Last Updated : 16 Oct, 2015 12:38 PM

 

Published : 16 Oct 2015 12:38 PM
Last Updated : 16 Oct 2015 12:38 PM

இது பீச்சாங்கரை கிரிக்கெட் மாமு!

ஈ.சி.ஆரின் மெரினாவாக ஆகிக்கொண்டிருக்கும் திருவான்மியூர் கடற்கரையில் கடலுடன் போட்டி போட்டுக்கொண்டு மக்களும் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் போனால் அங்கே ஒரு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. பத்துப் பன்னிரண்டு பேர் சேர்ந்த கேங் ஒன்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது. கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? இது கடற்கரை கிரிக்கெட் இல்லை. ‘கரையில் பாதி கடலில் பாதி கலந்து ஆடும்’ கிரிக்கெட்.

ஆம், அலை வந்து மோதும் இடத்தில் நின்றுகொண்டு விளையாடினார்கள். ஆஃப் திசையிலும் ஸ்ட்ரெய்ட்டாகவும்தான் அடிக்கலாம். லெக் திசையில் கரை உயரும் வரை மட்டும் அடிக்கலாம். ஈஸியாக காற்று லெக் திசையில் பந்தை அடித்துக்கொண்டு போய்விடும் என்பதால் அப்படி ஒரு ஃபீல்டிங் ரெஸ்ட்ரிக்‌ஷன். அலைகளுக்கிடையில் இரண்டு மூன்று ஃபீல்டர்கள். அவர்களை ஃபீல்டர்கள் என்று சொல்வதா, பந்து பொறுக்கிப் போடுபவர்கள் என்று சொல்வதா? கொஞ்சம் சிரமம்தான்!

யார் தலைவர்?

சற்று நேரம் அவர்களது ஆட்டத்தைப் பார்த்தோம். ஏதோ விளையாட்டுக்காக விளையாடுவது போல் தெரியவில்லை. ஒவ்வொரு பந்துக்கும் தகராறு. அதுவும் வெவ்வேறு காம்பினேஷன்களில். அப்படி இருந்தும் கிண்டல் கேலிக்கும் கலாய்ப்புக்கும் கொண்டாட்டத்துக்கும் உற்சாகத்துக்கும் குறைவில்லை. இந்த கிரிக்கெட்டின் இன்னொரு விசேஷம், பலரும் நீச்சல் உடையில் இருந்தார்கள்!!!

சரி என்று ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தவரிடம் பேச்சு கொடுத்தால், அவர் ஆட்டத்தில் கவனம் செலுத்தியபடி ‘இந்த இன்னிங்ஸ் முடியட்டும் பாஸ். விலாவாரியா சொல்றோம்’ என்று பிகு செய்தபடி இப்படியும் அப்படியும் ஓடிக்கொண்டிருந்தாரே தவிர, பந்துதான் அவர் கண்ணுக்கும் கைக்கும் சிக்கவில்லை.

ஒரு இன்னிங்ஸ் முடிந்ததும் வந்தவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம். ‘உங்களில் யார் கேங் லீடர்’ என்று கேட்டதற்கு சிவா என்பவரை நோக்கிக் கையைக் காட்டினார்கள். ‘சொல்லுங்க சிவா, இப்படியொரு கிரிக்கெட் விளையாடணும்னு எப்படி உங்களுக்குத் தோணிச்சு?’

செக் போஸ்ட் பாய்ஸ்

‘நாங்க எல்லோரும் ரெண்டு வருஷமா இங்கே வாலிபால் விளையாடிட்டிருந்தோம். பீச்ல கூட்டம் ரொம்ப அதிகமானதால வேற என்ன பண்றதுன்னு யோசிச்சிக்கினு இருந்தப்ப இந்த ஐடியா வந்துச்சு. கரைக்கும் மேலே செடிகள் அடர்ந்திருப்பதால, இங்கே மக்கள் கூட்டம் வர மாட்டாங்க. ஆனால், அலை வந்து மோதுற எடம் மட்டும்தான் மண்ணு. அதனால அந்த இடத்தையே பிட்சாக்கிப் பிச்சுப்பிச்சு வாங்குறோம்’ என்றார்.

‘நீங்கள்லாம் எங்கேருந்து வர்றீங்க? எப்படிப் பழக்கம்?’ என்று கேட்டதற்கு கோரஸாக ‘நாங்க எல்லாம் வேளச்சேரி செக்போஸ்ட் பாய்ஸ்’ என்று கத்தினார்கள்.

‘சின்ன வயசிலேருந்து நாங்க ஃபிரண்ட்ஸ். இதிலே அண்ணன் தம்பி இருக்காங்க. பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. ஒண்ணாப் படிச்சவங்க இருக்காங்க. ஒண்ணா வேலை பாக்குறவங்க இருக்காங்க. வெவ்வேறு ஃபீல்டுல வேலை பாக்குறவங்க இருக்காங்க. ஆனாலும் எங்க எல்லோரையும் ஒண்ணா சேக்குறது வேளச்சேரி செக் போஸ்ட்டு ஏரியாவும் இந்த விளை யாட்டும்தான்’ என்றார் கேங்கின் காமெடியன் என்று சொல்லப்படும் ஜானகிராமன்.

போங்காட்டம்

‘ஒங்க கேங்லயே ரொம்ப போங்காட்டம் ஆடுறவர் யாரு?’ என்று கேட்டதற்கு ‘யாருக்கும் யாரும் சளைச்சவங்க இல்லை பாஸ். ஆனா ஓவர் போங்கு எங்க கேங் லீடர்தான்’ என்று சிவாவை நோக்கிக் கைகாட்டுகிறார்கள்.

