Published : 16 Jan 2021 03:14 am

Updated : 16 Jan 2021 09:36 am

 

Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 09:36 AM

வேதிவால் குருவியைத் தேடி...

sparrow

மர இலைகளுக்கு நடுவே முதலில் பார்த்தபோது கொடிபோல் தொங்கிய இரண்டு வெள்ளை நிற பட்டைக்கீற்றுகள் தெரிந்தன. சற்று தள்ளியிருந்த பக்கத்துவீட்டு மரம் அது. ஏதோ துண்டுத்துணி தொங்குகிறது என்று நினைத்தபோது, யாரோ சுண்டிவிட்டதைப்போன்று அந்த வெள்ளைக்கீற்றுகள் அழகாக அசைந்தாடின. என்னவாக இருக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தபோது, அந்தக் கீற்றுக்குச் சொந்தக்காரியான வெள்ளைப்பறவை பறந்து வந்து சுற்றுச்சுவரில் அமர்ந்தது.

சிறிது பளபளப்புடன் தெரிந்த கறுப்புத் தலை, கழுத்து. கறுப்புத் தீற்றிய வெளி இறக்கைகளைத் தவிர முற்றிலும் வெள்ளை நிறம். தலையில் அழகிய கொண்டை. எனக்குப் பரிச்சயமான கொண்டைக்குருவியின் தலையைச் சற்றே ஒத்திருந்தது. ஊர்ப்புறங்களில் பல பறவைகளைப் பார்த்திருந்தாலும், இந்தப் பறவை இதுவரை கண்டிராதது.


அது ஒரு மழைக்காலம். நாங்கள் குடியிருந்த மதுரையின் புறநகர்ப் பகுதியில் வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர். அதனால் தொலைவிலிருந்து ரசித்துக்கொண்டிருந்தபோதே அந்த வெள்ளைப் பறவை சட்டென்று பறந்து மறைந்தது. அதன் பிறகு அந்த வெள்ளை அழகி கண்ணில் படவே இல்லை.

25 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. அது என்ன பறவை என்று அப்போது தெரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டு ஆண்டு கழித்து சென்னையில் வேலையில் சேர்ந்த பிறகு ஒரு புத்தகக் கடையில் தற்செயலாகப் பறவைகளைப் பற்றிய புத்தகம் கண்ணில்பட்டது. முந்நூறு பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் அவ்வளவு எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியுமா என்ன! புத்தகத்தின் விலை சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்காக இருந்தது. அலுவலகம் முடிந்த பிறகு புத்தகக் கடையிலேயே பழியாகக் கிடந்து அது வேதிவால் குருவி (Indian Paradise-Flycatcher Terpsiphone paradisi) என்று ஒருவழியாகக் கண்டறிந்தேன். அரசவால் ஈப்பிடிப்பான் என்றும் அது அறியப்படுகிறது.

அழகியல்ல, அழகன்

அப்புறம் நான் நினைத்துக்கொண்டி ருந்ததைப் போன்று அது அழகி இல்லை, அழகன் என்றும் தெரிந்து கொண்டேன். பெண் வேதிவால் குருவி செங்கல் நிற முதுகுபுறமும் வாலும் கொண்டது. தொண்டை, மார்பு, வயிற்றுப்பகுதிகள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். இளம் ஆண் பறவை செங்கல் நிறத்தில் நீண்ட வாலின்றி, பெண் பறவையை ஒத்திருக்கும். முதிர்ந்த ஆண் பறவைகளுக்கே இந்த நீண்ட வால்சிறகுகள் இருக்கின்றன. ஆண் பறவைகளில் இரு வேறு நிறத் தோற்றங்கள் உள்ளன. முழுவதும் வெள்ளையாக இருப்பது ஒன்று, உடல் முழுவதும் செங்கல் சிவப்பு நிறத்தில் இருப்பது மற்றொன்று. ஆண் பறவைகளுக்குக் கண்ணைச் சுற்றி இளநீல நிற வளையம் இருக்கும்.

ஒல்லியான உடலமைப்பு கொண்ட இவை சுமார் 20 செ.மீ. நீளமிருக்கும் ஆண் பறவைக்கு நடுவில் உள்ள இரண்டு வால் இறக்கைகள் கூடுதலாக சுமார் 30 செ.மீ. நீளம் இருக்கும். சில வேளைகளில் மட்டும் சிலிர்த்து நிற்கும் கொண்டையும், கொடி போன்று அசைந்தாடும் நீண்ட வாலும் ஆண் பறவைக்குத் தனி அழகுசேர்க்கின்றன.

