Last Updated : 25 Dec, 2020 10:47 AM

 

Published : 25 Dec 2020 10:47 AM
Last Updated : 25 Dec 2020 10:47 AM

விடைபெறும் 2020: விநோதங்களின் ஆண்டு!

2020-ம் ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு விநோதமான ஆண்டாகவே பதிவாகும். கரோனாப் பெருந்தோற்று உலக மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்த அதே வேளையில், திரையுலகத்தின் வரலாற்றையும் திருத்தி எழுதியுள்ளது.

வழக்கத்தை குலைத்துப்போட்ட இந்த ஆண்டில் திரையரங்குகளில் வெளியான படங்கள், ஓ.டி.டி. தளங்களில் வெளியான படங்கள் என 2020-ம் ஆண்டை இரண்டாகப் பிரிக்கலாம். அதன்வழியாக வந்த படங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அலசலாம்.

ஆண்டுக்கு சுமார் 200 தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு சுமார் 8 மாதங்களாகத் திரையரங்குகள் மூடியே கிடந்தன. அதனால் இந்த ஆண்டில் திரையரங்குகளில் எழுபத்தி சொச்சம் படங்களே வெளியாகின.

மேஜிக் நிகழ்த்தாத ரஜினி, தனுஷ்

திரையரங்குகளில் வெளியான படங்களில் பொங்கல் பண்டிகையில் ‘தர்பார்’,‘பட்டாஸ்’ படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ போதிய வரவேற்பைப் பெறாமல் வசூல்ரீதியில் தோல்வியைச் சந்தித்தது. ரஜினி என்ற உச்ச நடிகர் இருந்தும், திரைக்கதையின் சரிவு படத்துக்குப் பாதகமாக அமைந்தது.

பரிசோதனை முயற்சிப் படங்கள், வணிக ரீதியான படங்கள் என இரண்டையும் கலந்துகட்டி கொடுப்பதையே தனுஷ் தன் பாணியாக வைத்துள்ளார். துரை.செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்த இரண்டாவது படம் ‘பட்டாஸ்’. ஆனால், இரட்டை வேடங்களில் தனுஷ் இன்னும் நிறைவான படத்தைக் கொடுக்கவில்லை. அடிமுறைக் கலை என்ற தமிழர்களின் தற்காப்புக் கலை என்கிற அம்சம் மட்டும் ரசிகர்களை ஈர்த்தது. இப்படம் போட்ட முதலீட்டை மட்டுமே எடுத்தது.

வரவேற்பு பெற்ற, பெறாத படங்கள்

‘டகால்டி', ‘நாடோடிகள் 2’, ‘சீறு, ‘வானம் கொட்டட்டும்', ‘மாஃபியா அத்தியாயம்-1’ ஆகிய படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. திரையரங்குகள் திறப்புக்குப் பின்பும் இப்படம் மறு ரிலீஸ் செய்யப்பட்டது. ஓ.டி.டி. தளத்திலும் வெளியானது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட ‘திரெளபதி', ‘ஓ மை கடவுளே', ‘தாராள பிரபு’ ஆகிய படங்கள் ஓரளவுக்கு லாபம் பெற்றன. ‘சைக்கோ', ‘நான் சிரித்தால்’ஆகிய படங்கள் போட்ட முதலீட்டை எடுத்தன.

‘தாராள பிரபு’, ‘வால்டர்’ படங்கள் ரிலீஸான மார்ச் 13-ம் தேதியுடன் திரையரங்குகள் கரோனா பீதியில் மூடுவிழா கண்டன. இந்நிலையில் பெரும்பாலான படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி ரசிகர்களின் திரைப்படப் பசிக்கு தீனி போட்டன.

ஓ.டி.டி. - மாற்றுத் திரை அனுபவம்

'ஓவர் தி டாப்' எனப்படும் ஓ.டி.டி. தளங்கள் கரோனா ஊரடங்கில் பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்குரிய தளங்களாக மாறின. நெட்ஃபிளிக்ஸ், அமேசான், ஜீ5, டிஸ்னி ஹாட் ஸ்டார், சினி பிளக்ஸ், மூவி இன் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்களில் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘லாக்கப்’,‘க/பெ. ரணசிங்கம்’ (ஜீ ப்ளக்ஸ் டி.டி.எச்.சில் வெளியாகி பின் ஜீ5 ஓ.டி.டி.யில் வெளியானது), ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘நுங்கம்பாக்கம்', 'பச்சை விளக்கு’ ‘சைலன்ஸ்’, ‘வர்மா’, ‘அந்தகாரம்’ உள்ளிட்ட சுமார் 25 படங்கள் வெளியாயின.

