Last Updated : 19 Jan, 2021 06:50 AM

 

Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

முன்னுதாரண சேலத்து இளைஞர்கள்

அழுக்குத் துணியுடனும், பரட்டைத் தலையுடனும், தனக்குத் தானே பேசிக்கொண்டோ தமக்குள் உருவகித்துவைத்திருக்கும் யாரோ ஒருவரை வசைபாடிக்கொண்டோ சாலைகளில் திரியும் நபர்களை அன்றாடம் நாம் எதிர்கொள்கிறோம். பேருந்தில் செல்லும்போதும் ரயிலில் செல்லும்போதும் நடந்து செல்லும்போதும் தினமும் இத்தகைய மனிதர்களை நாம் கடந்து சென்றுவிடுகிறோம்.

சாலைகளில் திரியும் ஆதரவற்றவர்கள், எந்தவிதப் பிரக்ஞையுமற்று, யாருமற்ற அநாதைகளாக இப்படித் திரிவதை நீங்களும் கண்டிருக்கலாம். ஆனால், அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கக்கூடும். ஒரு அழகான கடந்த காலம் இருந்திருக்கக்கூடும். அவர்களின் பிறப்பு கொண்டாடப்பட்டிருக்கவும்கூடும். நேசமும் பாசமும் மிகுந்த பெற்றோர் அவர்களுக்கும் இருக்கக்கூடும். சிறு வயதில் அவர்களின் மீதும் செல்லம் பொழியப்பட்டிருக்கக்கூடும்.

ஆனால், இன்றைக்குத் தன்னிலை தொலைந்து திரிபவர்களை பொதுச் சமூகம் ‘பைத்தியம்’, ‘மென்டல்’, ‘மறை கழன்றவர்கள்’, ‘பூச்சாண்டிகள்’ எனப் பலவாறு ஏளனம் செய்கிறது. இது போதாதென்று ‘திருடர்கள்’ என்றோ ‘குழந்தை கடத்துபவர்கள்’ என்றோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவர்கள் அடித்துக் கொல்லப்படும் அவலமும் சமீபகாலமாக அரங்கேறிவருகிறது.

அரவணைக்கும் இளைஞர்கள்

இப்படி வறுமையின் விளிம்பில் உறவினர்களால் புறந்தள்ளப்பட்டு, சாலையோரங்களில் வசித்துக்கொண்டு, வருவோர் போவோர் உதவியால் தங்கள் வயிற்றுப் பிழைப்பை நடத்தியபடி, கிடைத்ததைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் சேலத்தில் அதிகம் உள்ளனர்.

ஒரு இளைஞர் குழு இவர்களைக் கடந்து செல்லவில்லை. மனநலம் குன்றியவர்களை நேசிக்கும் மனமும் சக மனிதர்களாகப் பார்க்கும் பார்வையும் அவர்களுக்கு இயல்பிலேயே இருந்துள்ளது. சுயத்தை மறந்தும் இழந்தும் சாலைகளில் ஆதரவற்றவர்களாக, ஒரு பரதேசியைப் போன்று திரியும் நபர்களை அரவணைத்து, ஆதரவுக்கொடுக்கின்றனர் இந்த இளைஞர்கள். சேலத்தைச் சேர்ந்த ’சேவகன் அறக்கட்டளை’ இளைஞர் குழு இது.

தங்களது வீடுகளில் இருக்கும் முதியவர்களைப் பராமரிக்கவே பலரும் முகம் சுளிக்கும் இந்தக் காலத்தில், சேவகன் அறக்கட்டளை இளைஞர்கள் சற்றும் தயங்காமல் அருவருப்பான நிலையில் உள்ளவர்களை அணுகி, நாங்கள் இருக்கிறோம் என்று எடுத்துக்கூறி, முடி நீக்கி சவரம் செய்து அவர்களை அழகுபடுத்தி புத்தாடை அணிவித்து அழகு பார்க்கின்றனர்.

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகள் உள்ள முதியவர்களிடம் நேரில் சென்று அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், இரவில் கடுமையான குளிரில் நடுங்கும் ஆதரவற்றவர்களுக்குப் போர்வை போர்த்தியும்விடுகின்றனர் இந்த இளைஞர்கள்.

மேலும், மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட ஆங்காங்கே குப்பைத்தொட்டி வைப்பது, பொதுமக்கள் அதை அலட்சியமாகக் கருதி குப்பைகளைத் தொட்டியில் போடாமல் கீழே போட்டுவிட்டுச் செல்வது வாடிக்கையாக இருந்துவரும் நிலையில் அவற்றைப் பொறுக்கி குப்பைத்தொட்டியில் போட்டு அங்கு மரக்கன்றுகளை நட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

சமூகப் புரட்சி

இப்படி பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டுவரும் சேலத்து இளைஞர்கள், இன்றைய தலைமுறை இளைஞர்களின் சமூகப் பொறுப்புணர்வுக்கும் அக்கறைக்கும் சான்றாக உள்ளனர். திரைப்பட நாயகர்களுக்குப் பின் சென்று வாழ்வைத் தொலைக்கும் வேடிக்கை பிம்பத்தை இன்றைய இளைஞர்கள் கழற்றி எறிந்து விட்டனர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அவர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். களத்தில் இறங்கியும் பணிபுரிகின்றனர். சத்தமில்லாமல் ஒரு மாற்றத்தை இன்றைய இளைஞர்கள் ஏற்படுத்திவருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x