

ஜவஹர்லால் நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 1942-ல் கைதாகி அகமதுநகர் கோட்டைச் சிறையில் கைதியாக இருந்தபோது, 1944 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் எழுதிய ஆங்கில நூலான Discovery of India-ன் தமிழாக்கமே ‘கண்டுணர்ந்த இந்தியா’. இது ஜெயரதனால் மொழியாக்கம் செய்யப்பட்டு, பூரம் பதிப்பகத்தால் 1989-ல் வெளியிடப்பட்டு 2004, 2010, 2011-ம் ஆண்டுகளில் மறுபதிப்புகள் செய்யப்பட்டுள்ளது. சிறையிலிருந்து 1945 ஜுன் மாதம் விடுதலையாகி 6 மாதங்கள் கழித்து, இந்த நூலுக்கு ஒரு பிற்சேர்க்கையை இரண்டு பக்கங்களில் நேரு எழுதியுள்ளார். 1945 மார்ச் வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பாகவே இந்த நூல் அமைந்துள்ளது. அதற்குப் பின் அதனை நீட்டிக்க நேருவுக்கு நேரம் கிடைக்கவில்லை.
உலகம் முழுக்க பரவலான வாசகர்களைக் கண்ட இந்த நூல் இன்றைக்கு மேலும் கூடுதல் ஆர்வத்துடன் வாசிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் நேருவின் பரந்த வாசிப்பும் அனுபவமும்தான். அவரது ஆழ்ந்த புலமை இந்த நூலின் மூலம் நமக்கு அனுபவமாகிறது. தான் படித்த எண்ணிலடங்கா நூல்களின் சாராம்சத்தை இந்த நூலில் நமக்குப் பிழிந்து தருகிறார். ஒரு நூலில் பல நூல்களைப் படித்த ஞானம் நமக்குக் கிட்டுகிறது.
பானிப்பட் போர்கள், பிளாசி யுத்தம் யாருக்கிடையே, எந்த ஆண்டில் நடந்தன என்பன போன்ற வறட்டுத்தனமான தகவல்களை மட்டும் கற்பிக்கும் நமது சரித்திரப் பாட நூல்கள், சிந்தனையற்றவர்களாய், நம்மைச் சோர்வடையச் செய்யும். ஆனால், இந்த நூல் பரபரப்பாக நமது சிந்தனையைத் தூண்டிக் கவர்ந்திழுக்கிறது.
நேரு, இந்தியாவின் தொன்மையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைகளை இந்த நூலில் வெளிப்படுத்துகிறார். ‘பலதரப்பட்ட வாழ்நிலை கொண்ட மக்களிடையே அடிப்படையான ஓர்மை ஒன்றைப் பல்லாயிரம் ஆண்டுகளாய் இந்தியா பேணி வந்திருக்க வேண்டும். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாய் எண்ணிறந்த அந்நியப் படையெடுப்புக்களையும், ஆட்சிகளையும் மீறி, ஒரு கலாச்சாரத்தை அதனால் காப் பாற்ற முடிந்திருக்கிறது. அந்த அடிப்படையான ஒன்று, என்ன? நேருவுடன் சேர்ந்து இந்த நூலுக் குள்ளும் அதற்கு வெளியிலும் நாமும் தேடலாம், வாருங்கள்.
வெறும் துண்டுதுண்டாய்க் கிடக்கும் சரித்திர நிகழ்வுகளுக்கிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி, காத்திரமான முடிவுகளுக்கு எப்படி வருவது என்று நேரு நம்மைப் பழக்கப்படுத்துகிறார். இந்தியாவைக் கைப்பற்றி ஆட்சிபுரிந்த அனைவரும் நமது கலாச்சாரத்துக்குள் ஐக்கியமாகிவிட்டார்கள். இதற்கு ஆங்கிலேயர்கள் மட்டும் விதிவிலக்கு. அவ்வாறு ஐக்கியமாகவில்லையெனில் இந்திய மக்களைத் தொடர்ந்து ஆள முடியாது என்பதை ஆங்கிலேயர் களுக்கு முன்பு இருந்தவர்கள் அறிந்துகொண்டனர். ஒளரங்கசீப் ஒரு விதிவிலக்காகவும் உதாரணமாகவும் இருந்தார்.
