

அனைத்து அவசர உதவிக்கும் 112
அமெரிக்காவில் அனைத்து அவசர உதவிக்கும் 911 என்ற ஒரே எண் இருப்பது போல, இந்தியாவிலும் 112 எனும் ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தை அமலாக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) அக்டோபர் 3-ம் தேதி மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் இப்போது பல்வேறு அவசர உதவிகளுக்காக 100 (போலீஸ்), 101 (தீ), 102 (ஆம்புலன்ஸ்) மற்றும் 108 (பேரிடர்) ஆகிய எண்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவிக்கும் பயன்படுகிறது.
எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக 112 என்ற ஒரே எண் அறிமுகம் செய்யப்படும். அதேநேரம், பழைய எண்களும் இரண்டாவது வாய்ப்பாகச் சிறிது காலம் பயன்பாட்டில் இருக்கும். இப்போது பயன்பாட்டில் உள்ள எந்த எண்ணை அழைத்தாலும் 112-க்கு திருப்பிவிடப்படும். பின்னர் படிப்படியாக இந்த எண்கள் வழக்கத்திலிருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையில் இணக்கத்தை மேம்படுத்துதல், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமை ஆகியவை குறித்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அக்டோபர் 1-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இலங்கை உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணை நடைபெறும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
ஐநா தீர்மானம் இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமாகவும் உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஐநா தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்கள் தங்களின் இலக்கை அடைவதற்கு ஒரு வழி பிறந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறியிருக்கிறார்.
முன்னதாக, ஐநா தீர்மானம் தொடர்பாக மத்திய அரசு தலையிடக்கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக செப்டம்பர் 16-ம் தேதி நிறைவேற்றியது.
நேபாள பிரதமர் ராஜினாமா
நேபாள பிரதமர் சுஷீல் கொய்ராலா அக்டோபர் 3-ம் தேதி ராஜிநாமா செய்தார். கருத்தொற்றுமையுடன் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய அரசியல் கட்சிகளுக்கு அதிபர் ராம் பரன் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2014 பிப்ரவரி 10-ம் தேதி நேபாள பிரதமராக சுஷீல் கொய்ராலா பொறுப்பேற்றார். அண்மையில் புதிய மதச்சார்பற்ற அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, தான் ராஜினாமா செய்வதாக கொய்ராலா அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து புதிய பிரதமராக மார்க்சிஸ்ட் யு.எம்.எல். கட்சியைச் சேர்ந்த கட்க பிரசாத் சர்மா ஒளி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காந்தி வேடமணிந்து கின்னஸ் சாதனை
மகாத்மா காந்தியின் 147-வது பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காந்தியின் போதனைகளை விளக்கும் நாடகம், நடனம், பாடல்கள் நிகழ்த்தப்பட்டன.
காந்தியின் பேத்தி சுமித்ரா காந்தி, கலை நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 4605 மாணவர்கள் காந்தி வேடமணிந்து அணிவகுத்து நின்றனர்.
இந்தக் கலை நிகழ்ச்சியின் மூலம், கடந்த 2009-ல் தமிழகத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 2955 மாணவர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
சிங்காரவேலர், என்.ஜீவரத்தினம் மணி மண்டபங்கள்
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதை சுடரொளி என்.ஜீவரத்தினம் மணி மண்டபங்கள் அமைக்கும் திட்டத்தை செப்டம்பர் 29-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
சென்னை மயிலாப்பூர் மீனவர் பகுதியில் பிறந்து வழக்குரைஞராகி, மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தின்போது தனது வழக்குரைஞர் அங்கியை தீயிட்டு கொளுத்தியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். முதன் முதலாக மே தினத்தை கொண்டாடிய பெருமைக்குரியவர்.
அதுபோல திராவிட இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகவும், மீனவர்களின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் சுயமரியாதை சுடரொளி என்.ஜீவரத்தினம்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை ராயபுரத்தில் ரூ. 2 கோடியே 34 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலர், ஜீவரத்தினம் மணி மண்டபங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொகுப்பு: பிரம்மி