ஓ.டி.டி. தளங்களின் மூலம் மாற்றுத் திரை அனுபவம் திரையரங்குக்கான மனநிலையைக் கொடுக்கவில்லை. ஆனாலும், ஓ.டி.டி. தளங்களைப் புறக்கணிக்க முடியவில்லை. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதும் அதற்கான முக்கியமான காரணம்.

ஊரடங்கு முடிந்து, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டபோது சந்தானத்தின் ‘பிஸ்கோத்’, ‘தட்றோம் தூக்குறோம்’, ‘மரிஜூவானா’, ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட 4 படங்கள் திரையரங்கில் வெளியாகின. அவை ரசிகர்களிடம்

எந்த வரவேற்பையும் பெறவில்லை. அதே வேளையில் ஓ.டி.டி. தளங்களில் வெளியான ‘சூரரைப் போற்று’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்கள் பண்டிகை காலக் கொண்டாட்ட அனுபவத்தைக் கொடுத்தன.

சமரசம் செய்யாத சூர்யா

தயாரிப்பாளர்கள், சில இயக்குநர்களே ஓ.டி.டி.க்கு எதிராகக் கருத்து தெரிவித்த நிலையில், அதைத் தாண்டி ஓ.டி.டி.யில் ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிட்ட சூர்யாவின் துணிச்சல் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைத்தது. சிரிக்காத, சண்டைக்காட்சிகளில் துவம்சம் செய்யாத, தன் ரசிகர்களுக்காக எந்த சமரசத்தையும் செய்யாத சூர்யாவின் நடிப்பும் சிலாகிக்கப்பட்டது.

நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் பரவலான பாராட்டைப் பெற்றது. கடவுளின் பெயரில் கார்ப்பரேட் சாமியார் செய்யும் மோசடிகளையும் ஆசிரம அரசியலையும் துணிச்சலுடன் பகடிசெய்தது.

பெண் மையப் படங்கள்

பெண்களின் உலகில் எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காட்சிப்படுத்தும் வரம் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு நாயகிகளை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்ட அதிகத் திரைப்படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிறு பட்ஜெட் படங்கள், நாயகிகளை மையமாகக் கொண்ட படங்களுக்குத் திரையரங்குகளில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத சூழல் நிலவும்போது, ஓ.டி.டி. அதற்கான வாசல்களைத் திறந்துவைத்துள்ளது பாராட்டுக்குரியது.

‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’, ‘மிஸ் இந்தியா’ (தெலுங்கு) படங்கள் நாயகி மையப் படங்களாக வெளியாயின. இவ்விரு படங்களும் கீர்த்தியின் நடிப்புக்கான களத்தைச் சரியாக வழங்கவில்லை என்றாலும், அவர் தொடர்ந்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை நல்கியுள்ளன.

அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாத அழகான அம்மனாக, அளவான நடிப்பில் நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் ஈர்த்தார். சாகசங்கள் நிறைந்த கடவுளாக இல்லாமல், சிறுதெய்வத்தின் பிரதிநிதியாக தன்னை அவர் முன்னிறுத்திக்கொண்டது ரசிக்கும்படி இருந்தது.

ஜோதிகா ‘பொன்மகள் வந்தாள்’ படத்திலும், வரலட்சுமி சரத்குமார் ‘டேனி’ படத்திலும் தங்களின் திறமையைக் காட்டினர். ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கனா’ படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தில் அரியநாச்சி எனும் மனஉறுதி கொண்ட பெண்ணாக வாழ்ந்து காட்டினார். ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வணிக சினிமா, பெண் மைய சினிமா ஆகிய இரண்டு வகையிலும் மாறிமாறி நடிப்பது தமிழ் சினிமாவின் புதிய போக்குகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. குழந்தைகளை மையமாகக் கொண்ட படங்களுக்கு மட்டும் இன்னமும் போதாமை நிலவுகிறது.

