Published : 27 Dec 2020 08:50 AM
Last Updated : 27 Dec 2020 08:50 AM

2020இன் முத்திரை மகளிர்

தொகுப்பு: ப்ரதிமா 

புலர்கின்ற பொழுதெல்லாம் பெண்களுக்கு விடியலைத் தந்து விடுவதில்லை. இருந்தபோதும் நீரைத் தேடி நீளும் வேராகப் பெண்கள், தங்களைப் பிணைக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடர்ந்து போராடியபடி இருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் சில வெற்றிக் கனியைத் தரத் தவறுவதில்லை. அப்படி வெற்றுபெறுகிற பெண்கள், போராட்டத்தின் வலிமையைப் பறைசாற்றுவதுடன் சோர்ந்து கிடக்கும் மனங்களில் நம்பிக்கை தீபத்தை ஏற்றிவைக்கிறார்கள். அந்த வகையில் 2020இல் மாற்றத்துக்கு வித்திட்டு மக்கள் மனங்களில் இடம்பிடித்த புதுமைப் பெண்களில் சிலர்:

தமிழகம்

இசையின் மொழி

கானா என்று சொன்னதுமே ஆண்களின் உற்சாகப் பாடல் நினைவுக்கு வருவதைத் தன் வரவால் மாற்றியிருக்கிறார் இசைவாணி. சென்னை ராயபுரத்தில் வளர்ந்த இசைவாணி, மெல்லிசைக் கச்சேரிகளில் பாடிய தன் தந்தையைப் பார்த்துச் சிறு வயதிலேயே மேடையேறினார். பெண் ஒருவர் கானா இசைப்பதா என்கிற கேள்வியைத் தன் இசைத்திறனால் ஆச்சரியப்படுத்தி வெற்றிபெற்றார். தற்போது ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்’ இசைக்குழுவுடன் இணைந்து செயல்பட்டுவரும் இசைவாணி, கானா என்கிற இசையின் மூலம் சமூக மாற்றத்துக்கான கருத்துகளை மக்கள் மனங்களில் பரப்ப முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். பெண்களைக் கேலி செய்து இசைக்கப்படுகிற கானா பாடல்களுக்கு நடுவே சாதிய வேறுபாட்டையும் பெண்ணியத்தையும் எடுத்துச் சொல்கின்றன இசைவாணியின் கானாப் பாடல்கள். 2020இல் ‘பிபிசி’ வெளியிட்ட உலகில் ஆளுமை செலுத்தும் 100 பெண்கள் பட்டியலில் இசைவாணியும் இடம்பிடித்திருக்கிறார்.

நம்பிக்கை நாயகி

தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராவது, பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு என்பது போன்ற வெற்றிக் கதைகளைவிடச் சிறந்தது சரஸ்வதி அடைந்திருக்கும் உயரம். விருதுநகர் மாவட்டம் வில்லிப்புத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம் ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் துப்புரவுப் பணியாளராக இருந்த சரஸ்வதி, தற்போது அந்த ஊராட்சியின் தலைவர். ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக 2016இல் துப்புரவுப் பணியாளர் வேலையை ராஜினாமா செய்தார். அப்போது தேர்தல் நடைபெறாததால் மீண்டும் பணியில் சேரமுடியாத நிலையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றினார். 2020 ஜனவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றிருப்பதன் மூலம் கட்சி, பண பலம் போன்றவற்றைவிட மக்களின் ஆதரவே வெற்றிக்கு முக்கியம் என்பதை சரஸ்வதி நிரூபித்திருக்கிறார்.

சர்வதேச அங்கீகாரம்

ஆண்கள் மட்டுமே நிறைந்திருக்கும் துறைகளில் ஒளிப்படத் துறையும் ஒன்று. குறிப்பாகக் காட்டுயிர் ஒளிப்படத் துறை. அதில் நிறைந்திருக்கும் சவால்களால் ஆண்களுக்கு மட்டுமே கைவரும் என்று நம்பப்பட்டது. ஆனால், அந்தத் துறையில் சர்வதேச விருதைப் பெற்றிருப்பதன்மூலம் மேற்சொன்ன கற்பிதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் 23 வயது ஐஸ்வர்யா ஸ்ரீதர். லண்டனில் உள்ள ‘நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம்’ சார்பில் வழங்கப்படும் காட்டுயிர் ஒளிப்பட விருதுக்குத் தேர்வான முதல் இந்தியப் பெண் இவர். மூத்தோர் பிரிவில் தேர்வான இள வயதுப் பெண்ணும் இவர்தான். 80 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் விருதுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ்வர்யா பெற்றிருக்கும் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. மின்மினிப் பூச்சிகளின் நடத்தை குறித்த இவரது ‘லைட்ஸ் ஆஃப் பேஷன்’ என்கிற ஒளிப்படம் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டது.

புதிய விடியல்

அற்புதங்கள் நிகழக் காத்திருக்காமல் தானே அற்புதத்தை நிகழ்த்தியிருக்கி றார் சௌமியா. அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் இவரது மருத்துவக் கனவு நனவாகியிருக்கிறது. இதன்மூலம் லம்பாடி இனத்திலிருந்து மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருக்கும் முதல் மாணவி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் சௌமியா. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்துக்கு உட்பட்ட பி.எல். தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். பெற்றோர் இருவரும் கேரளத்தில் கூலித் தொழிலாளர்கள். தம்பிகளுடன் பாட்டி வீட்டில் வசித்துவந்தவர், ஏழ்மையான சூழ்நிலையிலும் கல்வியின் துணையோடு கரைசேர்ந்திருக்கிறார்.

