Published : 23 Oct 2015 11:41 AM
Last Updated : 23 Oct 2015 11:41 AM

சினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிராண்டோ!

மனம் என்பது நினைவுகளின் கிடங்கு. மீண்டும் மீண்டும் நினைவுகளை நமது மனம் கிளறி வெளியில் எடுத்துக்கொண்டு வருகிறது. ஆகவே, ஒரு நடிகர், எந்தப் பொருளின்மூலம் எத்தகைய உணர்ச்சி வெளிப்படுகிறது என்பதை ‘சென்ஸ் மெமரி’(Sense memory) பயிற்சியின் தெரிந்துகொண்டு பலன் பெற முடியும்.

குறிப்பிட்ட காட்சியில் எத்தகைய உணர்ச்சி வெளிப்பட வேண்டுமோ அந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் பொருளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினாலே போதும் என்பதைத் தனது பயிற்சிகளின் மூலம் ஸ்ட்ராஸ்பெர்க் வரையறுத்துக் கூறிச்சென்றிருக்கிறார். இந்த ‘சென்ஸ் மெமரி’ பயிற்சியில் நான்கு முக்கியமான உத்திகள் இருக்கின்றன. அவற்றில் ‘த பிரேக்ஃபாஸ்ட் டிரிங்க்’ (The Breakfast Drink) பயிற்சியைக் கடந்த வாரம் பார்த்தோம். இனி கண்ணாடி முன் (The Mirror), காலணிகளும் காலுறைகளும் (Shoes and Socks), பிறந்த மேனியாக (Getting Undressed) ஆகிய பயிற்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கண்ணாடி முன் (The Mirror)

கண்ணாடியின் முன்னர் நின்றுகொண்டு, அதில் தெரியும் நமது பிம்பத்தின்மீது முழு கவனம் செலுத்துவதுதான் இந்தப் பயிற்சி. நாம் ஏற்கெனவே பார்த்த பாப்கார்ன் நினைவிருக்கிறதா? அப்படி எந்தப் பொருளின் மீது கவனம் செலுத்துகிறோமோ, அப்பொருள் ‘புலனுணர்வுப் பொருள்’ (sensory object) என்று ஸ்ட்ராஸ்பெர்க்கால் அழைக்கப்படுகிறது.

பாப்கார்ன் ஒரு புலனுணர்வுப் பொருள். அதேபோல் ஃபில்டர் காஃபி என்பதும் ஒரு புலனுணர்வுப் பொருள்தான். அந்த வகையில் பார்த்தால், கண்ணாடியில் தெரியும் நமது பிம்பமும் ஒரு புலனுணர்வுப் பொருள். இப்படி முதலில் கண்ணாடி முன்னர் நின்றுகொண்டு நடிகரின் பிம்பத்தின்மீது கவனத்தைக் குவிப்பதன்மூலம் அவரது பிம்பத்தின் புலனுணர்வுப் பொருளை அவரால் உருவாக்க முடிய வேண்டும்.

கண்ணாடியின் முன் நிற்கும்போது தேமேயென்று நிற்கிறாரா அல்லது அவரது பிம்பத்தை அவரால் நன்றாகக் கவனிக்க முடிகிறதா? கண்ணாடி இல்லாமலும் அவரால் அவரது பிம்பத்தை உருவாக்க முடிய வேண்டும். அதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம்.

காரணம்? இப்படி பிம்பத்தின் புலனுணர்வுப் பொருளை உருவாக்க முடிந்துவிட்டால், அந்த நடிகரின் உணர்ச்சிகளை எளிதில் அவரால் வெளிப்படுத்த முடிந்துவிடும் என்கிறது உளவியல். அப்படி உருவாக்க முடியாவிடில், அந்த நடிகரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மிகக் கடினம்.



காலணிகளும் காலுறைகளும் (Shoes and Socks)

இந்தப் பயிற்சி என்னவென்று புரிந்திருக்கும். காலணிகளையும் காலுறைகளையும் மனதில் உருவாக்கிக்கொள்ளுதல். காலணிகளும் காலுறைகளும் இல்லாமலேயே அவற்றை அணியும் அனுபவத்தை வாழ்ந்துபார்த்தல்.



பிறந்த மேனியாக (Getting Undressed)

இது, நடிகரின் உள்ளாடைகளையும், ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டு, பிறந்த மேனியாக நிற்பதையும் மனதில் உருவாக்கிப் பார்ப்பது. இந்தப் பயிற்சியைச் செய்யும்போது ஒரு நடிகர் கூச்சமோ பயமோ வெட்கமோ அடையக் கூடாது. முதலில் உள்ளாடைகளை அவிழ்த்துவிட்டு, பிறந்தமேனியாக நிற்பதைப் பயிற்சி செய்துவிட்டு, அதன்பின் அந்த உணர்ச்சிகளை மனதில் உருவாக்கிப் பார்க்க வேண்டும்.

இத்துடன் புலனுணர்வுப் பொருளின் நான்கு முக்கியமான கூறுகள் முடிகின்றன. மெதட் ஆக்டிங்கில் அடுத்த முக்கியமான விஷயம் உணர்ச்சிபூர்வ நினைவுமீட்டல் (Emotional memory).