திரையரங்குகளா? இணையத் திரையா?

பண்டிகை என்றாலே சினிமா பார்ப்பது என்கிற வழக்கம் நம் பண்பாட்டுக் கூறில் அடங்கியுள்ளது. ஆரவாரம், கொண்டாட்டம், நண்பர்கள், உறவினர்களுடன் கூடித் திரையரங்கில் ஒரு படத்தை ரசிப்பது, தனக்குப் பிடித்த நடிகரைக் கொண்டாடுவது ஆகியன வெகுஜன ரசிகர்களுக்கு அலாதி அனுபவம் தருபவை. இந்நிலையை ஓ.டி.டி. தளங்கள் மாற்றிவிட்டன. வீட்டில் பிடித்தபடி உட்கார்ந்துகொண்டே, சாய்ந்துகொண்டே, படுத்துக்கொண்டே படம் பார்க்கலாம், விரும்பிய காட்சியை முன் பின் நகர்த்திப் பார்க்கலாம் என்கிற வசதியைக் கொடுத்துவிட்டன. அதேவேளை இந்தத் தளங்கள் திரையரங்குகளுக்கு மூடுவிழா நடத்தப்போவதில்லை என்பதையும் வெளிப்படையாக உணர்த்தின. ரசிகர்களின் ரசனைக்கான, கொண்டாட்டத்துக்கான ஆகச்சிறந்த இடம் திரையரங்குகள் என்பதையும் நிறுவின.

2,000 கோடி நஷ்டம்

முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் தோல்வி, திரைப்படங்களுக்கான முதலீடு, வட்டி அதிகரிப்பு, வெளியிட முடியாத சூழலில் பெட்டிக்குள் முடங்கிய படங்கள், படப்பிடிப்பு முழுமையடையாத படங்கள், இறுதிக்கட்டப் பணிகளை முடிக்காமல் சுணங்கிய படங்கள், திரையரங்குகள் மூடல் போன்ற காரணங்கள் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் பதம் பார்த்தது.

சினிமாவை மட்டுமே தொழிலாகக் கொண்ட சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்தனர். தமிழ்ப் புத்தாண்டு, கோடை விடுமுறை, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை என எந்தத் திருநாளும் இல்லாத வீடடங்கு நாள்களாக கரோனா ஊரடங்கு அவர்களுக்குக் கழிந்தது.

தீபாவளியை முன்னிட்டு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன் நவம்பர் 10-ம் தேதி 997 திரையரங்குகள் தமிழகத்தில் திறக்கப்பட்டாலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. திரையரங்குகளுக்கு வரவே மக்கள் அச்சப்பட்டனர். பராமரிப்புச் செலவைக்கூட ஈடுகட்ட முடியாமல் திரையரங்குகள் திண்டாடின.

கரோனா காலத்தில் தமிழ்த் திரையுலகுக்கு ரூ.2,000 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக 'பெப்சி' தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். சினிமாவையே சுவாசமாகக் கொண்ட தமிழ்நாட்டில் 300 ‘சிங்கிள் ஸ்கிரீன்’ திரையரங்குகள் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் நிரந்தரமாக மூடப்பட்டது பெரும் துயரம்.

சாதி அரசியலும் ஆணவக் கொலையும்

தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் காதலும் சாதியும் என்று சொல்லலாம். சாதிப் பெருமை பேசும் படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த ஆண்டு ‘திரௌபதி’ படம் வெளியானது. கருத்தியல் ரீதியாக நிறைய சர்ச்சைகளைச் சந்தித்தது. ஆனாலும், படம் வசூலில் வெற்றி பெற்றது. சமூகநீதிக்கான மண் என்று போற்றப்படும் தமிழகத்தில் இதுபோன்ற படங்கள் அச்சுறுத்தலாக மாறிவிடுமோ என்ற கவலையை அதிகரிக்கச் செய்கிறது.

