Published : 02 Jan 2021 03:24 am

Updated : 02 Jan 2021 08:29 am

 

Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 08:29 AM

தமிழ்ச் சூழலியல், பண்பாடு: புத்தொளி பாய்ச்சிய தொ.ப.

tho-paramasivan

2020 – பேரிழப்புகளின் ஆண்டு. கோவிட்-19 ஏற்படுத்திய நேரடி பாதிப்பு ஒருபுறம்; அந்த நோய் இயல்பு வாழ்க்கையை முடக்கிப்போட்டதால் நேரடி மருத்துவ கவனிப்பு குறைந்தது மற்றொருபுறம். கோவிட் தொற்றால் பலியானவர்களுடன், இந்த ஆண்டு மனிதக் குலம் இழந்திருக்கும் ஆளுமைகளின் பட்டியல் சிறிதல்ல. தொ.ப. என்று அறியப்பட்ட சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், தமிழகம் சமீபத்தில் இழந்த பேராளுமைகளில் ஒருவர்.

தமிழ்ப் பண்பாடு நெடிய தொடர்ச்சி கொண்டது, வளம் மிக்கது, அறிவியலின்பாற்பட்டது, பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும் அற உணர்வை அடிப்படையாகக்கொண்டு இயங்கிவருவது என்பது போன்ற அம்சங்கள் நம் அன்றாடத்திலும் எஞ்சி இருக்கின்றன என்பதைத் துலக்கப்படுத்தியவர் தொ.ப.


2001ஆம் ஆண்டு வாக்கில் செய்தித்தாள் ஒன்றின் சென்னைத் தலைமை அலுவலகத்தில் உதவியாசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில், சக நிறுவனத்தில் உதவியாசிரியராக இருந்த ஜனார்த்தன பெருமாள் ‘அறியப்படாத தமிழகம்’ நூலை அறிமுகப்படுத்திச் சிலாகித்துப் பேசியிருந்தார். அதன் முதல் பதிப்பு 1997இல் வெளியாகியிருந்தது.

உடனடியாக அந்த நூலை வாங்கி வாசிக்க வாய்ப்பு அமையவில்லை. அந்த நூல் விரிவாக்கப்பட்டு ‘பண்பாட்டு அசைவுகள்’ என்கிற பெயரில் வெளியான பிறகே வாசித்தேன். தமிழ்ப் பண்பாடு குறித்து சிறுசிறு கீற்றுகளாகவும் துண்டுதுண்டான தகவல்களாகவும் அதுவரை அறியப்பட்டிருந்தவற்றுக்கு ஒரு முழு சித்திரத்தைத் தீட்டித் தந்திருந்தார் தொ.ப. நாம் வாழும் சமூகமும் பண்பாடும் எப்படிப்பட்ட மதிப்பீடுகளை, தொடர்ச்சியை, மேன்மையைக் கொண்டிருந்தன என்பதன் மீது அந்த நூல் புத்தொளி பாய்ச்சியது.

எழுத்து வீச்சு

மயிலை சீனி. வேங்கட சாமி போன்ற முந்தைய தலைமுறை ஆய்வாளர்கள் தமிழ்ப் பண்பாடு, சமூகம், மதம் சார்ந்த கூறுகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு எழுதியிருக்கி றார்கள். அதேநேரம் காலத்துக்கு ஏற்பவும் இந்தத் தலைமுறை யினரிடம் தாக்கம் செலுத்தும் வகையிலும் தொ.ப.வின் எழுத்து வீச்சுடன் அமைந்திருந்தது.

நா. வானமாமலை உள்ளிட்டோர் தொடங்கி வைத்திருந்த நாட்டார் வழக்காற்றியல் அடிப்படையிலான சமூகப் பண்பாட்டு ஆய்வுகளின் தொடர்ச்சியாக இருந்த தொ.ப.வின் எழுத்து, அந்த ஆய்வுகளின் சாரத்தைச் சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ளக்கூடிய தொனியில் எழுதப்பட்டிருந்தது. ‘அறியப்படாத தமிழகம்’ நூலில் இடம்பெற்றிருந்த சிறு கட்டுரைகள், சொல்ல வந்த விஷயத்தை பளிச்சென்று தொட்டுக்காட்டிவிட்டு முடிந்துவிட்டன. ஆர்வம் இருப்பவர்கள் நிச்சயமாக அந்தக் கட்டுரைகளுடன் திருப்தி அடைந்துவிட மாட்டார்கள். அதேநேரம் புதியவர்கள், புதிய வாசகர்கள் மத்தியிலும் பண்பாடு குறித்த ஆர்வத்தைச் சிறு அகல்விளக்குபோல் ஒளியேற்றி வைத்துவிடக்கூடியவை அந்தக் கட்டுரைகள்.

