Published : 21 Dec 2020 10:14 am

Updated : 02 Mar 2021 21:06 pm

 

Published : 21 Dec 2020 10:14 AM
Last Updated : 02 Mar 2021 09:06 PM

மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போது?

if-change-is-not-now-then-when

கடந்த ஐம்பதாண்டுகால உலக வரலாற்றின் அரசியல், பொருளாதார நிகழ்வுகளைத் தீர்மானித்ததில் கச்சா எண்ணெயின் பங்கு முதன்மையானது. கச்சா எண்ணெய்யை மையப்படுத்தி பல அரசியல் பேரங்கள் நடந்துள்ளன; விமானம், கப்பல், கார் என அனைத்து விதமான போக்குவரத்தும் முதன்மையாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களைக் கொண்டு இயங்கிவந்தன. தற்போது இந்தச் சூழல் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகிவருகிறது.

நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிபொருள்களின் அதிதீவிரப் பயன்பாடு கரியமில வாயு வெளியேற்றத்தின் கட்டுப்பாடுகளை மீறிச் சென்றுவிட்ட நிலையில் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு, கடல்மட்ட உயர்வு, புயல், வெள்ளம் என காலநிலையில் பெரும் மாற்றங்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதை தடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. விளைவாக, தற்போது உலகம் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து மாற்று ஆற்றலை நோக்கி நகர்ந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. சூரிய ஆற்றல், காற்றாலை என மாற்று எரிசக்தி உருவாக்கத் தொழில்நுட்பங்களில் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.


தொழில்புரட்சிக்கு முன்பு வரை எரிசக்திக்கான தேவை பெரிய அளவில் இல்லை. விலங்குகளைக்கொண்டு மனிதர்கள் தங்களுக்கான வேலைகளைச் செய்துகொண்டனர். நீராவி இயந்திரம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தொழில்புரட்சியின் விளைவாக உருவான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தில் அதிகரிக்கத் தொடங்கின. தொழிற்சாலைகள், வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவும் தொடர்ந்து அதிகரித்தது. நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டிவிட்ட கரியமில வாயு வெளியேற்றம் தற்காலத்தில் காலநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இது தொடர்ந்தால் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவை விரைவில் எட்டும்; மேலும் இது கட்டுப்படுத்தப்படாவிடில் இந்நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்; நன்னீர் பற்றாக்குறை ஏற்படும்; வெப்ப அலை தீவிரமடையும்; வெள்ளம், புயல்கள் தொடர்ச்சியாக ஏற்படும். இந்நிலையில் இனியும் நாம் காலநிலை மாற்றத்தை தீவிரமாக அணுகாவிட்டாலும் உலகம் மிகப் பெரும் பேரழிவைச் சந்திக்கும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துவந்ததன் தொடர்ச்சியாக 2015-ம் ஆண்டு பாரீஸில் காலநிலை தொடர்பாக 195 நாடுகள் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றுள்ளன. தற்போது நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தேர்தல் உறுதிமொழிகளில் முக்கியமானது. தேர்தலில் வென்று அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் 2050-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவை கார்பன் வெளியேற்றம் இல்லாதாக நாடாக மாற்றுவது என்பதை தேர்தல் உறுதிமொழியாக அறிவித்தார். ஏனைய உலக நாடுகளும் அடுத்த முப்பது ஆண்டுகளில் கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. இவ்வாறாக கச்சா எண்ணெயிலிருந்து பசுமை ஆற்றலை நோக்கிய பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.

மாற்றம் புதிதல்ல

கடந்த நானூறு ஆண்டு காலகட்டத்தில் எரிஆற்றல் பயன்பாடு சூழலுக்கு ஏற்ப மாற்றம் அடைந்தே வந்திருக்கிறது. தொழில்புரட்சியின் ஆரம்ப காலம் வரையில் விறகுகளே முதன்மையான எரிபொருள்களாக இருந்தன. தொழிற்சாலைகளின் எண்ணிக்கை பெருகவும் எரிபொருளுக்கான தேவை அதிகரித்தது. விறகுகளைக் கொண்டு அதை ஈடுகட்டமுடியாத நிலையில், உலகம் நிலக்கரியை நோக்கி நகர்ந்தது. அதன்பிறகு தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் புதிய பரிணாமம் எடுக்கவும் அதற்கேற்ற எரிஆற்றல் தேவைப்பட்டது.

விளைவாக, பெட்ரோல், டீசல் பயன்பாட்டுக்கு வந்தன. மேற்கூறிய மாற்றங்களும் நாம் தற்போது எதிர்கொண்டுவரும் மாற்றத்துக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. முந்தைய மாற்றங்கள் அனைத்தும், மூலப் பொருள்கள் தீர்ந்துபோவைதை ஒட்டி நிகழ்ந்தவை. ஆனால் தற்போதைய நிகழ்வு, கச்சா எண்ணெய் தீர்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கும் மேலாக, காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை காரணமாகக்கொண்டு நிகழ்கிறது.