‘என்ன மாதிரி போங்காட்டம் ஆடுவார்?’

‘அவரால அடிக்க முடியாத பால் எல்லாத்தையும் ஒய்டுன்னு சொல்லிடுவாரு. ரன் அவுட்ட ஒத்துக்க மாட்டார். 'நினைவிருக்கும் வரை' படத்தில பிரபுதேவா 98 ரன் எடுக்குறதுக்குள்ள நூறு தடவை அவுட்டாகியும் போங்காட்டம் ஆடுவாருல்ல அந்த மாதிரி. என்ன இவன் பத்து ரன்னத் தாண்டுனதில்ல’ என்றார் ஜானகிராமன்.

‘அப்புறம் எப்படித்தான் அவுட் ஆக்குவீங்க?’ என்று கேட்டால் ‘நாலு தடவைக்கு மேல போங்காட்டம் ஆடுனா பேட்டைப் பிடிங்கிடுவோம். இல்லன்னா நடு பிட்சுல உட்கார்ந்து ஸ்டிரைக் பண்ணுவோம். அப்புறம்தான் தல இறங்கி வருவாரு’ என்றார் கண்ணன்.

அப்படியாவது குளிக்கட்டுமே!

‘ரொம்ப காமெடியா ஒரு சம்பவம் சொல்லுங்களேன்’ என்று கேட்டால், ‘எதை பாஸ் சொல்லுறது? இதுவரைக்கு ஒரு கேட்ச கூடப் பிடிக்காத சுதாகரு ஒரே ஒரு தடவை கேட்ச் பிடிச்சப்போ, திருவான்மியூர் பீச்சில உயிரோட கரையொதுங்குன திமிங்கிலம் மாதிரி அதகளப்படுத்தினதச் சொல்றதா? இல்ல, ஸ்டம்புக்குப் பக்கத்திலேயே அலையில ஷாட்ட அடிச்சிட்டு நாலு ரன்னு ஓடுற வரைக்கும் பந்த அலைகிட்டருந்து பிடுங்குறதுக்கு நடக்குற மல்லுக்கட்ட பத்தி சொல்லுறதா?’ என்று அடுக்கிக்கொண்டே போனார் ஜானகிராமன்.

‘சரி, இப்படிக் கடல்ல ரெண்டு மூணு ஃபீல்டர்கள நிறுத்துறீங்களே, ஆபத்தில்லையா?’ என்று கேட்டதற்கு

‘அவங்கள்லாம் நீச்சல் வீரர்கள் பாஸ். அப்படிப்பட்டவங்களத்தான் நிறுத்துவோம். நாங்க என்ன நடுக்கடல்லயா ஃபீல்டிங் நிப்பாட்டுறோம். முழங்கால் அலையிலதானே. அப்புறம் ஒண்ணு பாஸ், அப்படியாச்சும் இந்தப் பசங்க குளிக்கட்டுமே’ என்று கலாய்த்த அருண்குமாரைப் போட்டுக் கும்முகிறார்கள் கடல் வீரர்கள்.

எனர்ஜி டானிக்

‘சரி, உங்க விளையாட்டப் பாக்குறப்போ நீங்கள்லாம் பயங்கரமா சண்டை போட்டுக்குற மாதிரி தெரியுதே. எப்படித்தான் சமாதானம் ஆவிங்க?’ என்ற கேள்விக்கு வீராசாமி இப்படிப் பதில் சொன்னார், ‘அதோ அந்த ரோடு தெரியுதுல்ல அதுவரைதான் பாஸ் சண்டையெல்லாமே. கரையைத் தாண்டிட்டா எல்லாமே மறந்துபோயிடும். சிரிச்சுப் பேசிக்கினு, கலாய்ச்சிக்கினு ஏரியாவுக்குப் போயிடுவோம். அப்படியும் சமாதானமாவலன்னா…’ என்று இழுத்தவரை அவசரமாக இடைமறித்து ‘டேய், பேப்பர்ல அதையெல்லாம் போட மாட்டாங்க’ என்றார் தினேஷ்.

‘ஒண்ணுதான் பாஸ், வாழ்க்கைய நாங்க ரொம்ப சந்தோஷமா வாழ்ந்துட்டுருக்கோம். வாரம் முழுக்க பொழப்புக்காக எவ்வளவோ ஓடுனாலும் ஞாயித்துக்கெழம இங்க வந்து விளையாடுற நேரம் இருக்கே, அதுதான் எங்க உடம்புக்கும் மனசுக்கும் நட்புக்கும் எனர்ஜி டானிக். வழக்கமா நம்மள மாதிரி இளைஞர்கள எல்லோருமே நெகட்டிவாதான் பாப்பாங்க.

ஆனா, நாங்கள்லாம் அப்படிக் கிடையாது. நீங்களே பாருங்க, எங்களுக்குள்ள தொழில்ரீதியாகவும் மத்த வகையிலேயும் எவ்வளவோ வேறுபாடுகள் இருந்தாலும் எவ்வளவு ஒத்துமையா இருக்கோம். அதுக்குக் காரணம் உண்மையான நட்பும் அந்த நட்புக்கு அப்பப்ப எனர்ஜி ஏத்திக்கிற மாதிரி, இப்படி வந்து விளையாடுறதும்தான். நட்ப லவ் பண்ணுங்க பாஸ், சந்தோஷமா இருக்கலாம்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடி கண்ணடித்தார் சிவா.

வேளச்சேரி செக் போஸ்ட் பாய்ஸ்! உண்மையில் சந்தோஷத்துக்கு செக் போஸ்ட்டே இல்லாத பாய்ஸ்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x