Last Updated : 09 Jun, 2014 12:02 PM

 

Published : 09 Jun 2014 12:02 PM
Last Updated : 09 Jun 2014 12:02 PM

பொது அறிவு : எதையும் சமாளிக்கும் நெய்தல் தாவரங்கள்

கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல். தமிழ் நிலப் பரப்பில் ஒவ்வொரு திணையும் வித்தியாசமாக இருப்பதைப் போன்று, நெய்தல் நிலமும் வித்தியாசமானது. குறிப்பாக அங்கு வளரும் தாவரங்கள்.

இதில் மணல்குன்றுகளில் இருக்கும் தாவரங்கள் மிக முக்கியமானவை. ஒரு மணல் குன்றின் உருவாக்கத்திலும் வடிவமைப்பிலும், அவை முக்கியப் பங்காற்றுகின்றன. பாலைவனத்தைப் போலவே மணல்குன்றுகளின் சூழ்நிலையும் இருப்பதால் அங்குத் தாவரங்கள், உயிரினங்கள் உயிர் வாழ்வது எளிதாக இருப்பதில்லை.

ஏனென்றால்,

- அதிக அளவு மணல் நகர்ந்துகொண்டே இருக்கும்

- கடலில் இருந்து உப்புக் காற்று வீசும்

- அதிக வெப்பநிலை நிலவும்

- அதிவேகக் காற்று வீசும்

- தாவரங்கள் வளரத் தேவையான நன்னீர் குறைந்த அளவே கிடைக்கும்

ஆனால், மணல்குன்றுகளில் வாழும் தாவரங்கள், மாறுபட்ட வகைகளில் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்ந்து காட்டுகின்றன.

முன்னோடிகள்

கடலுக்கு அருகே இருக்கும் தாவர வகைகளில் ஒன்றான படரும் புற்கள் தடிமனான இலை, தண்டுகளுடன் இருக்கும். மணல் குவிவதை எதிர்கொள்ளும் வகையில் அதிவேக வளர்ச்சியுடன், சதைப்பற்று மிகுந்த உடலில் நீரை அதிகமாகச் சேகரித்து வைத்துக்கொள்ளும். இதற்காக மணலுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்லும் வேரையும் இவை கொண்டிருக்கும். தொடர்ச்சியாக நகர்ந்துகொண்டே இருக்கும் மணலின் மேற்பரப்பிலும்கூட, படரும் தன்மை கொண்டிருப்பதால் இந்தத் தாவரங்கள் படர்ந்து மூடிக்கொள்கின்றன. இவற்றில் பிரபலமானவை ஆட்டுக்கால் (Ipomoea pes-caprae), ராவண மீசை (Spinifex).

புதர்கள்

அதேநேரம் புதர் தாவரங்கள் வளரும் பகுதிகளில் மிதமான அளவே மணல் நகரும். இந்தப் பகுதியில் உப்புக்காற்று குறைவாக வீசும் என்றாலும், வெப்பநிலை அதிகமாகவே இருக்கும். கருவேலம் (Prosopis), கள்ளி (Cacti) போன்றவை இங்கு அதிகமாக வளரும். கருவேலம் நமது மண்ணுக்குரிய தாவரம்.

மரங்கள்

மிகப் பெரிய மணல்குன்றுகளின் நிழலில், நல்ல மழை கிடைக்கும் பகுதிகளில் மரங்கள் வளரும். மண்ணின் தன்மை, ஈரப்பதம், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துகள், பாதுகாப்பு ஆகியவற்றைப் பொறுத்தே மரங்கள் வளர்கின்றன. இந்தப் பகுதியில் காடு உருவாக நீண்ட காலமாகும். முந்திரி, புளியமரம், பனை மரம் போன்றவை மணல்குன்றுகளின் மீது வளர வாய்ப்புள்ள மரங்கள். இப்பகுதியில் தாழம்பூவும் வளரும்.

அயல் தாவரங்கள்

வேகமாக வளர்கிறது என்பதற்காக வனத்துறையாலும் வேறு சிலராலும் கடற்கரைகளில் நடப்பட்ட சவுக்கு, வேலிக் கருவை அல்லது சீமைக் கருவை (கருவேலம் மரம் அல்ல) ஆகிய இரண்டும் வெளிநாடுகளில் இருந்து வந்தவை. இவை நமது மண்ணுக்கேற்ற மரங்கள் அல்ல. நம் பகுதியில் இயல்பாக வளரும் தாவரங்களின் இடத்தை இவை பிடித்துக் கொள்கின்றன. இவற்றால் நிறைய சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தண்ணீரை மிக அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டவை இந்தத் தாவரங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x