பெட்ரோல், டீசல் பயன்பாட்டிலிருந்து பசுமை ஆற்றலை நோக்கிய தற்போதைய மாற்றம் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ஆதிக்க ரீதியாகவும் பெரும் மாறுதல்களைக் கொண்டுவர இருக்கிறது. அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதியில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. வளைகுடா நாடுகளின் செல்வம் அவற்றின் எண்ணெய் வளமே. ஆனால் உலகம் மாற்றும் எரிசக்தியை நோக்கி நகரும் சூழல் அந்நாடுகளை நெருக்கடிக்குத் தள்ளி இருக்கிறது.

சவூதியின் வருவாயில் 70 சதவீதம் எண்ணெய் ஏற்றுமதி மூலம் வருகிறது. இந்தச் சூழலில்தான் சவூதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், 2030-க்குள் சவூதியின் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். தனியார் துறைகள் அதிகரித்தல், எண்ணெய் சாராமல் பிற துறைகளில் முதலீடுகளை அதிகரித்து பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்தல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடு ரஷ்யா. அதன் பொருளாதாரக் கட்டமைப்பு எண்ணெய், இயற்கை எரிவாயு, ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக ரஷ்யா எண்ணெய் வளத்தை முற்றிலும் நம்பி இருப்பதிலிருந்து விலகி, பல்வேறு தளங்களில் இயங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் அவற்றால் அந்த இலக்கை எட்டமுடியவில்லை. இந்தச் சூழலில், தற்போது நிகழ்ந்துவரும் மாற்றத்தால் ரஷ்யாவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

எதிர்காலத் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளில் அதிகம் முதலீடு செய்யக்கூடிய நாடு அமெரிக்காவில் தற்போதைய மாற்றம் பெரிய அளவிலான பின்னடவை ஏற்படுத்தாது. எனவே தற்போதைய மாற்றத்தைத் தன் தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அது எதிர்கொண்டுவிடும். எடுத்துக்காட்டாக, 2008 வரையில் அமெரிக்கா அதன் எண்ணெய் தேவைக்கு பிற நாடுகளையே எதிர்நோக்கி இருந்தது. தற்போது எண்ணெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் அமெரிக்கா முதன்மையாக விளங்குகிறது.

டிராகனின் எழுச்சி

தற்போதைய மாற்றங்களால் பல லாபங்களைப் பெறவிருக்கும் ஒரு நாடு: சீனா. உலக நாடுகள் தற்போதுதான் பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால். சீனா சில தசாப்தங்களுக்கு முன்பே இதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. தற்போது சீனாவில் தயாராகும் 75 சதவீத வாகனங்கள் பேட்டரியில் இயங்கக்கூடியவை. பேட்டரி தயாரிப்புக்குத் தேவையான லித்தியம் சீனாவிடம் அதிகம் உள்ளது. உலகின் பலநாடுகளில் லித்தியம் எடுக்கப்பட்டாலும் உலகளவிய உற்பத்தியில் 80 சதவீதம் சீனாவிடம்தான் இருக்கிறது. இதுமட்டுமல்ல, பல நாடுகளில் பயன்படுத்தப்படும் சூரியத் தகடுகளின் முக்கிய பாகங்கள் சீனாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட சூரியத் தகடு பேனல் உற்பத்தியில் சீனா 70 சதவீதம் பங்கு வகிக்கிறது.

சீனா இந்த இடத்தை அடைய வேறு சில காரணங்கள் இருக்கின்றன. எண்ணெய் உற்பத்தில் ஐந்தாவது பெரிய நாடாக சீனா இருந்தாலும், அந்நாட்டின் எண்ணெய் தேவையில் 75 சதவீதம் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்கா, தென் கொரியா நாடுகளுடன் மோதல் போக்கில் உள்ள சீனா, தன்னாட்டுக்கு வரும் எண்ணெய் அமெரிக்காவால் எந்த நேரத்திலும் தடுத்து நிறுத்தப்படலாம் என்ற அச்சுறுத்தலை எப்போதும் எதிர்நோக்கி இருந்தது. எண்ணெய்த் தேவைக்கு பிற நாட்டை நம்பி
இருப்பதை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்த சீனா, மாற்று எரிசக்தி கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியது.

அதன் நீட்சியாக பேட்டரி வாகனப் பயன்பாட்டில் முதன்மை வகிக்கிறது. அரசியல் ரீதியாக பலப்படுவதைத் தாண்டி சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திலும் சீனா இருக்கிறது. அதிகமாக கரியமில வாயுவை வெளியேற்றும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. மொத்த உலக நாடுகள் வெளியேற்றும் கார்பன் அளவில் 25 சதவீதம் வரை சீனாவிலிருந்து வெளியேற்றப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்க இருக்கிறது. அரசியல் மற்றும் சூழலியல் நிர்பந்தம் காரணமாக மாற்று எரிஆற்றலுக்கான தொழில்நுட்பங்களின் உருவாக்கத்தில் சீனா முதன்மை இடத்தை அடைந்துள்ளது. எப்படி உலக நாடுகள் பெட்ரோல், டீசல் தேவைக்கு வளைகுடா நாடுகளை எதிர்நோக்கி இருக்கின்றனோ, அதுபோலவே பேட்டரித் தயாரிப்புக்குச் சீனாவை எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழல் உருவாகி வருகிறது.

