Published : 17 Oct 2015 10:55 am

Updated : 17 Oct 2015 10:59 am

 

Published : 17 Oct 2015 10:55 AM
Last Updated : 17 Oct 2015 10:59 AM

மரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி?

விதவிதமான `டூத்-பிரஷ்களும்’, வண்ண வண்ண `டூத்-பேஸ்ட்களும்’ பயன்படுத்தப்பட்டாலும் இன்றைய தலைமுறைக்கு 30 வயதிலேயே பற்கள் ஆட்டம் காண்பதும், சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகள் பற்களில் குடியிருப்பதும், பல் கூச்சம் அதிகமாவதும் ஏன்?

பற்பசைகளும், பிரஷ்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே நம் முப்பாட்டன்களும் பாட்டிகளும் பற்களை நன்றாக பராமரித்தது எப்படி? அவர்கள் நூறு வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தது மட்டுமன்றி, பற்களுக்கும் நூறு வயதில் ‘ஹாப்பி பர்த்-டே' கொண்டாடியது எப்படி? இதற்கான விடைகளை அறிய சித்த மருத்துவ பல் பராமரிப்பு முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

குச்சி வகைகள்

`ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியும் `ஆலப் போல் வேலப் போல், ஆலம் விழுதைப் போல்’ என்ற கவிஞர் வாலியின் வரிகளும், ஆலம் விழுது மற்றும் கருவேல மர குச்சிகளின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.

‘வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்கு பல் துலங்கும் நாயுருவி கண்டால் வசீகரமாங் காண்' எனும் பதார்த்த குண சிந்தாமணி பாடல், வேல மரக் குச்சிகளில் பல் துலக்க, பற்கள் உறுதியாகிக் கல்லுக்கு நிகராகத் திடமாகும் எனவும், வேப்பங் குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் என்றும் வலியுறுத்துகிறது.

பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

சுவையும் பலனும்

துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து ஈறுகள் பலமடையும். பற்களும் பிரகாசமாகக் காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும்.

எப்படி பயன்படுத்தலாம்?

பசுமையான மரங்களிலிருந்து, பூச்சி அரிக்காத நல்ல குச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீரால் கழுவி, ஒரு பக்க நுனியை கடித்து, ‘பிரஷ்’ போல மாற்றிக்கொண்டு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு பல், பல் இடுக்குகளிலும், ஈறுகளிலும் குச்சியின் நுனியைக்கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். நடந்துகொண்டும் `செல்-போனில்’ பேசிக்கொண்டும் பல் தேய்க்கக் கூடாது. ஓரிடத்தில் நிலையாக இருந்து, மனதை ஒருமுகப்படுத்தி பல் துலக்க வேண்டும் என்கிறது சித்த மருத்துவம்.

வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் `ஸ்கர்வி’ (Scurvey) நோயில் ஈறுகளிலிருந்து ரத்தம் கசிவது இயல்பு. எனவே, அந்த நிலையில் டூத்-பிரஷ்களையோ, குச்சிகளையோ பயன்படுத்தாமல் வேப்பங் கொழுந்தால் ஈறுகளை மிருதுவாகத் தடவலாம். திரிபலா சூரணத்தால் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை) வாய் கொப்பளிக்கலாம். அத்துடன், வைட்டமின் சி குறைபாட்டைப் போக்க மருத்துவ சிகிச்சை தேவை. கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், காய்கள், பால் பொருட்களை உட்கொள்வதால் பற்கள் பலமடையும்.

இயற்கை பற்பொடிகள்

சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம். லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும். திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது. கடுக்காய் பொடியால் பல் துலக்க ஈறு வலி, புண், ஈறிலிருந்து குருதி வடிதல் குணமாகும்.

வாயை கொப்பளிப்போம்

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் வாயை நீரால் நன்றாகக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். தினமும் நல்லெண்ணெயால் வாய் கொப்பளித்து வந்தால் பற்களின் நலனுடன் சேர்த்து, உடல்நலமும் சிறப்படையும். ஆலம் பாலில் வாய் கொப்பளிக்க அசைகின்ற பல்லும் இறுகும் என்பதை `ஆலம்பால் மேக மறுதசையும் பல்லிறுகும்’எனும் அகத்தியர் குணவாகடப் பாடல் உணர்த்துகிறது. ஓமத் தீநீரால் வாய் கொப்பளிக்க, பற்களிலுள்ள கிருமிகள் மடியும்.

காலை எழுந்ததும் சிகரெட்டைத் தேடும் நவீன மனிதனின் மனம், வேப்பங் குச்சியையும் வேலமர குச்சியையும் தேடத் தொடங்கிவிட்டால், சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படுவது மட்டுமன்றி, பற்களும் ஆரோக்கியமடையும். டூத்-பிரஷ்களையும், டூத்-பேஸ்ட்களையும் அன்றாட வழக்கத்திலிருந்து முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், அவ்வப்போது இயற்கையின் செல்வங்களான குச்சிகளையும், பற்பொடிகளையும் பயன்படுத்த முயற்சிப்போம். நம் ஆரோக்கியத்தை இயற்கையும் எதிர்பார்க்கிறது.பல் வலிக்கு எளிய மருந்துகள்

# பழுத்த கத்திரிக்காயைப் பல இடங்களில் ஊசியால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி பல் வலிக்குக் கொடுக்கலாம்.

# கொய்யா இலைகளை வாயிலிட்டு மென்று சாப்பிடலாம்.

# சுக்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக்கிப் பற்களில் கடித்து சாப்பிடலாம். நந்தியா வட்டை வேரை மெல்லலாம்.

# மருதம் பட்டை பொடியால் பல் துலக்கலாம். லவங்கத் தைலத்துக்கு உணர்ச்சி போக்கும் (Anaesthetic) தன்மை இருப்பதால், அதை பஞ்சில் நனைத்து பற்களில் வலி ஏற்படும்போதும், ஆரம்ப நிலையில் உள்ள சொத்தைப் பற்களுக்கும் வைக்கலாம்.பயன்படுத்தக் கூடாதவை:

செங்கல் தூள், மண், கரி, சாம்பல், கிருமிகள் தாக்கிய குச்சிகள் ஆகியவற்றை பல் துலக்க பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

பற்கள் பாதுகாப்புபற்கள் நலன்பல் கூச்சம்பற்பசைடூத் பிரஷ்கள்சித்த மருத்துவம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author