மக்களே அடிப்படை

மக்களும் பேச்சுத் தமிழும்தான் தமிழ் மொழிக்கு அடிப்படை. புலவர்களும் பண்டிதர்களும் மொழியையோ பண்பாட்டையோ உருவாக்குவதில்லை, வாழவைப்பதில்லை. மக்களே அனைத்துக்கும் அடிப்படை என்கிற கோட்பாட்டை வலியுறுத்துபவர் தொ.ப. அந்த வகையில் மக்களின் புழங்கு மொழியில் கவனிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக அவர் சுட்டிக்காட்டுவது, உள்நாட்டு, அயல்நாட்டுத் தன்மைகளைப் பிரித்துக்காட்டும் பாங்கு: நாட்டுத் தென்னை, நாட்டுச் சர்க்கரை, நாட்டுக் கருவேல், சீமைக் கருவேல், சீமைச் சர்க்கரை, சீமை மருத்துவம்.

எளிய, உழைக்கும் மக்களே மொழியையும் பண்பாட்டையும் உருவாக்குகிறார்கள், வளர்க்கி றார்கள். அறிஞர்கள் அவற்றைக் கண்டறிந்து எடுத்துரைக்கிறார்கள் என்கிற அடிப்படையிலேயே தொ.ப.வின் எழுத்தும் வாதங்களும் அமைந்திருக்கும். மரபறிவின் (Traditional Knowledge) முக்கியத்துவத்தையும் தொடர்ச்சியையும் எடுத்துரைத்து வந்திருக்கிறார். பொருள்சார் பண்பாடு (Material Culture) எனப்படும் பிரிவை அடிப்படையாகக்கொண்டு அவருடைய பல கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தன.

தமிழரும் நீரும்

வெப்பமண்டலப் பகுதியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையிலிருந்து தண்ணீர் பிரிக்க முடியாத தன்மை கொண்டது. தமிழுக்கும் தண்ணீருக்குமான பிணைப்பைப் பற்றி தொ.ப. இப்படி விவரித்துள்ளார்:

 உடலைக் குளிர்விக்கப் பயன்படும் நீர்நிலை குளம்

 உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ஊருணி

 ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ஏரி

 மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலை ஏந்தல்

 கண்ணாறுகளை உடையது கண்மாய்

இயற்கையின் பேராற்றலில் திராவிடர் நீரை முதன்மைப்படுத்தினார்கள். தமிழர் வீட்டுச் சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெற்றது. மொகஞ்சதாரோவில் கண்டறியப்பட்ட குளம், நீர்ச்சடங்கு செய்வதற்கு உரிய இடமாக இருந்திருக்கலாம்.

கோடைக் காலத்தில் நீர்ப் பந்தல் அமைப்பது வழிவழியாகத் தொடர்ந்துவரும் அறச்செயல். இதற்குச் சோழர் காலத்தில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழரும் உணவும்

உணவையும் சமைப்பதையும் ஏதோ பெண்களுக்கு உரியனவாகவும் முக்கியத்துவம் அற்ற ஒரு செயல்பாடாகவுமே ஒரு நம்பிக்கை தொடர்ந்துவருகிறது. அதை உடைத்துத் தமிழர்களின் உணவு, அது சார்ந்த தாவரத் தொடர்பு-அறிவு ஆகியவை பண்பாட்டு அறிவின் ஒரு பகுதியாகக் கவனப்படுத்தியவர் தொ.ப. ‘குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர உணவுப் பழக்கவழக்கங்களைக் கூர்ந்துநோக்க வேண்டும்’ என்று கூறும் அவர், தொட்டுக்காட்டிய சில அம்சங்கள்:

l சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல என்பது தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையாக நெடுங்காலம் தொடர்ந்துவந்தது.

l தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத் தமிழர்க்கு வழங்கும் இயற்கைத் திருவிழா பொங்கல். வாசலில் பீர்க்கு, பூசனி, செம்பருத்தி போன்ற பூக்களைச் சாண உருண்டைகளில் வைத்து மேற்கொள்ளப்படும் சிறுவீட்டுப் பொங்கல், மற்றொரு இயற்கைத் திருவிழா.

l காப்பி, தேநீர், சர்க்கரை போன்றவை வல்லரசு நாடுகளின் பொருளாதார ஆயுதங்கள். அதேபோல் எண்ணெய் வணிகமும் பொருளாதாரச் சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இவை எல்லாமே தமிழர் உணவு முறையில் முன்பு இல்லாதவை, தற்போது ஆதிக்கம் செலுத்திவருபவை.

l அவித்து, வேகவைத்து, எண்ணெய் சேர்க்கப்படாத தமிழக உணவுப் பொருள்கள் வேகமாக மறைந்துவருகின்றன. அரசியல் உண்மையை உணராமல், உணவில் உடல்நலத்தைக் கருதாமல் நாவின் சுவையையே இன்றைய மக்கள் சார்ந்திருப்பது வீழ்ச்சிக்குரிய வழி என்று தொ.ப. எச்சரிக்கிறார்.

