Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

அகத்தைத் தேடி 42: வந்த வேலையைப் பார்!

அதிமர்மமான சிவஸ்தலமென்று குறிப்பிடப்படும் திருவண்ணாமலையில் ஞானக்கினி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. அதன் தென்சாரலில் பகவான் ரமணர் எனும் தவச்சுடர் கனிந்து ஒளிவீசுகிறது. துறவிகளும் சம்சாரிகளும், அகத்தேடலில் ஈடுபடுபவர்களும் சுடர்முன் நின்று, அதை விடுத்து நீங்க மனமின்றி நிழல்களாக நடமாடியபடி இருக்கின்றனர்.

பகவான் ரமணரைத் தேடி, புறப்படாம லேயே அவரைச் சேர்ந்தவர்களும் உண்டு. தஞ்சாவூர் புன்னைநல்லூரைச் சேர்ந்த நடரஜானுக்குப் பகவான் ரமணர் மீது இப்படித்தான் ஈடுபாடு ஏற்பட்டது.

புன்னைநல்லூர் மாரியம்மன் சந்நிதியில் மெளனமாக நின்றபடி காதுகளை அசைத்தபடி நின்றுகொண்டிருக்கும் யானையைப் போல் நடராஜன் மனமும் சதா பகவானின் நினைவில் அசைந்தபடி தன்னை விசிறிக்கொள்கிறது.

ஒவ்வொரு நாளும் பகவான் மீது அவர் அருட்பா மாலை கட்டி மானசீகமாய் அவர் திருவடிகளில் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். பிறகு திருவண்ணாமலை வந்துசேர்ந்த நடராஜன், ரமணரின் ஆசிரமத்துக்குச் செல்ல வில்லை. மலை மீது ஏறி ஒரு பாறையில் அமர்ந்து பகவான் மீது பாடல்கள் புனைந்தார். அவர் பாடிய பாடல்களை மரக்கிளைகளில் அமர்ந்து உட்கார்ந்தபடி கிளிகளும் குயில்களும் கேட்டன.

குயிலொடு கூறல்

பாடல் எழுதிய காகிதத்தோடு பகவானைத் தரிசிக்க வந்தார் நடராஜன். அதை பகவான் முன் படிக்க முடியாதபடி கண்ணீர் திரையிட்டது. பகவானே அதை வாங்கிப் படித்துவிட்டு அதற்கு ‘குயிலொடு கூறல்’ என்ற தலைப்பிட்டு முருகனாரிடம் காட்டு என்றார்.

முருகனார் அப்போது மலையின் மற்றொரு பகுதியில் இருந்த பலாக் கொத்தில் தங்கியிருந்தார். முருகனாரோடு அளவளாவி பகவான் மீது ராகதாளங்களோடு பாடல்கள் புனையும் ஆற்றலைப் பெற்று சாது ஓம் சுவாமி ஆனார் நடராஜன். அவர் இயற்றிய ரமண கீதங்கள், எளிமையும் இனிமையும் கொண்டு புதிய ராகங்களிலும் மெட்டுகளிலும் இயற்றப்பட்ட மெல்லிசைப் பாடல்களாக இருந்தன. அவற்றைக் கேட்போர் மிகுந்த ஆறுதலும் ஆன்மிகத் தெளிவும் அடைவது நிச்சயம்.

“எத்தனையோ கற்றனையே இதனைக் கேட்டாயா?” என்ற பாடல் தத்துவ, தெளிவைத் தரவல்லது.

எத்தனையோ கற்றனையே

இதனைக் கேட்டாயா

இனிமேலும் அமைதியாக

இருக்கமாட்டாயா? - நம்

புத்திக்கு எட்டாததெல்லாம்

நன்றாய்ப் புரிந்து நடக்கின்ற

ஒரு சக்திக்கு விட்டுவிட்டால் - உள்ளத்தில்

சாந்தி நிலைத்துவிடும்

மூட்டையை வண்டியில் வை தலைமேல்

முக்கிச் சுமக்காதே

மனச் சேட்டையால் ஆவதில்லை - திருவருள்

சித்தம் நடத்திவைக்கும்...

முதல்முதலாகப் பாடலை எழுதி எடுத்துக்கொண்டு ஆசிரமம் வந்ததைப் பற்றி சுவாமிகள் எழுதியுள்ள குறிப்பு தாமச குணங்களிலிருந்து அவரைத் தட்டி எழுப்பிய அனுபவமாகும்.

ஆசிரமத்தில் பக்தர்கள் உணவருந்திவிட்டு திரும்பிக்கொண்டிருந்த வேளை அது. நடராஜன் தயங்கி நிற்பதைப் பார்த்து ஒருவர் “ஏன் இங்கே நிற்கிறீர்கள்? உள்ளே இலை போட்டிருக்கிறது. போய் சாப்பிடுங்கள்” என்றார்.

நடராஜன் உள்ளே சென்றபோது பகவான் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் கூச்சத்துடன் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினார். பகவான் சாப்பிட்டு எழுந்ததும் மரியாதை நிமித்தம் இலையிலிருந்து எழுந்தவரை கையமர்த்தி ‘வந்த வேலையைப் பார்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பகவான். பின் அவரையே உற்றுநோக்கிய நடராஜனை நோக்கித் திரும்பி ‘வந்த வேலையைப் பார்’ என்று மீண்டும் சொல்லிச் சென்றார் பகவான்.

