Last Updated : 24 Dec, 2020 07:22 AM

 

Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம்

‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது. ‘கிறிஸ்மஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது.

உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழா கிறிஸ்துமஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா.

மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும் பேரானந்தமும் தெரிந்திருக்கும்.

மகிழ்ச்சியான இப்பெருவிழாவின் மீது பெருந்தொற்று உருவாக்கிய சோகத்தின் கருநிழல் இந்த ஆண்டு படிந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய கரோனா நோய்க்கிருமியின் கோரத்தாண்டவம், உலகெங்கும் பரவி ஓராண்டில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கிறது.

புன்னகையில் கண்ணீர்

இந்நாடுகளில் இந்த விழாக் காலத்தில் எல்லா இடங்களிலும் தவறாது ஒலிக்கும் கிறிஸ்துமஸ் பாடல்களோடு துயர கீதங்களும் சேர்ந்தே ஒலிக்கும். குடும்பத்தில் ஒருவரை அல்லது நெருங்கிய நண்பரைப் பறிகொடுத்தோரின் புன்னகையில் கண்ணீர் ஒளிந்திருக்கும்.

கிறிஸ்துமஸ் விழாவின்போது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பரிசு தரும் பழக்கம் இருக்கிறது. நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக ‘விலகியிருங்கள். ஆறடி தூரமாவது தள்ளி நில்லுங்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘கிறிஸ்துமஸ் பார்ட்டீஸ்’ என்றழைக்கப்படும் விழாக்கால விருந்துகளிலும் ஒருவரையொருவர் வாழ்த்தும்போதும் அணைத்துக் கொள்வதும், ஆரத்தழுவுவதும், முத்த மிடுவதும், கை குலுக்குவதும் அங்கே இயல்பாக நிகழ்பவை. ஆனால், நோய் அச்சத்தால் இந்த ஆண்டு இவற்றை கவனமாகத் தவிர்க்க வேண்டியிருக்கும்.

நம்பிக்கை மகிழ்ச்சி அவசியம்

இந்தச் சூழலில் இயல்பாக எழக்கூடிய கேள்வி என்ன? இத்தனைக்கும் மத்தியில் நாம் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்தான் வேண்டுமா?

இன்றைய சூழலில் மட்டுமல்ல புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதும், ‘இந்த வேளையில் விழா அவசியமா?, கொண்டாட்டம் தேவையா?' என்று கேட்கும் சிலர் எப்போதும் இருப்பார்கள்.

கார்ல் ரானர், ரானல்ட் ரால்ஹைசர் போன்ற அறிஞர்கள் இக்கேள்விக்குத் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள். சோதனைகள் சூழும் வேளையில் வேதனையில், விரக்தியில் வீழ்ந்து கிடப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. சோகம் நம்மை முடக்கிப் போடும். சூழ்ந்திருக்கும் சவால்களைச் சந்திக்க நாம் முனைந்து எழ வேண்டும். அப்படி எழுவதற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அவசியம்.

நம் மனத்துக்கு வேண்டிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதில் திருவிழாக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. நம்பிக்கையூட்டும் நல்ல நிகழ்வுகளை திருவிழாக்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. அந்த நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் அருஞ்செய்திகளை, அவை மீண்டும் முன்வைக்கின்றன.

கடவுள் கைவிடவில்லை

மானுடத்தைக் கடவுள் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதற்கான சான்றே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எனச் சொன்னார் மகாகவி தாகூர். அப்படியானால், பிறக்கும் இறைமகன் எதற்கான சான்று? அவரின் பிறப்பைக் கொண்டாடும் இவ்விழா சொல்லும் செய்தி என்ன? இறைவன் இவ்வுலகை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் தெரியுமா? உலகை மீட்க தன் மகனை மனிதனாக அனுப்பும் அளவுக்கு. எனவே, கவலையும் கண்ணீரும் நிறைந்த இந்தச் சூழலில் நாம் இந்த விழாவைக் கொண்டாடியாக வேண்டும். கொண்டாட்ட விருந்துக்கு வழியில்லையே, பரிசுகள் வாங்கப் பணம் இல்லையே என்றெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.

பொருள்களோ, பரிசுகளோ இல்லாவிட்டால் என்ன? மனங்களும் கரங்களும் இணைந்திருக்கும்வரை கிறிஸ்துமஸ் என்ற அந்த மானுடகுமாரனின் பிறந்த நாள் அளித்த ஒளி நிலைத்திருக்கும். கருணையும் மனிதநேயமும் செழிக்கும் இடங்களில், மனங்களில் எல்லாம் கிறிஸ்துமஸ் விண்மீன் கண்சிமிட்டும். தெய்வக் குழந்தையின் திருமுகம் மலரும், ஒளிரும். ‘நல்மனம் கொண்டோர் அனைவருக்கும் அமைதி' என்று வாழ்த்தும் வானவரின் பாடல் ஒலிக்கும்.

சூழ்ந்திருக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நாம் கொண்டாட வேண்டும். இதுதான் இன்றைய தேவை. எளியோருக்கு உதவி, எளிமையாய்க் கொண்டாட வேண்டும். தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடாமல் கொண்டாட வேண்டும்.

இந்தச் சூழலில் இறைவன் எப்படிப் பிறக்க வேண்டும் என்பதைச் சொல்லும் ஒரு பாடல் இருக்கிறது. அதன் காணொளியைக் காண விரும்புவோர் பல்லவியின் முதல் இரண்டு சொற்களான, ‘உயிராக, நலமாக’ என்ற சொற்களை யூ ட்யூபில் தட்டச்சு செய்து தேடலாம்.

‘உயிராக, நலமாக இறைவா நீ வா - இந்த உலகோரின் நிலை கண்டு உடனே நீ வா, நோயோடும் சாவோடும் போராடிடும் - உந்தன் சேயோருக்காய் மீண்டும் பிறந்திங்கு வா’ என்பதுதான் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாக்காலம் முழுவதும், உலகெங்கும் உள்ள மனிதர்களின் இதயத்திலிருந்து எழுந்துவரும் வேண்டுதலாக இருக்கும்.

துயரங்களிலிருந்தும் உற்பாதங்களிலிருந்தும் நம்மைக் காத்தருளும் தேவகுமாரனின் பிறந்த நாள் நம்மில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பெருக்கட்டும்.

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x