தேடல்

உடல் முழுவதும் வெள்ளையாக உள்ள வகை இந்தியாவின் வடபகுதியி லிருந்து தென்னாட்டுக்கு வலசை வருபவை. செங்கல் நிற வகை மே-ஜூலையில் இங்கேயே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. கூடு கட்ட ஒரு வாரம் எடுத்துக்கொள்ளுகின்றன. சிறு வேர்கள், இழைகள், சிற்றிலைகள் ஆகியவற்றால் கோப்பை வடிவத்தில் கூடு கட்டி, சிலந்தி வலையை வைத்து கூட்டை கச்சிதப்படுத்துகின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகளை இடும். 14 முதல் 16 நாள்களுக்குப் பிறகு, குஞ்சு பொரித்ததும், பெற்றோர் பறவை இரண்டும் சிறு பூச்சிகள், தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவற்றை உணவாக ஊட்டுகின்றன. இரண்டு வாரங்களில் குஞ்சுகள் கூட்டைவிட்டுப் பறக்கத் தயாராகிவிடுகின்றன.

வேதிவால் குருவியைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொண்டாலும், மீண்டும் அதைப் பார்க்கப் பல ஆண்டுகள் ஆயின. வேறு வேலையாகச் சென்றிருந்தபோது வேடந்தாங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஆண் பறவையை மட்டும் பார்க்க முடிந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்குச் சென்றாலும், வேதிவால் குருவி மிக அரிதாகவே கண்ணில் பட்டது.

ஒருமுறை பறவைகளைத் தேடும் பந்தயத்தில் பங்கேற்றபோது செம்பரம்பாக்கம் ஏரிக்குச் சென்றி ருந்தோம். கல்லூரியில் பணிபுரிந்த என் அக்காவின் மாணவிகள் கிண்டி கல்லூரி வளாகத்தில் வேதிவால் குருவியைப் பார்த்ததாகச் சொன்னவுடன், கிண்டி நோக்கிப் படையெடுத்தோம். மணிக்கணக்காகச் சுற்றியும் அதிர்ஷ்டமில்லை. சோர்ந்துபோன அனைவரும் திரும்பிச்செல்ல நானும் என் அக்காவும் மட்டும் பார்த்தே ஆகவேண்டும் என்ற சபதம் எடுக்காத குறையாக நடந்துகொண்டே போனதில் காடுபோல் அடர்ந்த ஆள் அரவமில்லாத பகுதிக்குச் சென்று, சில ஆண்கள் வருவதைப் பார்த்துப் பயந்து, காவலாளர்களின் ஏகப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லி, ஆர்வத்துடன் தேடிய பறவையைப் பார்க்காமலேயே நொந்துபோய் வீடு திரும்பினோம். சோர்ந்துபோன என்னை உற்சாகப்படுத்த என் கணவரும் மகனும் வேதிவால் குருவி படம் போட்ட சட்டை அணிந்து வீட்டில் வரவேற்றார்கள்!

சென்னையில் ஏமாற்றிய பறவை சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிளவுக்கல் அணையில் அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதையும், பறக்கும் பூச்சிகளைப் பிடிப்பதும், தண்ணீர் மேல் பூச்சி பிடிப்பதும், இறக்கை களைக் கோதி காய வைப்பதுமாகப் பல மணி நேரம் அரிய தரிசனம் தந்தது. வேதிவால் குருவி பறப்பதே தனி அழகுதான். பறக்கும்போது அலைபோலவும், அமர்ந்திருக்கும்போது சுண்டிவிட்டதுபோலவும் அசையும் நீள வால், ஒவ்வொரு முறையும் ஒரு நளினமான நடனத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

(இந்திய மொழிகளில் இயற்கை சார்ந்த எழுத்தை ஊக்குவிப்பதற்காக 'Nature Communications' என்கிற திட்டத்தின்கீழ் Nature Conservation Foundation (NCF) முன்னெடுத்துள்ள தொடர் இது. பறவைகள், இயற்கை குறித்து நீங்கள் எழுத நினைத்தால் NCF-India-வைத் தொடர்புகொள்ளுங்கள்)

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2021

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயற்கையை அவதானிக்கும் ‘பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2021' ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெறுகிறது.

எங்கு?: வீட்டு மொட்டை மாடி, தோட்டம், பள்ளி, கல்லூரி, குளம், ஏரி, ஆறு என எங்கிருந்து வேண்டுமானாலும் பறவைகளை நோக்கலாம்.

எவ்வளவு நேரம்?: குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது பறவைகளை நோக்கி, அடையாளம் காண்பதுடன், அவற்றின் உத்தேச எண்ணிக்கையையும் கணக்கிட வேண்டும்.

எப்படி?: அடையாளம் கண்ட பறவை களை இந்தச் சுட்டியில் சென்று பதிவுசெய்து, அவற்றைப் பாதுகாக்க உதவுங்கள்: www.ebird.org/india

பறவை நோக்குதல் குறித்த காணொலியைக் காண மேலும் விவரங்களுக்கு: https://birdcount.in/event/pongal-bird-count-2021_tamil/

கட்டுரையாளர் தொடர்புக்கு: jencysamuel@yahoo.co.in


வேதிவால் குருவிSparrowஅழகன்மழைக்காலம்மர இலைகள்அழகிய கொண்டைBirdsபறவைகள் கணக்கெடுப்பு 2021பொங்கல் கொண்டாட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்
virtual-election

மெய்நிகர் தேர்தல்!

இணைப்பிதழ்கள்

More From this Author

x