15-ம் நூற்றாண்டு வரை அனைத்துக் கலைகளிலும், அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஏறுமுகத்தில் இருந்த இந்தியா, 16-ம் நூற்றாண்டில் மீள முடியாத தேக்கத்தில் சிக்கிக்கொண்டது. மவுரியர்கள், குப்தர்கள், குஷாணர்கள் ஆட்சிகளில் மேன்மை பெற்ற இந்தியா, இஸ்லாமியர்களின் ஆட்சியில் ஒரே நேரத்தில் சுபிட் சத்தையும் தேக்கத்தையும் அடைந்தது. குறிப்பாக அக்பரின் ஆட்சியின்போது மதநல்லிணக்கமும், சிறந்த பாகுபாடற்ற நிர்வாகமும், ஜனநாயகமும் செழித்திருந்தன.
ஆனால், சமகாலத்தில் வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை குறித்தோ, போர்ச்சுகீசியர்களின் பெருகிவந்த ஆதிக்க அபாயம் குறித்தோ அக்பரும் அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்களும் கவலைப்படவில்லை. இந்தியாவின் ராணுவ வல்லமையை மேம்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவையை உணர முடியாத அளவுக்கு அவர்கள் மெத்தனமாக இருந்தனர். இதனால்தான், முதலில் வணிக நோக்கத்துடன் மட்டும் இந்தியாவுக்குள் காலடி வைத்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற ஆசை தொற்றிக்கொண்டது. இதுபோன்ற ஏராளமான அம்சங்களை நேரு நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இந்து மதம், சமஸ்கிருத மொழியின் ஆளுமை, புத்த மதம் பிரிந்தது, பின்னர் இரண்டாகப் பிளவுபட்டது, துவைத, அத்வைத முரண்பாடுகள், வேதங்களை விட முன்னேறிய உபநிஷத்துக்கள், பதஞ்சலி முனிவரின் யோக முறை, முதல் உலகப் போரின் பின்னணி, முஸ்லிம் லீக்கின் பிரிவினைவாதம், காந்தியடிகளுடன் முரண்பாடு, தீண்டாமை மற்றும் ஜாதி பாகுபாடு, லோகாயதவாதம், வங்கப் பஞ்சம் இன்னும் இவை போன்ற பல விடயங்களுக்கு இந்நூல் விடையளிக்கிறது. நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
சரித்திரத்தைப் புத்தகங்களின் மூலம் படித்துத் தெரிந்துகொள்வது வேறு. அச்சரித்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாயிலாக அதனைத் தெரிந்துகொள்வது வேறு. விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, இந்திய வரலாற்றை நேரு தொகுத்திருக்கிறார். எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதும், மறு சிந்தனையின்றி ஒரேயடியாக நிராகரிப்பதும் நேருவின் நோக்கமல்ல. எது சிறந்தது, எது தவறானது என்று முடிவுறாத ஆய்வுகளை மேற்கொள்கிறார். நாமும் அவருடன் பயணிக்கலாம். பலவற்றைக் குறித்து எந்தத் தீர்மானமான முடிவையும் அவர் முன்வைக்கவில்லை. முடிவெடுக்கும் பொறுப்பையும் சுதந்திரத்தையும் நம்மிடம் விட்டுவிடுகிறார். அவ்வகையில் வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டும் நூல் இது.
தொடர்புக்கு: veeveekalai@gmail.com
கண்டுணர்ந்த இந்தியா
ஜவஹர்லால் நேரு
பூரம் பதிப்பகம்
பு.எண்.2, ராஜு நாயக்கர் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை-600 033.