Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

தித்திப்பு பாதி; வேட்டி, சேலை மீதி!

பொங்கல், கரும்பு, விடுமுறைத் குதூகலம் இவற்றைத் தாண்டி பாரம்பரிய உடைகளும் இன்றைய இளைய தலைமுறையினரின் பொங்கல் விருப்பப் பட்டியலில் சேர்ந்துவிட்டன. எப்போதும் ஜீன்ஸ் சகிதம் காட்சியளிக்கும் இளைஞர்கள் அன்றைய நாளில் ‘அரும்பாடுபட்டு’ வேட்டிக்கு மாறிவிடுவார்கள். விதவிதமாக நவீன உடைகளில் வலம்வரும் யுவதிகளும் பாரம்பரியச் சேலைக்குத் தாவிவிடுகிறார்கள். இந்த கரோனா காலத்தில் பொங்கலை எப்படிக் கொண்டாடப் போகிறீர்கள் என்று இளைய தலைமுறையினர் சிலரிடம் கேட்டபோது...

ஒட்டிக்கோ கட்டிக்கோ

“சமீப வருஷமா பொங்கல் அன்னைக்கு வேட்டிக் கட்டுறதுல ஆர்வம் வந்துடுச்சு. வேட்டி கட்டிட்டுப்போனாலே தனி கெத்துதான். வேட்டி கட்டினா அவிழ்ந்துக்குமோன்னு முன்னாடி பயந்திருக்கேன். இப்போதான் ஒட்டுற வேட்டி வந்துடுச்சே, வேட்டி கட்டிக்கிறதும் சுலபமாயிடுச்சு. வழக்கமா பொங்கல் அன்னைக்கு புதுப் படம் பார்ப்பேன். ஆனா, இந்த முறை கரோனா பீதி இருக்குறதால, தியேட்டர் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன்” என்கிறார் சென்னை தினேஷ்.

புடவை புராணம்

“முன்பெல்லாம் பொங்கல் திருநாள் வந்தா, சேர்ந்தாப்ல நாலு நாள் லீவு கிடைக்குமேன்னு சந்தோஷமா இருக்கும். இப்போல்லாம் என்ன கலர் புடவை கட்டலாம்கிறதுல ஆர்வம் வந்துடுச்சு. பொங்கல் அன்னைக்கு பார்க்குற எல்லோருமே புடவையில இருக்குறப்ப, நாம மட்டும் மாடர்ன் டிரஸ்ல இருந்தா நல்லாவா இருக்கும்?” என்கிறார் திருச்சி கீர்த்தனா.

“தினமும் புடவை கட்ட முடியாதுங்கிறதால பொங்கல் அன்னைக்கு என்னோட சாய்ஸ் புடவைதான். அழகா கட்டிக்கிட்டு, கரும்பு கடிச்சிட்டு, அம்மா செய்யுற சக்கரப் பொங்கலை சுடச்சுடச் சாப்பிட்டுட்டு டி.வி.யில புது படம் பார்க்கிறதுதான், என்னுடைய பொங்கல் கொண்டாட்டம்” என்கிறார் கோவை ஜீவிகா.

ஆமா, நீங்க எப்படி கொண்டாடப் போறீங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x