விரையும் புதுசக்தி

உலகின் மொத்த பொருளாதாரத்தில் எரிஆற்றல் மட்டும் 87 டிரில்லியன் டாலர் பங்கு வகிக்கிறது. உலகின் மொத்த எரிஆற்றல் பயன்பாட்டில் 84 சதவீதம் புதை படிவ எரிபொருள்களில் இருந்து பெறப்பட்டு வருகிறது. மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மேற்சொன்ன மாற்றங்கள் எந்தளவுக்குச் சாத்தியம் என்பதே இதிலுள்ள சவால்!

நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பசுமை எரிஆற்றலை நோக்கி நகரத் தொடங்கி விட்டன. 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பசுமை எரி ஆற்றல் தொடர்புடைய முதலீடு 70 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. தற்சமயம் ஆண்டுக்கு 1.2 டிரில்லியன் டாலர் அளவில் பசுமை ஆற்றல் கட்டமைப்புக்குச் செலவிடப்பட்டுவருகிறது. பல வாகன நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாகவே பேட்டரி முறைக்கு மாறிவிட்டன. இந்தியாவில்கூட 2030-க்குப் பிறகு விற்பனையாகும் இருசக்கர வாகனங்கள் பேட்டரியில் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கரோனா காலகட்டம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் சில வாய்ப்புகளைக் காட்டித் தந்துள்ளது.

மார்ச் மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம்வரையில் உலக நாடுகள் பலவற்றில் தீவிரமான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது; போக்குவரத்து முடங்கியது, தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் கார்பன் வெளியேற்றம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடிவைத்திருக்க முடியாது. ஆனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியும். இந்தக் கரோனா காலத்தில் அலுவலக கலந்தாலோசனைக் கூட்டங்கள் இணையம் வழியே நடைபெற்று வருகின்றன. இதனால் அதற்கென்றான பயணத்துக்கான அவசியமின்மையை உலகம் உணர்ந்து இருக்கிறது. அதைபோல் பல்வேறு துறைகளில் வீட்டிலிருந்து பணிபுரிதல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அந்த நடைமுறை நிரந்த்தரமாக்கப்படும்பட்சத்தில் போக்குவரத்து வழியிலான கார்பன் வெளியேற்றம் சற்றேனும் குறைக்கப்படும்.

காலநிலைப் பேரழிவு

விறகிலிருந்து நிலக்கரிக்கும், நிலக்கரியிலிருந்து கச்சா எண்ணெய்க்குமான மாற்றம் உடனடியாக நிகழவில்லை. விறகிலிருந்து நிலக்கரிக்கு மாற சுமார் இருநூறு ஆண்டுகள் ஆனது. அதுபோலவே, 1859-ம் ஆண்டே மேற்கு பென்சில்வேனியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டாலும், 1960-ம் ஆண்டுக்குப் பிறகுதான் உலகம் கச்சா எண்ணெய்யை முதன்மை எரிசக்தியாக பயன்படுத்தத் தொடங்கியது. தற்போது எண்ணெயிலிருந்து பசுமை ஆற்றலுக்கு மாறுவதற்கு காலம் எடுக்கும் என்றாலும் முந்தைய மாற்றங்களைப் போல நீண்ட காலத்தை எடுக்காது.

ஏனென்றால் முந்தைய மாற்றங்களில் அரசியல் ரீதியான நிர்பந்தமும், சூழலியல் ரீதியான நிர்பந்தங்களும் குறைவு. ஆனால் தற்போது அப்படி இல்லை. கால நிலைப் பேரழிவு உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய மாற்றம் வாழ்தலுக்கானது. அதற்கேற்ப கொள்கைகள் உருவாக்கப்படும். எனவே தற்போதைய மாற்றம் உடனடியாக நிகழக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் பசுமை எரிசக்தியை நோக்கிய மாற்றம் இந்நூற்றாண்டின் வரலாற்று மாற்றமாக அமையும்.

தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in


மாற்றம்பொருளாதார நிகழ்வுகள்கச்சா எண்ணெய்அரசியல் பேரங்கள்நிலக்கரிபெட்ரோல்டீசல்எரிபொருள்கள்சூரிய ஆற்றல்காற்றாலைபுவியின் வெப்பநிலைமாற்றம் புதிதல்லடிராகனின் எழுச்சிபுதுசக்திகாலநிலைப் பேரழிவு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x