சூழலியல் புரிதல்

இப்படியாக அடிப்படைவாதம் - பெரும்பான்மை வாதத்துக்கு எதிரான ஜனநாயக அம்சங்களுடன் தமிழ்ப் பண்பாடு விளங்கிவருவதை பல்வேறு பண்டைய, நடப்பு ஆதாரங்களுடன் தொ.ப. புரியவைத்துக்கொண்டே இருந்தார். இடதுசாரி பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள் அவருடைய எழுத்தை உள்வாங்கி எடுத்துச் சென்ற அளவுக்கு, திராவிடக் கொள்கை சார்ந்தவர்கள் அவருடைய எழுத்தைப் பரவலாக உள்வாங்கிக்கொண்டிருக்கவில்லை.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த கவனம் இன்றைக்கு அதிகரித்துவருகிறது. ஆனால், சுற்றுச்சூழல் கரிசனத்தின் வெளிப்பாடோ, மேற்குலகில் பிறந்த குழந்தைக்கு ‘30 நாள்களில் தமிழ்’ கற்றுத் தந்தது போன்ற தோற்றத்தையே பொதுவாகக் காண முடிகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த பார்வை இந்த மண்ணில் வேர்கொண்டதாக இருக்கும்போதே பரவலான கவனத்தை ஈர்க்கும். பெரியார் வழி நடப்பதாகக் கூறிக்கொள்ளும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பலர் பெரியாரையும், அவர் வழி சூழலியல் - பண்பாட்டுக் கூறுகளை விளக்கிய தொ.பரமசிவனின் எழுத்தையும் படித்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழுக்குக் கிடைத்த பேறு

மற்றொரு புறம், தன்னுடைய ஆய்வுகளை மார்க்சிய அடிப்படையில் தொ.ப. மேற்கொண்டதும், தமிழ்ச் சமூகத்தில் தொடர்ச்சியாக வெளிப்பட்டுவரும் திராவிடக் கொள்கையின் கூறுகளை எடுத்துக்காட்டி வலியுறுத்தியதும் அவர் மீது அவதூறு பரப்புவதற்கு அடிப்படைக் காரணமாகின. திராவிடக் கொள்கை, மார்க்சியக் கோட்பாடுகளை எதிரியாக மட்டுமே பாவிப்பவர்கள், தொ.ப.வை சிறுமைப்படுத்தும் வேலையை அவர் உயிரோடு இருந்த காலத்திலும் மறைந்த பிறகு அஞ்சலிக் குறிப்பிலும்கூட மறக்காமல் சேர்த்துக்கொண்டே வருவது, நம் காலத்தில் நிலவிவரும் மட்டுமீறிய சிறுமைத்தனத்தின் அடையாளம்.

தன்னுடைய முனைவர் பட்டத்துக்கான ஆய்வை ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ குறித்து மேற்கொள்ள வேண்டும் என தொ.ப. முதலில் நினைத்திருந்திருக்கிறார். அவருடைய ஆய்வு நெறியாளர் மு.சண்முகம், கோயில் சார்ந்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அந்த வகையிலேயே தொ.ப.வின் முதல் புத்தகமான ‘அழகர் கோயில்’ குறித்த சமூகப் பண்பாட்டு ஆய்வு வெளியானது. புதிய பார்வையை முன்வைத்து, முன்னோடி ஆய்வாகவும் மாறியது. தொ.ப.வின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய திருப்புமுனை. ஒருவேளை அவர் புதுமைப்பித்தனை ஆய்வுசெய்ய நேர்ந்திருந்தால், தொ.ப.வின் பண்பாடு, சமூகம் குறித்த படைப்புகள் நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கக்கூடும். நல்வாய்ப்பாக சமூக ஆய்வை நோக்கித் தொ.ப.வை காலம் திருப்பிவிட்டது, தமிழகத்துக்குக் கிடைத்த பேறு.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in


தமிழ்ச் சூழலியல்பண்பாடுதொ.ப.தொ.பரமசிவன்Tho paramasivan

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x