Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மின்கம்பியில் உட்காரும் காகம் தப்பிப்பது எப்படி?

இரு சக்கர வாகன உரிமம் பெற ஏன் 8 போடச் சொல்கிறார்கள், டிங்கு?

- ச. பாலமுருகன், 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

வாகன உரிமம் பெற, வாகனங்களை ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சாலை விதிகளை அறிந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு வாகன ஆய்வாளர் முன் 8 போடச் சொல்வார்கள். ஓட்டுநர் உரிமம் வழங்கும் விதிகளின்படி 8 போன்ற வளைவுகளுக்குள் ஓட்டினாலே, அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், 8 போடச் சொல் கிறார்கள், பாலமுருகன்.

மலைகளின் உயரங்களை எப்படி அளக்கிறார்கள், டிங்கு?

- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

தொழில்நுட்பக் கருவிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், மலைகளின் உயரங்களைக் கண்டுபிடிப்பது சவாலான விஷயமாகத்தான் இருந்தது. ஒரு மரத்தின் உயரத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றால், சற்றுத் தொலைவில் நின்றுகொள்ளுங்கள். ஒரு கண்ணை மூடிக்கொள்ளுங்கள். திறந்திருக்கும் கண்ணுக்கு முன்பாக குச்சி அல்லது ஸ்கேலை மலையின் உயரத்துக்குப் பிடியுங்கள். பிறகு அந்த ஸ்கேலை நகர்த்தாமல் கிடைமட்டமாகக் கொண்டு வாருங்கள். அதன் முனை எங்கே இருக்கிறது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது மரத்தின் அடிப்பகுதியில் இருந்து ஸ்கேலால் குறித்த பகுதி வரை அளந்து பாருங்கள். அதுதான் மரத்தின் உயரம். ஆரம்பத்தில் இப்படித்தான் மலையின் உயரத்தைக் கணக்கிட்டார்கள். தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, ஆல்டிமீட்டர், செயற்கைக்கோள், ஜிபிஎஸ் போன்றவற்றின் உதவியால் மலைகளின் உயரங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது, இனியா.

உயிருக்குக் கனபரிமாணம் இருக்கிறதா, டிங்கு?

- ஆறு. விகாசினி, 9-ம் வகுப்பு, ஜெயம்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளி, நாச்சியாபுரம், சிவகங்கை.

உயிரினங்களுக்குக் கனபரிமாணம் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் விகாசினி... எல்லா உயிரினங்களுக்கும் பொருட்களுக்கும் கனபரிமாணம் உண்டு.

மின்கம்பியில் அமரும் காகம் இறப்பதில்லையே ஏன், டிங்கு?

- தேஜயா, 4-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

மின்கம்பிகளில் அமரும்போது மின்சாரம் தாக்குவதில்லை. மின்கம்பியில் உட்கார்ந்து நிலத்திலோ கம்பத்திலோ மரத்திலோ உடல் படும்போதுதான் மின் அதிர்ச்சி ஏற்படும். பறவைகள் மின்கம்பிகளில் உட்கார்ந்துவிட்டு, தரைக்கு வருவதில்லை. அதனால் பறவைகள் மின் அதிர்ச்சியிலிருந்து தப்பிவிடுகின்றன. ஒரு பெரிய பறவை மின்கம்பியில் அமர்ந்துகொண்டு மரத்தையோ, கம்பத்தையோ தொடும்போது மின் அதிர்ச்சியில் இறந்துவிடும். எப்போதாவது இப்படிச் சிலப் பறவைகள் இறந்து போனதைப் பார்த்திருக்கலாம். பறவைகள் பொதுவாக ஒரு கம்பியில்தான் அமர்கின்றன. இரு கம்பிகளில் அமரும்போது மின்சாரம் தாக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும், தேஜயா.

பசிக்கும் போது வயிற்றில் ‘கடமுட’ என்று சத்தம் வருகிறதே ஏன், டிங்கு?

- ஆர். அஸ்வத் ராஜ், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, செஞ்சி, திருவண்ணாமலை.

பசிக்கும்போதுதான் வயிற்றிலிருந்து சத்தம் வருகிறது என்று சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் வயிற்றிலிருந்து சத்தம் வரலாம். உணவு உட்கொள்ளும் பகுதியிலிருந்து கழிவாக வெளியேறும் பகுதி வரை உள்ள உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் எல்லாமே சுருங்கிச் சுருங்கி விரிகின்றன. அதன் மூலமாகத்தான் உணவு அரைத்து, கூழாக்கப்பட்டு, அவற்றிலிருந்து சத்துகள் பிரிக்கப்பட்டு, உயிரணுக்களுக்கு அனுப்பப்பட்டு, எஞ்சிய கழிவுகள் மலமாக வெளியேற்றப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு 3 முதல் 12 முறை சுருங்கி விரியும்போது வயிற்றுக்குள் சத்தம் உண்டாகிறது. வயிறு காலியாக இருக்கும்போது, இந்தச் சத்தம் சற்று அதிகமாகக் கேட்கிறது, அஸ்வத் ராஜ்.

வெண்டைக்காய் சாப்பிட்டால் நன்றாகக் கணக்கு போட முடியும் என்பது உண்மையா, டிங்கு?

- வி. சிந்தாணிக்கா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

எல்லா காய்களையும் போல் வெண்டைக்காயிலும் சத்துகள் நிறைந்துள்ளன. வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு காரணமாகச் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். சத்து நிறைந்த வெண்டைக்காயைச் சாப்பிட வைப்பதற்காக, ‘இதைச் சாப்பிட்டால் நல்லா கணக்கு வரும்’ என்று சொல்லியிருப்பார்கள். அது நாளடைவில் உண்மைபோல் நிலைத்துவிட்டது. வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது. ஆனால், அது மட்டுமே சாப்பிட்டு கணிதத்தில் புலியாகிவிட முடியாது, சிந்தாணிக்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x