Last Updated : 02 Jan, 2021 03:24 AM

 

Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னும் கரோனா வருமா? - மருத்துவர் ஃபரூக் அப்துல்லா பேட்டி

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் குறைவாகத்தானே உள்ளன என்று நிம்மதிப் பெருமூச்சுவிட முடியவில்லை. கேரளம், டெல்லியில் இரண்டாம் - மூன்றாம் அலைப் பரவல் அல்லாட வைக்கிறது. தமிழகத்தில் அந்த அலை எழுந்துவிடுமோ என்ற கேள்வி ஆபத்தாகத் துரத்திக்கொண்டிருக்கிறது. கரோனா தடுப்பூசி குறித்து நாடுகளுக்கிடையே போட்டி அதிகரித்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்குச் சிவகங்கை அரசுப் பொதுநல மருத்துவர் ஏ.பி..ஃபரூக் அப்துல்லா பதில் அளிக்கிறார்:

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னும் கரோனா வருமா?

கரோனாவுக்கு எதிராகக் கண்டறியப்பட்டுள்ள பெரும்பான்மைத் தடுப்பூசிகளில் முதல் ஊசிக்குப் பின் சில வார இடைவெளிவிட்டு மற்றொரு ஊசி போட்டுக்கொண்ட பிறகே முழுமையான தடுப்பாற்றல் கிடைக்கும். எனவே, முழுத் தவணை தடுப்பூசிகளும் போடப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகே தடுப்பாற்றல் கிடைக்கும். அதன்பிறகு கரோனா தொற்று ஏற்பட்டாலும்கூட, அது நோய் நிலையாக மாறாது. உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று தடுப்பூசி நிறுவனங்களும் ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன.

மூன்று முதல் நான்கு வார இடைவெளி விட்டு இரண்டு தவணைகளாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போடப்படு வதற்கு ஓராண்டுக் காலம்கூட ஆகலாம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பும் முகக்கவசம், கை கழுவுவது, சமூக இடைவெளி போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமா?

ஆமாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு நோய்த் தடுப்பாற்றல் கிடைத்து விடும். அதேநேரம், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர்தான் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற விஷயங்களில் தளர்வு வருவது சாத்தியம்.

தடுப்பூசிகள் ஒவ்வொரு நோய்க்கும் வெவ்வேறு விதமான பாதுகாப்பை அளிக்கும். கரோனா தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை குறித்து ஆய்வுகள் சொல்வது என்ன?

நோய் உண்டாக்கும் வலிமையுள்ள கிருமியை முழுமையாகவோ அல்லது அதன் சில பாகங்களையோ வலிமை குன்றச்செய்து, நோய் உண்டாக்கும் தன்மையை நீக்கிவிட்டு ஒருவரின் உடலில் செலுத்தப்படுகிறது. அப்போது அவரது உடலில் குறிப்பிட்ட கிருமிக்கும் அது உண்டாக்கும் நோய்க்கும் எதிராகத் தடுப்பாற்றல் உருவாகும் என்பதே தடுப்பூசி அறிவியல்.

தற்போது இறுதிக்கட்ட ஆய்வுகளை முடித்த ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி, மாடர்னா தடுப்பூசி , ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி போன்றவை 90 முதல் 95 சதவீதத் திறனுடன் கரோனா தொற்றைத் தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட மேம்பட்டவை. மேம்பட்ட திறனுடன் தடுப்பூசிகள் செயல்படுவது சிறப்பு.

எந்தத் தடுப்பூசி 100% பாதுகாப்பான தாக இருக்கும்? உடல்நலப் பாதிப்பு ஏற்படுமா?

தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகளை அந்தந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதை ஒவ்வொரு நாட்டின் மருத்துவ – சுகாதாரத் துறைகளும் ஆராய்ந்து, அவற்றின் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப்பார்த்த பிறகே மக்களுக்கு இடப்படும் பணி தொடங்கப்படும்.

பாதுகாப்பைப் பொறுத்த வரைத் தடுப்பூசி போட்டபின் நேர்ந்திடும் ஒவ்வாமை நிகழ்வுகளை AEFI - Adverse Events Following Immunisation என்கிறோம். இதில் சாதாரண நிகழ்வுகள், தீவிர நிகழ்வுகள் என்று உண்டு.