பாதை புதிது

சவால் நிறைந்தது என்கிறபோதும் புதிய பாதையையே விரும்பித் தேர்ந்தெடுத்தார் ரேஷ்மா நிலோஃபர் நாகா. அந்தத் துணிவுதான் இந்தியாவின் முதல் நதி மாலுமி என்கிற பெருமையை மிகச் சிறிய வயதிலேயே அவருக்குப் பெற்றுத் தந்தது. சென்னையைச் சேர்ந்த ரேஷ்மாவுக்குக் கப்பல் மாலுமியா வது கனவல்ல. ஆனால், தன் திறமையை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த களமாக அது இருக்கும் என்று முடிவுசெய்தார்; இலக்கை அடைந்தார். கொல்கத்தா துறைமுகத்தில் பணியாற்றிவரும் ரேஷ்மா, கடலிலிருந்து கப்பலை ஹூக்ளி ஆற்றின்வழியாகத் துறைமுகத்தில் சேர்க்கும் பணியைச் செய்துவருகிறார். சவாலான இந்த வேலைக்கு தன் நேர்த்தியான செயல்பாட்டால் விடைதந்திருக்கிறார் ரேஷ்மா. 2019ஆம் ஆண்டு ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது பெற்றார்.

எழுத்து அடையாளம்

சொற்களின் பொருளை மட்டுமல்லாமல் அவற்றின் உணர்வையும் சேர்த்தே மொழிபெயர்க்கும்போது அந்தப் படைப்பு முழுமை பெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கே.வி.ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்புகள் இதையே உணர்த்து கின்றன. மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக 2019ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் மேற்கொள்ளும் இவர், தன் தாயிடமிருந்து மலையாளத்தைப் பயின்றவர். ஜெய மொழிபெயர்த்திருக்கும் 12ஆம் புத்தகம் இது.

இந்தியா

எண்பதிலும் எழுச்சி

உரிமை மறுக்கப்படும்போதெல்லாம் உரத்து ஒலிக்கிறவை பெண்களின் குரல்களாகவே இருக்கின்றன என்பதற்கு, டெல்லி ஷாஹின் பாக்கில் நடைபெற்ற போராட்டமும் அதில் முன்னணியில் நின்ற பில்கிஸ் பானுவும் நற்சான்றுகள். 2020-ல் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் எழுந்த போராட்டங்களுக்கு இதுவே தொடக்கப்புள்ளியாக அமைந்தது. இஸ்லாமியரின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக 82 வயதிலும் போராட்டத்தில் பங்கேற்றார் பில்கிஸ் பானு. ஓய்வெடுக்க வேண்டிய வயதில் உரிமைக்குரல் எழுப்பி அவர் போராடியதுடன், தான் உயிருடன் இருக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் முழங்கினார். அந்த உறுதிதான் ‘ஷாகின் பாகின் தாதி’ என்று அவரை அழைக்கச் செய்தது. ‘டைம்ஸ்’ இதழ், 2020இன் 100 செல்வாக்கான மனிதர்களில் ஒருவராக பில்கிஸ் பானுவைத் தேர்ந்தெடுத்தது.

தாய்மையும் வெல்லும்

ஊரடங்கின்போது வெளியூரில் மாட்டிக்கொண்ட மகனை மீட்பதற்காக இருசக்கர வாகனத்தில் 1,400 கி.மீ. தொலைவு சென்றுவந்த தெலங்கானாவைச் சேர்ந்த 50 வயது ஆசிரியை ரஸியா பேகம் பெண்களின் மன உறுதிக்குச் சான்று என்றால் பெண்களின் கடமை உணர்வுக்குச் சான்றாக விளங்குகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீஜனா கும்மல்லா. விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா, தனது ஆறு மாதப் பேறுகால விடுப்பை ரத்துசெய்துவிட்டு மூன்று வாரக் குழந்தையுடன் பணிக்குத் திரும்பினார். அதேபோல் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சௌமியா பாண்டே, காசியாபாத் மாவட்டத்தின் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இரு வாரங்களே ஆன தன் பச்சிளங்குழந்தையுடன் அவர் பணிக்குத் திரும்பி, கடமையாற்றுவதில் பெண்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வை நிரூபித்திருக்கிறார்.

உலகம்

பெரும் திருப்புமுனை

அமெரிக்காவின் 200 ஆண்டு கால வரலாற்றைத் தன் மகத்தான வெற்றியின்மூலம் மாற்றியிருக்கிறார் கமலா ஹாரிஸ். அமெரிக்காவின் துணை அதிபர் தேர்தலில் வென்றதன்மூலம் இந்தப் பதவிக்குத் தேர்வாகும் முதல் பெண், முதல் கறுப்பினப் பெண், முதல் ஆசிய அமெரிக்கர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார் கமலா ஹாரிஸ். “சமத்துவம், சுதந்திரம், சமநீதி ஆகியவற்றில் நம்பிக்கை வைத்தவர்களுக்குக் கிடைத்த வெற்றி இது” என்று சொல்லியிருக்கும் கமலா ஹாரிஸ், ஒடுக்கப்பட்ட பெண்கள் அனைவராலும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை அளித்திருக்கிறார்.

வானை அளப்போம்

கனவு காண்பது மட்டுமல்ல, அதை அடை வதற்கான செயல்பாடுகளே லட்சியத்தை அடைய உதவும். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சும் இதைத்தான் செய்திருக்கிறார். விண்வெளியில் அதிக நாள்கள் தங்கியிருந்த முதல் பெண் என்கிற சாதனையை இவர் படைத்திருக்கிறார். 328 நாள்கள் விண்வெளியில் தங்கி ஆய்வுப் பணியை மேற்கொண்ட இவர், ஆறு முறை (42 மணி, 15 நிமிடங்கள்) விண்வெளியில் நடந்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x