Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

பெண் உழவர்களைப் புறக்கணிக்காதீர்

புகழ்பெற்ற வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு முறை இப்படிச் சொன்னார்: “பெண்கள்தாம் முதன்முதலில் பயிர்களை வளர்த்து அதன் மூலம் கலையும் அறிவியலும் இணைந்த உழவைத் தொடங்கிவைத்ததாகச் சில வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். ஆண்கள் உணவைத் தேடி வேட்டையாட வெளியே சென்றபோது பெண்கள்தாம் அவர்கள் வசித்த பகுதிகளில் வளர்ந்த செடிகளின் விதைகளைச் சேகரித்து உணவு, வீட்டு விலங்குகளுக்கான இரை, தீவனம், நார்கள், எரிபொருள் ஆகியவற்றைப் பெறும் நோக்கில் அவற்றைப் பயிரிடத் தொடங்கினர்.”

தவறான கண்ணோட்டம்

இந்தியாவில் வேளாண்மையைப் பற்றிப் பேசும்போதெல்லாம் ஆண்களை மட்டுமே உழவர்களாகக் கருதுகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. வேளாண்மைக் கணக் கெடுப்புத் தரவுகளின்படி கிராமப் புறங்களில் வசிக்கும் பெண்களில் 73.2 சதவீதத்தினர் உழவில் ஈடுபடுகிறார் கள். ஆனால், 12.8 சதவீதப் பெண்கள் மட்டுமே நிலவுடையமையாளர்களாக உள்ளனர். பண்பாட்டு, சமூகவியல், மதவாத சக்திகளின் அழுத்தத்தால் பெண்களுக்குத் தொன்றுதொட்டு நில வுடைமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. உழவு என்பது ஆண்களுக்கான தொழில் என்கிற தவறான கண்ணோட் டம்தான் இதற்கு ஆணிவேர்.

இந்திய மனித வளர்ச்சிக் குறியீடு, நாட்டில் உள்ள வேளாண் நிலங்க ளில் 83 சதவீதம் வம்சாவழியாக ஆண் வாரிசுகளுக்கே செல்வதாக வும் வம்சாவழி வேளாண் நில உரிமையைப் பெறும் பெண் வாரிசுகள் 2 சதவீதம் மட்டுமே என்றும் கூறுகிறது. இப்படியாகப் பெண்கள் நிலம் இல்லாதவர்களாக ஆக்கப்படுவதுடன் உழவர்கள் என்னும் வரையறைக்கு உள்ளிருந்தும் வெளியேற்றப்படுகின்றனர். இதைத் தவிர உழவுக் கூலிகளில் 81 சதவீதத்தினர் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். எனவே, வேளாண்மையில் நிரந்தர மில்லாத பணியாள்களாகவும் நிலமற்ற கூலிகளாகவும் இருப்பவர்களில் பெரும்பகுதியினர் இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்தாம்.

அரசின் பாராமுகம்

வேளாண்மையில் ஈடுபடும் பெண்களின் அங்கீகரிக்கப்படாத நிலைக்கு அரசும் பாராமுகம் காட்டுவதுடன் தனது வசதிக்கேற்ப அவர்களைப் ‘பயிரிடுவோர்’, ‘வேளாண் தொழிலாளர்கள்’ என்றே குறிக்கிறது. ஒருபோதும் பெண்களை ‘உழவர்கள்’ என்று அரசு அங்கீகரிப்பதில்லை. இதன் விளைவாக உழவர்களுக்கான அரசுத் திட்டங்களின் எந்தப் பயனும் பெண்களைச் சென்றடைவதில்லை. உழவர்களாக அங்கீகரிக்கப்பட்ட வர்களுக்குக் கிடைக்கக்கூடிய பயிர்க்கடன், கடன் தள்ளுபடி, பயிர்க் காப்பீடு, மானியங்கள், தற்கொலை செய்துகொண்ட உழவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ஆகியவைகூடப் பெண்களுக்குக் கிடைப்பதில்லை.

