

ஆங்கிலத்தில் ‘Freedom at Midnight’ என்ற பெயரில், பிரெஞ்சு எழுத்தாளர் டொமினிக் லேப்பியர் மற்றும் அமெரிக்க எழுத்தாளர் லேரி காலின்ஸ் ஆகிய இருவரின் படைப்பாக 1975-ல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
இந்திய விடுதலையின் முன்னும் பின்னும் நெருக்கத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவந்த இந்த வரலாற்று நூல் உலகம் முழுவதும் அதிகமாய் விற்பனையான நூல்களில் ஒன்றாக இருக்கிறது.
தமிழில் 2001-ல் இதன் முதல் பதிப்பு வெளியாகி, 2009-க்குள் 5 பதிப்புகள் வெளிவந்து, தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் அதிகமாய் விற்கப்படும் நூல்களின் வரிசையில் இந்த நூல் இடம் பிடித்துள்ளது.
இந்த நூலின் கதாநாயகரான காந்தி தனது பணியை முடித்த பின்னர் கொல்லப்பட்டார். இன்னொரு முக்கியமான தலைவரான மவுண்ட்பேட்டனும் பிற்காலத்தில் கொல்லப்பட்டார்.
இந்த நூலைப் படித்த பிறகு, இந்திய வரலாறு குறித்த நமது கருத்துக்களை நாம் மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது. இங்கிலாந்தின் ஒரு தனியார் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனி 1600- ல் உருவாகி சில ஆண்டுகளில் இந்தியாவுக்குள் நுழைந்தது. அது நாடு பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதை ஆரம்பத்தில் இங்கிலாந்து அரசு ஆதரிக்கவில்லை.
இந்தியாவைத் துண்டாடக் கூடாது, அப்படி நடந்தால் அது இந்து - முஸ்லிம் கலவரத்தை உண்டாக்கும் என்று கருதியதால், வைஸ்ராய் மவுண்ட் பேட்டனும் பிரிவினையைத் தடுக்க முயற்சித்தார்.
புதிய இந்தியா குறித்த நேருவின் கனவோடு காந்தி எங்கே, எவ்விதம் முரண்பட்டார்? ஜின்னாவுக்குக் காசநோய் என்பது முன்பே தெரிந்திருந்தால், பிரிவினையைத் தவிர்த்திருக்கலாம் என்று மவுண்ட்பேட்டன் கூறியது சரியா? பிரிவினையைக் கடைசி வரை ஏற்றுக்கொள்ளாத காந்தி நாடு விடுதலை அடைவதற்கு முன்பேயும் பின்னர் அமைந்த புதிய அரசிடமிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டது ஏன்? 565 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய இளவரசர்கள் சபையின் பங்கு என்ன? காஷ்மீரில் நடந்தது என்ன? வகுப்புக் கலவரங்கள் எப்படி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன? அதில் காந்திக்கும் மவுண்ட்பேட்டனுக்கும் என்ன பங்கு?
இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இந்த நூல் விடை தருகிறது.
விடுதலைக்கு முன்னர் வங்காளத்தின் நவகாளியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பயங்கரமான கலவரம் நடந்தபோது, தனி மனிதனாய் காந்தி அந்தக் கலவரத்தை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவந்தார்? எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திரத்துக்குப் பின்னர் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்டுக்கடங்காத மதக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று காந்தி பட்டினிப் போராட்டத்தில் இறங்கியபோது இந்திய நாடே எவ்வாறு ஸ்தம்பித்தது?
ஒரு தனிமனிதனின் உயிரைப் பாதுகாக்கக் கலவரத்தில் ஈடுபட்ட இந்து, இஸ்லாம் மதத்தினரும் - ஏன் குண்டர்களும் காந்தியிடம் எவ்வாறு மண்டியிட்டு வேண்டுகோள் விடுத்தனர் என்பதையெல்லாம் படிக்கும்போது நமக்கு மெய் சிலிர்த்துவிடுகிறது; கண்கள் குளமாகிவிடுகின்றன. பிரிவினையை ஒட்டி பஞ்சாபிலும் பாகிஸ்தானிலும் நடந்த வகுப்புக் கலவரங்களை இந்த நூல் விரிக்கும்போது நாம் அதிர்ந்துவிடுகிறோம். அத்தகைய நிகழ்வுகளை இந்த நூல் தெளிவாகச் சித்தரிக்கிறது.
பெரிய அளவில் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற அதே நேரத்தில், அதிகமான விமர்சனங்களையும் இந்த நூல் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜின்னாவின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதால், பாகிஸ்தானில் இந்த நூல் தடை செய்யப்பட்டுள்ளது. நேரு, காந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் அந்தரங்கத்தை இந்த நூல் அலசினாலும், இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை. இந்த நூல் தயாராக உதவிய மவுண்ட்பேட்டனை இந்த நூல் வலிந்து தூக்கிப் பிடிப்பதாகவும் விமர்சனம் உள்ளது.
இப்படி சில விமர்சனங்கள் இருந்தாலும் 684 பக்கங்களில் இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டம் இந்த நூலின் பக்கங்களினூடே நம்முன் விரிகிறது. இந்தப் புத்தகத்தின் தாக்கத்தைப் படித்து உணருங்கள்!
- கட்டுரையாசிரியரைத் தொடர்புகொள்ள: veeveekalai@gmail.com
நள்ளிரவில் சுதந்திரம் - டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ்
தமிழில்: வி.என். ராகவன், மயிலை பாலு
அலைகள் வெளியீட்டகம்,
25, தெற்கு சிவன் கோவில் தெரு,
கோடம்பாக்கம்-600 024
தொலைபேசி - 24815474.