உணர்ச்சிபூர்வ நினைவு மீட்டல் (Emotional Memory)

இதில், நடிகர் என்பவர் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிபூர்வமான நிலையை வெளிப்படுத்த முயலுவார். அப்படிச் செய்யும்போது, நாம் பார்த்த புலனுணர்வுப் பொருளை உபயோகித்தே இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவார். அதாவது, சோகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அவரது வாழ்வில் எப்போதாவது மிகுந்த சோகத்துடன் அவர் இருந்திருந்தால், அந்த நாளில் எதை முகர்ந்தார், எதைத் தொட்டுப் பார்த்தார், எதைப் பார்த்தார் என்பதை யோசித்து, அந்த எண்ணங்களின் மூலமாக தனது வாழ்க்கையில் அனுபவித்த சோகத்தை நினைவுகூர்ந்து, மீட்டெடுத்து அதனை மறுபடி வாழ்வார்.

இது ஓரளவு ஆபத்தான பயிற்சியும் கூட என்பதைத் தொடக்கத்தில் பார்த்தோம் (தாய் இழந்த சோகத்தை வெளிப்படுத்திய கதாபாத்திரம், காட்சி முடிந்த பின்னரும் மேடையிலேயே அழுதுகொண்டே இருந்தது).



கற்பனைச் சித்தரிப்பு – விலங்குகள் போன்று பயிற்சி (Characterization - The animal exercise)

ஸ்ட்ராஸ்பெர்க்கின் வகுப்புகளில், விலங்குகளைப் போன்று நான்கு கால்களில் நடிகர்கள் நடித்துப் பார்ப்பது சகஜம். ஒரு நடிகர் இப்படி விலங்காக மாறி நடப்பதை இன்னொரு நடிகர் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வார் - அந்த விலங்கு எப்படி நடக்கிறது, எப்படி வெளியுலகத்தோடு அதன் ஐம்புலன்களையும் உபயோகப்படுத்தித் தொடர்பு கொள்கிறது என்பதையெல்லாம். இந்த விலங்கு ஐம்புலன்களையும் உபயோகிக்கும்போது, அதற்கேற்ற புலன்சார்ந்த நினைவை அந்த நடிகர்கள் உபயோகிப்பார்கள்.

இப்படிச் செய்யச் செய்ய, சிறுகச் சிறுக அந்த நடிகர் இரண்டு கால்களில் நிற்க ஆரம்பித்து, அந்த விலங்கை அவரது மனிதக் கதாபாத்திரத்தோடு தொடர்புப்படுத்திக்கொள்வார். அப்படி அந்த விலங்கு மனிதனாக மாறும்போது, அதன் விலங்கு உணர்ச்சிகள் மறையாமல், மிக நுண்ணிய வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும். இதன்மூலம், கதாப்பாத்திரத்துக்குத் தேவையான நுண்ணிய உணர்ச்சிகள் தவறாமல் வெளிப்படும். கூடவே, கூச்சம் போய்விடும். எப்படி வேண்டுமானாலும் நடிக்க இயலும். நடிகர் என்பவர் வளைந்துகொடுக்கும் ஒரு பாத்திரம்தானே?

‘எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்’ (A Streetcar named desire) படத்தில் நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்துக்கான இரக்கமற்ற தன்மையை, மனிதக்குரங்கு போல நடித்துப் பார்ப்பதன்மூலம் வரவழைத்துக்கொண்டார் மார்லன் பிராண்டோ. ‘ஏஸ் வென்சுரா’ (Ace Ventura) படத்தில் நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழியை, புறா போலவே தத்ரூபமாக நடித்துப் பார்த்து வரவழைத்துக்கொண்டார் ஜிம் கேரி.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ‘நடிப்பு என்பதே செயற்கையான ஒன்றை வரவழைப்பதுதானே? இதில் ஏன் இப்படித் தலைவேதனை தரக்கூடிய பயிற்சிகள்? பேசாமல் இவையெல்லாம் இல்லாமலேயே நன்றாக நடித்தால் என்ன?’

இதுதான் லாரன்ஸ் ஒலிவியரின் முடிவு. அவர் இவையெல்லாம் இல்லாமல்தான் இயற்கையாகவே பெரியதொரு நடிகராக இருந்தார். மட்டுமில்லாமல், மெதட் ஆக்டிங் என்பதையே சமயம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துவந்தார். ஆனால், லாரன்ஸ் ஒலிவியர் போன்ற நடிகர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றுவார்கள் என்பதை மறவாதீர்கள். நாமெல்லாம் சாதாரண மக்கள். நமக்கு ஒலிவியரின் இடத்தை அடைய உதவுபவையே இந்தப் பயிற்சிகள்.

இதுபோல் மெதட் ஆக்டிங் முறையில் பயிற்சிகள் பலவிதமான பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு நடிகர் உருவாவதில் தலையாய பயிற்சிகளாக உலக அளவில் இவை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுதவிர, இயக்கம், சீன்களை கவனிப்பது, நடிகர்களைத் தேர்வு செய்வது, ஒளியமைப்பு, இசை, ஒத்திகை பார்ப்பது ஆகிய பல்வேறு விஷயங்களை ஸ்ட்ராஸ்பெர்க் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். அவற்றை எழுதப் புகுந்தால் இந்தக் கட்டுரை போரடித்துவிடலாம். ஆகவே மெதட் ஆக்டிங் பற்றிய முக்கியமான குறிப்புகளை இத்துடன் முடித்துக்கொண்டு அடுத்து, அசரவைக்கும் மேலும் பல ரசனையான விஷயங்களுக்குத் தாவிச் செல்வோம்.

(மெதட் ஆக்டிங் பற்றி எழுத எனக்குத் துணையாக இருந்த புத்தகம் - The Lee Strasberg Notes)
தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x