துரத்திய வாக்கு

சாப்பிட்டானதும் பகவானின் சத்சங்கத்தில் பங்குகொள்ள ஹாலில் சென்று அமர்ந்தவரைப் பார்த்து ‘வந்த வேலையைப் பார்’ என்றார் பகவான். நடராஜன் குழம்பிப்போனார். குழப்பத்துடன் தஞ்சை திரும்பினார். மாரியம்மன் கோயிலிலும் இருப்புக் கொள்ளவில்லை. ‘வந்த வேலையைப் பார்’, அவரை எங்கு சென்றாலும் துரத்தியது.

ஒருநாள் பளீரென்று விடிந்ததுபோல் மனம் தெளிந்தது.

“அடடா! இவ்வுலகுக்கு ஏன் வந்தாயோ, அந்த வேலையைப் பார்! பாடல் எழுதுவதும் என்னைப் பார்ப்பதும் முக்கியமல்ல. நீ உடல் அல்ல, ஆத்மா. இந்த உண்மையில் நிலைத்திரு” என்பதே இதன் பொருள் என்று உணர்ந்தார். தன் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு ரமணாஸ்ரமம் வந்தார். பகவானைச் சரண் அடைந்தார். பகவானைப் பூரணமாகப் புரிந்துகொண்டவர் சாது ஓம் சுவாமிகள் மட்டுமே என்று முருகனாரே கூறுவது உண்டு.

ஸ்ரீரமணகீதம், ஸ்ரீரமண வருகை, ஸ்ரீரமண வர்ணங்கள், ஸ்ரீஅருணாசல ஸ்துதி உபதேச வாத்தியார் விளக்க உரை எனப் பல நூல்களைப் படைத்தார்.

1950ஆம் ஆண்டில் தம் குருநாதரான பகவானின் மறைவைத் தாங்கமாட்டாமல் அவரது உள்ளம் விம்மி வெதும்பியதை அவர் இயற்றிய ‘அண்ணாமலை ரமணாண்டி’ என்கிற சிந்துப்பாடல் உணர்த்துகிறது.

சுவாமிகளின் தவ வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது இருந்த அவர் மனநிலையையும், அன்பர்களின் ஆன்மிகக் கேள்விகளுக்கான விளக்கத்தையும், பகவானின் வாழ்க்கைச் சம்பவங்க ளையும் தமது பாடல்களில் ஊடாடும்படி செய்திருக்கிறார் சாது ஓம் சுவாமிகள்.

பரதேசிகளுக்கு கடைசி பந்தி

ரமணரின் வாழ்வு பற்றிய அபூர்வ தகவல்களை ‘அருணாசல ரமணா' என்கிற ஆங்கில நாளேட்டின் ஆசிரியருக்கு அளித்த பேட்டியில் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருமுறை ஆசிரமத்தில் நிகழ்ந்த பூஜையின்போது பக்தர்களும் சாதுக்களும் பெரும் எண்ணிக்கையில் கூடிவிட்டதால், உணவுக்கூடத்தில் உணவு படைப்பதில் சிரமமும் தாமதமும் ஏற்பட்டது.

இதைக் கண்ட சர்வாதிகாரி (மேலாளர்) உரத்த குரலில் ‘பக்தர்கள் முதலில் சாப்பிட்ட பிறகே, பரதேசிகளுக்கு சாப்பாடு போடப்படும்’ என்று கூறினார். பகவான் இதை அறிந்தார். உணவு உண்பதற்கு வர மறுத்துவிட்டார். ‘எல்லோரும் சாப்பிடட்டும்; நானும் பரதேசிதான். ஆகவே உத்தரவுப்படி கடைசியாக சாப்பிடுகிறேன்’ என்றார். சர்வாதி காரி, தனது தவறை உணர்ந்து பரதேசிகளுக்கு முதலில் உணவு பரிமாற ஏற்பாடுசெய்தார்.

புற்றுநோயிலும் நகைச்சுவை

பகவான் ரமணரின் கையில் புற்றுநோய் வந்தது பற்றி பக்தர்கள் மிகுந்த கவலைக்கு உள்ளானபோது, பகவான் சிரித்தபடி சொன்னார் ‘இந்த உடலே ஒரு நோய். நோய்க்கு ஒரு நோய் வந்தால் அது நல்லதுதானே?’

தமது ஸ்ரீரமண கீதத்தில் ஓரிடத்தில் ‘சாகத் தெரிந்துகொண்டோம்’ என்று சாது ஓம் சுவாமி குறிப்பிட்டிருப்பார்.

வாழத் தெரிந்து கொள்வதுபோல் சாகவும் தெரிந்துகொள்ள வேண்டும். பின்னதைத் தெரிந்துகொள்ள பரிபக்குவம் வேண்டும். இப்பக்குவத்தைப் பெற்ற சுவாமிகள் 1985ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதி, சாது ஓம் சுவாமிகள் மகாசமாதி அடைந்தார். முப்பது ஆண்டுகள் ஆசிரம வாழ்க்கை முடிவுக்கு வந்தது. சாது ஓம் சுவாமி வந்த வேலை முடிந்தது. விடைபெற்றார்.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x