நடிகர் போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னி மாடம்’ திரைப்படம் நல்ல முயற்சி. அப்பட்டமான சாதித் திமிரை, சாதி வெறியை, ரணத்துடன், ஆணவக் கொலையின் கோரப் பின்னணியுடன் காட்சிப்படுத்திய விதம் கனமானது. முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குநருக்கான தடத்தை போஸ் வெங்கட் பதித்துவிட்டார்.

ஆந்தாலஜி படமாக ‘பாவக் கதைகள்’ வெளியானது. வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நால்வர் இயக்கிய இந்த நான்கு குறும்படங்களில் கௌதம் மேனனின் ‘வான்மகள்’ மட்டும் சிறுமி மீதான பாலியல் வன்முறை குறித்துப் பேசுகிறது. மற்ற மூன்று படங்களின் அடிநாதம் சுயசாதியின் பெருமையைக் கட்டிக் காக்க, சொந்த வாரிசுகளையே பலி வாங்கும் தகப்பன்கள் குறித்ததுதான்.

ஆனால், அந்த ஆணவக் கொலையைச் செய்யும் அவர்களின் பின்னணி எந்த குறுக்கு விசாரணையுடனும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் குற்றஉணர்வு

அடைந்தாலும், தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். மிக நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆணவக் கொலை செய்பவர்களின் தரப்பைக் கேள்விக்குள்ளாகமல், நியாயப்படுத்துவதாகவே படங்கள் அமைந்துள்ளன. கொலை செய்யப்பட்டவர்களின் மீதும், அவர்களுடைய இழப்பால் பாதிக்கப்படுவர்கள் மீதும் எந்த பிம்பத்தையும் கட்டமைக்கவில்லை. இது பெருங்குறை. பார்வையாளர்கள் இவற்றைத் தவறாக உள்வாங்கிக்கொண்டால் என்ன ஆகும் என்று நினைக்கும்போதுதான் வேதனை நீள்கிறது.

துரத்தும் தணிக்கை

ஆபாச வசனங்கள், பாலியல் காட்சிகள், அதீத வன்முறைக் காட்சிகள், குழந்தைகள், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் ஆகியவற்றை நீக்கவும், கட்டுப்படுத்தவும் தணிக்கை அவசியம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அரசியல்ரீதியான காரணங்களுக்காகவும், அதிகார அரசியலை விமர்சனத்துக்கு உட்படுத்தியற்காகவும் தணிக்கை மறுக்கப்படுவதில் நியாயமில்லை. அந்த வரிசையில் ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’ திரைப்படம் தணிக்கையால் குதறப்பட்டது.

ஓ.டி.டி. தளத்திலோ பாபு யோகேஸ்வரனின் ‘காட்மேன்’ தொடர் வெளியாகும் முன்பே அதிகார வர்க்கத்தால் தடுக்கப்பட்டது. “ஓ.டி.டி.க்குத் தணிக்கை கொண்டுவந்தால், ஜனநாயகத்தில் மிச்சமிருக்கும் கடைசிக் குரலையும் நசுக்கும் முயற்சியாகவே அது இருக்கும்” என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

புதியவர்களுக்கு வாய்ப்பில்லை!

ஓ.டி.டி. தளம் பிரபல இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளும் இன்னொரு தளமாகவே உள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கான, குறும்பட இயக்குநர்களுக்கான வெளிச்சக் கீற்றை இன்னும் ஓ.டி.டி. தளங்கள் உறுதி செய்யவில்லை. தமிழகத்தில் குறும்படங்கள் கடந்த கால் நூற்றாண்டு வரலாற்றையும் வளர்ச்சியையும் கொண்டுள்ளன. தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஏராளமான கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் சிறந்த படங்கள் தொகுக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு இன்னும் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகாதது இந்தத் தளங்கள் யாருக்கானவை என்ற கேள்வியைக் காத்திரமாக எழுப்புகின்றன. ஏற்கெனவே தங்களை நிரூபித்த, வெற்றிபெற்ற படைப்பாளிகளிடமே ஓ.டி.டி. தளங்கள் சரணாகதி அடைவது, ஓ.டி.டி.யும் சிந்தனை, படைப்பு வறட்சிக்கான ஒரு களமாக மாறிவிடக் காரணமாக அமையலாம்.

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x