருந்து எறும்பு தலையை உயர்த்தியது. “என்னிடமா பேசுகிறீர்கள், மகாவீரரே?”ஆமென்று மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தார் மகாவீரர். “நல்லவேளை, உன் காலை மிதித்துவிட்டேனோ என்று ஒரு கணம் நடுநடுங்கிவிட்டேன். உனக்கு எதுவும் ஆகவில்லையே?”புழுதியில் அப்படியே அமர்ந்து எறும்பை மிருதுவாகத் தடவிக்கொடுத்தார் மகாவீரர்.

“உங்களால் எங்கள் யாருக்கும் சிறு தீங்கும் நேர்ந்ததில்லை” என்றபடி புன்முறுவல் பூத்தது எறும்பு. “ரொம்ப நாளாக உங்களிடம் கேட்க வேண்டும் என்று இருந்தேன். எப்படி உங்கள் கண்களுக்கு நான் புலப்படுகிறேன்? என் குரல் எப்படி உங்களுக்குக் கேட்கிறது? உங்களைப் பார்த்து பரிகசிக்கும் மீனிடம்கூட எப்படி உங்களால் கரிசனத்தோடு இருக்க முடிகிறது? மாபெரும் தத்துவ ஞானியான நீங்கள் எங்களைப் போன்ற சிறிய உயிர்களுக்காக ஏன் கலங்க வேண்டும்?”

“ஏனென்றால் உயிரில் சிறிது, பெரிது இல்லை” என்றார் மகாவீரர். உடல்தான் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு வண்ணங்களில் பிரிந்திருக்கிறது. யானைக்கும் பூனைக்கும் உனக்கும் எனக்கும் உடல் மட்டும்தான் வித்தியாசம். ஒரு உடல் தவழ்கிறது, இன்னொன்று நீந்துகிறது, மற்றொன்று பறக்கிறது. நான் நடக்கிறேன்.

என் வடிவம் பெரியதாக இருப்பதால் நான் பெரிய உயிர், நீ அளவில் சிறுத்திருப்பதால் சிறிய உயிர் என்று பொருளல்ல. உன் குரலும் என் குரலும் வேறுபட்டிருந்தாலும் நாம் ஒரே மொழிதான் பேசுகிறோம். உன் வலியும் என் வலியும் ஒன்றுதான். நான் இந்த உலகை ஒரு மனிதனைப் போல் பார்க்கிறேன், புரிந்துகொள்கிறேன் என்றால் நீ இதே உலகை ஒரு எறும்பு போல் பார்க்கிறாய், புரிந்துகொள்கிறாய். உன்னைவிட என் அறிவு எந்த வகையிலும் மேலானது அல்ல.”

தாழப் பறந்துகொண்டிருந்த ஒரு புறா மகாவீரர் தோளின்மீது வந்து அமர்ந்தது. அமர்ந்த கையோடு தன் அலகைப் பிரித்து உரிமையோடு கேட்டது. “எந்த உடலையும் யாரும் காயப்படுத்தக் கூடாது என்பதுதான் உங்கள் அகிம்சை கொள்கையா?”

மகாவீரர் புறாவிடம் திரும்பினார். “அகிம்சை என்பது மூன்று நிலைகளைக் கொண்டது. நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன் என்பது முதல் நிலை. நான் உன்னைக் காயப்படுத்த வேண்டும் என்று மனதளவிலும் நினைக்க மாட்டேன் என்பது அடுத்த நிலை. இந்த நிலையை அடைய வேண்டுமானால் நான் எந்த ஒரு உயிரையும் ஒரு கணமும் வெறுக்கக் கூடாது. எந்த ஒரு உயிரையும் ஒரு கணமும் தாழ்வாகக் கருதக் கூடாது. உயிர் என்பதில் மலை, ஓடை, காடு, மரம், செடி, கனி, பழம் அனைத்தும் அடங்கும்.”

மூன்றாம் நிலை என்ன என்றது அருகிலிருந்த மரம். “என் மனமோ கரமோ உன்னைத் தாக்காது என்பதோடு என் பணி முடிவடைவதில்லை. என் மனதாலும் கரத்தாலும் உன்னை முழுமையாக அரவணைத்துக்கொள்வேன். உன் பசியை, உன் வலியை, உன் துயரத்தை என்னால் இயன்றவரை அகற்றுவேன். எந்த உயிர் வாடினாலும் என் உயிரும் இணைந்து வாடும். நான் வாழ வேண்டுமானால் நாம் வாழ வேண்டும். நம் துயரங்கள் விலகும்வரை என் துயரம் விலகாது. நம் வலி தீரும்வரை என் உடலும் உள்ளமும் அமைதி கொள்ளாது. காடெங்கும் கனியும் பழமும் பெருகுவதுபோல் மனமெங்கும் கருணையும் பரிவும் பெருகினால் இந்த உலகம்தான் எவ்வளவு அற்புதமாக இருக்கும்?”

மகாவீரர் தன் கண்களை மூடிக்கொண்டார். உங்கள் கனவில் நான் சிறகு விரித்து என்றென்றும் பறந்துகொண்டிருப்பேன் என்றது புறா. எந்த உயிருக்கும் ஆபத்து நேராமல் காப்பேன் என்று அவர் கால்களைச் சுற்றிக்கொண்டது மரத்திலிருந்து இறங்கிவந்த பாம்பு. நம் கனவு நிறைவேறும்வரை உங்களைப் போல் சுறுசுறுப்போடு உழைப்பேன் என்றது அவர் விரல்களில் அமர்ந்திருந்த எறும்பு.

எந்த ஒரு கடலையும்விட உங்கள் உள்ளங்கை நீர் ஆழமானது. உங்களோடு வாழ்வதற்கு எதையும் அளிப்பேன் என்றது குளத்திலிருந்து துள்ளிய மீன். மேகம் திறந்துகொண்டு கதிரவனின் ஒளியை பூமிக்குப் பாய்ச்சியது. மரக்கிளை ஒன்று மகாவீரரின் தலையை நோக்கித் தாழ்ந்தது. ஒரு கொடி மகாவீரரைப் பாய்ந்து பற்றிக்கொள்ள அவர் புன்னகை செய்தார். அந்தப் புன்னகையைக் கண்டு கொடியிலிருந்த மொட்டு ஒன்று மலர்ந்து முதல் முறையாக உலகைக் கண்விழித்துப் பார்த்தது.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.comமாய உலகம்வாழுங்கள்வாழ விடுங்கள்Maaya Ulagamமகாவீரர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x