உழவர்களாக அங்கீகரிக்கப்படாமல் இருப்பது மட்டுமே வேளாண்மையில் ஈடுபடும் பெண்களின் பிரச்சினை அல்ல. நிலம், நீர், காடுகள் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் உரிமை ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு இருப்பதில்லை என்று ‘மகிளா கிசான் அதிகார் மஞ்ச்’ என்னும் பெண் உழவர்களுக்கான அமைப்பு சொல்கிறது. சேகரிப்புக் கிடங்குகள், போக்குவரத்துச் செலவுகள், புதிய முதலீடுகள், பழைய கடன்களை அடைத்தல் அல்லது வேளாண் கடன் தொடர்பான மற்ற சேவைகளுக்கான ரொக்க உதவி போன்ற வேளாண்மைக்கு உதவுவதற்கான ஏற்பாடுகள் கிடைக்கப்பெறுவதிலும் பாலினப் பாகுபாடு நிலவுகிறது. இடுபொருள்கள், சந்தைகள் கிடைப்பதிலும் அதே நிலை தான். ஆகவே, வேளாண்மைக்குப் பெரும் பங்களித்தாலும் பெண் உழவர்கள் விளிம்புநிலைக்கும் சுரண்ட லுக்குள்ளும் தள்ளப்படுகிறார்கள்.

புதுக் கவலை

இத்தகு சூழலில் புதிய வேளாண் சட்டங்கள் உழவுப் பெண்களுக்கு இன்னொரு பிரச்சினையாக அமைகின்றன. அரசின் கொள்கைகள் எதுவும் தமது நிலையைச் சரிசெய்ய முனைந்ததில்லை என்பதால் புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் துறையில் நிலவும் பாலினப் பாகுபாடுகளை மேலும் ஆழமாக்கும் என்று பெண் உழவர்கள் அஞ்சுகின்றனர். ‘மகிளா கிசான் அதிகார் மஞ்ச்’ அமைப்பு இந்தச் சட்டங்களில் பெண் உழவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாவது, உழவர்களைச் சுரண்டலிலிருந்து காக்கக்கூடிய குறைந்தபட்ச ஆதார விலை குறித்து இந்தச் சட்டங்களில் எதுவும் கூறப்படவில்லை. இன்னொன்று உழவர்களின் விளைபொருள்களையும் இதர சேவை களையும் பெறுவதற்காக அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வரும் பெருநிறுவனங்கள், வணிகர்களுடன் (எழுத்துபூர்வ) ஒப்பந்தம் தொடர்பாகப் புரிந்துகொண்டு பேரம் பேசக்கூடிய அதிகாரம்மிக்க முகவர்களாகப் பெண்கள் செயல்படக்கூடிய சூழல் அறவே இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வேளாண்மை கார்ப்பரேட்மயமாகி விட்டால் உழவர்களுக்குப் பேரம் பேசக்கூடிய சக்தி இருக்காது. பொருள்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே தீர்மானிப்பார்கள். உழவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்போ குறைதீர்ப்பு ஏற்பாடுகளோ இருக்காது. இதன் விளைவாகச் சிறு, விளிம்புநிலை, நடுத்தர உழவர்கள் தமது நிலங்களை வேளாண் வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு கூலித் தொழிலாளிகளாக மாறிவிடும் நிலைக்குத் தள்ளப்படு வார்கள்.

இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடை பெற்றுக்கொண்டிருக்கையில் நாம் பெண் உழவர்களின் இன்னல்களை மறந்துவிடக் கூடாது. இதனால்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டங்களில் பெண்கள் முன்களத்தில் நிற்கிறார்கள் போலும். அவர்களும் உழவர்கள்தாம், இந்தப் போரில் அவர்களுக்கும் சமமான அக்கறை இருக்கிறது என்பதை நம் அனைவருக்கும் நினைவுபடுத்து வதற்காகவும்தான்.

தி இந்து

கட்டுரையாளர் கல்வியாளர், கவிஞர், மக்களவை உறுப்பினர்.

தமிழாக்கம்: ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x