கரோனா தடுப்பூசிகளைப் பொறுத்தமட்டில் தடுப்பூசி போடப்பட்ட பின் சிலருக்குச் சாதாரண ஒவ்வாமையான காய்ச்சல், குளிர் நடுக்கம், உடல் வலி , தலைவலி போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறும் ஆராய்ச்சிகளில் தடுப்பூசி போடப்பட்டு இதுவரை யாரும் மரணமடைந்ததாகச் செய்திகள் இல்லை. கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் முறையான தரக்கட்டுப்பாடுடன் பாதுகாப்பானதாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே மத்திய சுகாதார அமைச்சகம் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்.

ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் தடுப்பூசி போட்டுக்கொண்டபிறகும், அவருக்குத் தொற்று வந்தது எப்படி?

ஹரியானா அமைச்சர் முதல் தவணை தடுப்பூசியை மட்டுமே பெற்றிருந்தார். முதல் ஊசி போடப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது ஊசி போடப்பட வேண்டும். அதற்குள் அவருக்குத் தொற்று ஏற்பட்டது. இரண்டாவது தவணை ஊசி போடப்பட்ட பின்னரே, தொற்றுக்கு எதிரான தடுப்பாற்றல் கிடைக்கும். அத்துடன், ஒரு தடுப்பூசி 85% திறனுடன் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தால், நூற்றில் 85 பேரை நோயிடமிருந்து காக்கும். எனவே, 15 பேருக்குத் தொற்று ஏற்படலாம். ஆனால், இவற்றின் காரணமாகத் தடுப்பூசியின் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது.

தற்போது எந்தத் தடுப்பூசி அதிக நாடுகளில் போடப்பட்டுவருகிறது?

ஃபைசர் பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு முன்அனுமதி வழங்கப்பட்டு அமெரிக்கா, பிரிட்டன், பஹ்ரைன், கனடா, சவுதி அரேபியா, மெக்சிகோ, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் போடப்பட்டுவருகிறது.

சாதகங்கள்:

l சிறப்பான முறையில் நோய்த் தடுப்பாற்றலைத் தூண்ட வல்லது.

l மற்ற தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது எளிதான முறையில் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துவிட முடியும்.

பாதகங்கள்:

l மைனஸ் எழுபது டிகிரி உறைகுளிரில் இந்தத் தடுப்பூசியைப் பராமரிக்க வேண்டும்.

l ஆர்.என்.ஏ. தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசி. இது புதிய தொழில்நுட்பம் என்பதால், இதன் சாதக பாதக அம்சங்கள் பற்றி முழுமையாக நமக்குத் தெரியாது.

l மீண்டும் மீண்டும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய தேவை இருக்கலாம்.

l பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து உருவாக்கி வரும் கோவேக்சின் தற்போது மூன்றாம் கட்ட மருத்துவ ஆராய்ச்சியை நிறைவுசெய்யும் தறுவாயில் உள்ளது.

கேரளம், டெல்லியில் இரண்டாம் - மூன்றாம் அலை பரவிய நிலையில் தமிழகத்திலும் அதற்கான சாத்தியம் உள்ளதா?

தற்போதுவரை தமிழ்நாட்டில் இரண்டாம் அலை குறித்த அறிகுறிகள் தென்படாமல் உள்ளன. இருந்தாலும் ஜனவரி மாதம் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இரண்டாவது அலை எப்படி இருக்கக் கூடும்? தடுக்க என்ன செய்யலாம்?

இரண்டாவது அலை தோன்றுமா தோன்றாதா என்பது குறித்து யோசிக்கும் வேளையில், இரண்டாவது அலை உருவாவதற்குக் காரணமே நாம்தான் என்கிற எண்ணம் இருந்தால் அதைத் தடுத்துவிட முடியும். தற்போது 80% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தனிமனித இடைவெளியை மறந்துவிட்டோம். எனவே, இரண்டாம் அலை வந்தாலும் அதன் வீரியம் என்பது அந்தந்த மாநில மக்கள் எவ்வளவு சிறப்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

ஒரு முறை கரோனா தொற்று ஏற்பட்டவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா?

வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அத்தகைய வாய்ப்பு குறைவாக இருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம். முதல் தொற்றின் மூலம் உடலில் போதுமான அளவு நோய்த் தடுப்பாற்றல் உருவாகாமலிருந்தால், இரண்டாவது முறை தொற்று ஏற்படுவதற்குச் சாத்தியம் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x