Published : 11 Jan 2021 09:58 AM
Last Updated : 11 Jan 2021 09:58 AM

வணிக சுழற்சி அடிப்படையிலான முதலீடு ஏன் தற்போது அவசியமாகிறது? 

ஷேக் ஜிலானி

நிர்வாக இயக்குநர், ஜே2 வெல்த் & இன்வெஸ்மென்ட்ஸ்.

ஒரு முதலீட்டுக்கான அடிப்படைச் செயல்பாடு என்பது, ஒரு நிறுவனத்தின் பங்குதாரர் வருமானம் மற்றும் மேலாண்மைத் தரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாக இருக்கிறது. பெரும்பாலும், அந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், அத்தகைய மதிப்பீடுகளில் மட்டும் கவனம் செலுத்துவது முதலீட்டுக்கான சரியான வழிமுறை இல்லை.

ஏனென்றால், அந்த மதிப்பீடுகள் நம்மை, முன்பக்கம் பார்ப்பதைவிடவும், பின்பக்கம் பார்க்கவே தூண்டுகிறது. அதாவது, முன்பக்கம் பார்க்கும்போதுதான், நிறுவனத்தின் வருவாய் வாய்ப்புகள், அத்துறை சார்ந்த நல்வாய்ப்புகள், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் இடர்படும் தடைகள், மாற்று வழிகள் குறித்து புரிதல்கள் கிடைக்கும்.

பொருளாதார நல்வாய்ப்புகள் மற்றும் தனிபட்ட நபரின் தொழில் நல்வாய்ப்புகள் ஆகிய இரண்டும் சுழற்சி முறையிலானவை என்று வரலாறு நமக்குச் சொல்லுகிறது. இந்தப் பாடம், எதிர்காலத்தை நோக்கியப் பயணத்தில் கடந்த கால செயல்பாடுகளை வழிகாட்டியாக கொள்வது நம்பிக்கைக்குரியது அல்ல என்று நமக்கு உணர்த்துகிறது. கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகளை வடிவமைக்கும் நிகழ்வுகளில் பல ஏற்ற இறக்கங்கள் நடந்துள்ளன. அவை சந்தையில் முன்னணி வகித்து வந்த துறைகளில், பங்குகளில் பெரும் மாற்றங்களை கொண்டுவந்திருக்கின்றன.

நிகழ்காலத்தில் அத்தகைய ஏற்ற இறக்கப் புள்ளிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமானது. ஆனால், அத்தகைய ஏற்ற இறக்கப்புள்ளிகளை அடையாளம் காணும் வாய்ப்பு கீழிலிருந்து மேல் என்ற முறையைப் பின்பற்றும் முதலீட்டாரை விடவும் மேலிருந்து கீழ் என்ற முறையைப் பின்பற்றும் முதலீட்டாளரிடமே அதிகம் இருக்கிறது. தற்போதைய சூழல் பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கரோனா பரவல் குறைந்திருப்பது, தடுப்பு மருந்து கிடைத்திருப்பது போன்ற காரணிகள் வணிகச் சுழற்சிவடிவத்தை மாற்றி அமைக்கக்கூடும்.

அந்த வகையில், பங்குகளிலிருந்து எளிதாக பணம் கிடைத்துக் கொண்டிருந்த நாட்கள் முடிவுக்குவிட்டது என்று சொல்லலாம். கடந்த பத்தாண்டுகளில் மத்திய வங்கிகளின் எளிதான பணக் கொள்கைகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் பங்குகளுக்கும், நீண்ட கால கடன்களுக்கும் சாதகமாக இருந்திருக்கிற தென்றால், அடுத்த பத்தாண்டுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம். அதாவது, அடுத்த பத்தாண்டு காலகட்டத்தில் பங்கு மதிப்புகளும், வட்டி விகிதங்களும் உயரக்கூடும். விளைவாக, பங்கு விலைகளிலும், நிறுவனங்களின் செயல்பாடுகளிலும் கடும் ஏற்ற இறங்கங்கள் நிகழும். தவிர, அது கணிக்க முடியாததாகவும் இருக்கும்.

இந்தச் சூழலில் கீழிலிருந்து மேல் என்ற முதலீட்டு முறையிலிருந்து மேலிருந்து கீழ் என்ற முதலீட்டு முறைக்கு மாறுவது அவசியமானதாக மாறியிருக்கிறது. சந்தைகளில் முன்னிலை வகிக்கும் துறைகளின் மதிப்புகள் மிக வேகமாக மாறக்கூடும். எனவே, அந்தந்தத் துறைகளில் மற்றும் தொழில்போக்குகளில் நிகழும் மாற்றங்களை உடனடியாக அடையாளம் காண்பது அவசியம். அந்த வகையில் தற்போதைய சூழல், வணிகச் சுழற்சி அடிப்படையிலான முதலீட்டுக்கு (Business Cycle Investing) சரியான தருணமாக இருக்கிறது.

வணிக சுழற்சி முதலீடு என்பது சரியான துறைகளைத் தேர்ந்தெடுப்பது, மேலிலிருந்து கீழ் அனுகு முறையை கைகொள்வது, சந்தை மதிப்பு குறித்து சந்தேகத்துடன் இருப்பது, தேர்ந்தெடுத்தவற்றில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆகையால், வணிகசுழற்சி நிதித் திட்டம் (Business Cyclefund) தற்போது முக்கியத்துவம் மிகுந்ததாக உருவெடுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x